Pages

Tuesday, December 3, 2013

கொழுப்பு கூடி போச்சா? பூண்டை பயன்படுத்துங்க



 ஆயுர்வேத மருத்துவத்தில் பூண்டின் மருத்துவ குணங்கள் குறித்து மிகவும் சிறப்பாக கூறப்படுகின்றது. உடலுக்கு பூண்டு மிகவும் சிறந்தது. அது உடலுக்கு எவ்வித திங்கும் விளைவிப்பதில்லை. உடலை புத்துணர்வுடன் வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் பூண்டு உதவுகிறது. உடம்பிலுள்ள சிறு கட்டிகள், முக பருகள், படை உள்ளிட்ட சரும நோய்களின் மீது பூண்டை அரைத்து தடவினால் நல்ல குணம் கிடைக்கும்.

அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்களுக்கு பூண்டு அருமருந்தாக உள்ளது. பூண்டை உணவு வகைகளுடன் உண்ணும்போது அது உடலில் உள்ள ரத்த நாளங்களை விரிவுபடுத்துவதுடன், அடைப்புகளையும் நீக்கி விடுகிறது. இதனால், சீரான ரத்த ஓட்டம் ஏற்பட்டு மாரடைப்பு போன்ற நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது.உயர் ரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

தினந்தோறும் ஒன்று முதல் மூன்று பூண்டு பற்களை உண்டு வந்தால், இதயநோய் வருவதற்கே வாய்ப்பில்லை. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை பூண்டு அகற்றி விடுகிறது. பொதுவாக, ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போகும்போது  மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே, இதய நோயாளிகளுக்கு ரத்தத்தின் அடர்த்தியை குறைப்பதற்காக பூண்டை பயன்படுத்துகின்றனர். இதனால் இயற்கையாகவே ரத்தத்தின் அடர்நிலை குறைந்து, சீரான ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. எனவே, பூண்டு உண்பதால் எவ்வித பக்க விளைவும் இல்லாமல் நோய்கள் குணமாகின்றன.

காது மந்தமாக இருப்பவர்களுக்கு தொடர்ந்து பூண்டு சாறினை காதில் ஊற்றி வரலாம். பூண்டு சாறினை வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும் இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் கொடுத்துவர மெல்ல குணம் பெறலாம். இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகள் சில துளிகள் உள்ளுக்கு சாப்பிட கொடுத்தால் எளிதில் குணம் கிடைக்கும். பூண்டை பாலில்  வேகவைத்து சாப்பிட்டால் கொழுப்பு, ரத்தக் கொதிப்பு, டென்ஷன் போன்ற பாதிப்புள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.  

பூண்டில் பலவிதமான சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம் சத்துதான். எனவே பூண்டை அதிகமாக  சமையலில் பயன்படுத்துவதன் மூலமாக நாம் நமது எலும்புக்கு வருகின்ற கேடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பூண்டை வருத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது. பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து  தேமல் உள்ள இடங்களில் போட்டால் தேமல் காணாமல் போய்விடும். சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி தக்காளி, உப்பு, தண்ணீர் தெளிக்க வைத்து சூப் கொடுங்கள் சளி நீங்கும்.

வயிற்று பிரச்னை தீர்க்கும் புதினா


புதினா கீரையை அடிக்கடி உண்டு வந்தால், ரத்தம் விருந்தி அடையும். ஏதாவது ஒரு காரணத்தால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இருந்தால், புதினா கீரையின் துவையல் நல்ல பலன் அளிக்கும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை குணமாக புதினா கஷாயம் நல்ல மருந்து. 

கர்ப்பிணிகளுக்கு வாந்தி, குமட்டல் வரும். சிலருக்கு இது பிரசவம் ஆகும் வரை நீடிக்கும்.இதை கட்டுப்படுத்த புதினா கீரை நல்ல மருந்து. புதினா கீரையை சிறிதளவு எடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மூன்று மணி நேரம் ஊறவைத்து தெளிந்த நீரை பருகி வந்தால் வாந்தி, வாயு, வயிற்றுப்போக்கு நோய்கள் குணமாகும்.

புதினா கீரையை துவையல் அல்லது பிற உணவுடன் சமைத்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் மாதவிலக்கு சீர்படும். இக்கீரையை சூப் செய்துக் குடித்து வந்தால் இதய நோய்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். தொண்டைப்புண் உள்ளவர்களுக்கு இக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் நல்ல குணம் தெரியும்.

புதினா கீரையை பற்பொடி தயார் செய்து தினமும் பல் தேய்த்தால் பல்வலி உள்ளிட்ட  நோய்கள் நீங்கும். மேற்கண்ட மருத்துவ முறைகளை அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப தகுந்த மருத்துவரின் ஆலோசனை பெற்று மேற்கொள்ளுவது நல்லது.

முடி உதிர்வதை தடுக்கும் நெல்லிக்கனி



நெல்லிக்கனியை தினமும் பயன்படுத்தினால் உடலுக்கு மிகவும் நல்லது. வசந்த காலத்தில் நெல்லிக்காய் அனைத்து இடங்களிலும் கிடைக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் 'சி'  சத்து நிறைந்து உள்ளது. நமது உடலில் தோல் பகுதியில் நோய் எதுவும் ஏற்படாமல் இருக்கு, வைட்டமின் சி சத்து அவசியம். 

அது நெல்லிக்கையில் அதிகளவு உள்ளது. சிலருக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். இது வைட்டமின் சி சத்து குறைவால் ஏற்படுகிறது. இக்குறை உள்ளவர்கள் நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டால் ஜாலதோஷத்திலிருந்து தப்பலாம்.

இது தவிர நெல்லிக்கையில் பாஸ்பரஸ், புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு, மாவுசத்து, நார்ச்சத்து, வைட்டமின் 'ஏ' போன்ற சத்துக்களும் உள்ளன. நெல்லிக்காய் உடலுக்கு குளிர்ச்சியானது. இதை உண்பதால் சிறுநீர் நன்றாக பிரியும்.

பெண்களுக்கு கர்ப்பபை நோய்கள் குணமாகும். ரத்தம் தூய்மை அடையும். நெல்லிக்காயை உலர வைத்தாலும், வேக வைத்தாலும், குளிர வைத்தாலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்து குறையாது. 

பொதுவாக நெல்லிக்காயை வாங்கியவுடன் அதை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு பத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். சிறிது மஞ்சள் மற்றும் உப்பு போட்டு 5 அல்லது 1௦ நிமிடங்கள் கழித்து ஒரு நெல்லிக்காயை எடுத்து அழுத்திப் பார்த்தால் உடையும் அளவு இருக்கும். அதை உடனே இறக்கி வைத்து ஒரு பாட்டிலில் நீரோடு எடுத்து வைத்துக் கொண்டால் சாம்பார் சாதம், ரசம் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

தேவையான வெந்த நெல்லிக்காயை உடைத்து விதை நீக்கி ஊறுகாய் போடலாம். தேங்காய், பச்சை மிளகாய், வெந்த நெல்லிக்காய் ஆகியவற்றை புளிக்காத தயிரில் சேர்த்து நெல்லிக்காய் பச்சடி தயார் செய்யலாம். நெல்லிக்காயை உப்பு எதுவும் போடாமல் வேக வைத்து விதை நீக்கி நான்கு மசித்துக் கொள்ள வேண்டும். 

ஒரு கிலோ நெல்லிக்காய்க்கு அரை கிலோ சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கிளற வேண்டும். சிறிது சிட்ரிக் அமிலம் சேர்த்து லேகியம் போல வரும் போது இறக்கி வெண்ணிலா எசன்ஸ் அல்லது ரோஸ்மில்க் எசன்ஸ்அல்லது ஸ்ட்ராபெர்ரி ஏதாவது ஒன்றை ஒரு அரைக்கரண்டி சேர்த்து சுடு ஆறியதும், காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு சப்பாத்தி, பிரட், தோசை, இட்லி போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ளலாம். இது உடம்புக்கு மிகவும் நல்லது.

நெல்லிக்காயை நிறைய வாங்கி வைத்து கொண்டு அதை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு தினமும் சிறிது தலையில் தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும். தலை குளிரும். கூந்தல் கருகருவென வளரும், முடிகள் வலுவாகும். பொடுகு தொந்தரவு, முடிஉதிர்தல் குறையும்.

Monday, December 2, 2013

ரத்தம் சுத்தமாக்கும் 'திராட்சை'

திராட்சை



திராட்சை பழத்தில் இருந்து மருந்து ஒயின், கிராப் சீட் எண்ணை, சாக்லேட், ஜூஸ் என பலவற்றை தயாரிக்கலாம். உடலுக்கு தேவையான தாதுக்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் வழங்கி, ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. திராட்சை பழம் உடலுக்கு மிக நல்லது. தினமும் உண்டு வந்தால் உடல் இளமையாகவும், அழகாகவும்  இருக்கும்.

உடல் வறட்சியும்  பித்தமும் நீங்கும். ரத்தம் தூய்மை பெரும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். பித்தத்தால் ஏற்படும் வாந்தி, தலை சுற்றல், ஒற்றை தலைவலி ஆகிய பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வாக அமையும். திராட்சை பழத்துடன் மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், நாக்கு வறட்சி நீங்கும். 

உடல் அசதி, பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்தை தணிக்க திராட்சை  பழம் எற்றது திராட்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டால் மாதவிடாய் கோளாறு நீங்கும். வயிற்று புண், வாய்ப்புண் ஆறும். கண் பார்வைக்கு நல்லது. உடலில் தேவை யற்ற கொழுப்புக்கள் நீங்கும். இளம் பெண்களுக்கு ஏற்படும் முகப்பரு பிரச்சனைகளுக்கு திராட்சை சாறு எடுத்து தடவினால் விரைவில் பரு கொட்டி விடும்.

உலர் திராட்சை


உலர் திராட்சையில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12, அமினோ அமிலம், இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து சத்துக்களும் ௨ள்ளன.

இதில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதி பெரும். பற்கள் வலுப் பெரும். குழந்தைகளுக்கு தேகாபூஷ்டி வேண்டும் என்றால் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் பாலில் போட்டு காய்ச்சி அருந்தச்செய்யுங்கள். இதனால்  மலச்சிக்கல் பிரச்னை தீரும். உலர் திராட்சை தாமிர சத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; எலும்பு மஜ்ஜை வலுப்பெறும்.

அறிவாற்றல் தரும் உணவு வகைகள்

 நல்ல ஆரோக்கியமான குழந்தைகளால் மட்டுமே நல்ல விதமாக படித்து முன்னேற முடியும். குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்தால் மட்டும் போதாது. அவர்களின் அறிவு வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் காண வேண்டும்.

பால் மற்றும் பால் பொருட்களில் அறிவாற்றலை பெருக்கும் புரோடீன், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் 'டி' உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது நரம்பு மண்டலத்தை நன்கு இயக்குவதோடு, மூளை செல்களையும் நன்கு செயல்பட வைக்கிறது. இதனால் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வளர்ச்சியடைய செய்வதோடு, அவர்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
மூளைக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்குவதில் ஸ்ட்ராபெர்ரி, செச்ரி, அவுரி நெல்லி, நாவல் பழங்கள் சிறந்தவை. இவற்றில் ஆண்டி ஆக்சிடென்ட்  மற்றும் உடலுக்கு தேவையான வைட்டமின் 'சி' சத்து உள்ளது. இதில் உள்ள ஒமேகா 3 சத்து, மூளையின் வெளிப்பகுதியை பாதுகாக்கிறது.


மூளையில் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் செல்களில் கோலைன் சத்து செல் முக்கியமானது.  இது முட்டையில் அதிகம் உள்ளது. இதை குழந்தைகள் உண்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளை களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும்.
வைட்டமின் 'பி' மற்றும் குளுக்கோஸ் அதிகமுள்ள ஒட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் உண்பதால் மூளை ஆரோக்கியமாக இருக்கும். இதோடு தினமும் ஏதாவது ஒரு தானியத்தை சேர்த்துக் கொண்டால் ரத்த ஓட்டத்தை சிர் செய்து மூளையை சுறுசுறுப்பாக வைக்கும்.

மீன்களில் ஒமேகா 3 சத்து அதிகளவு உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மற்ற உணவு பொருட்களில் இருப்பதைவிட மீன்களில் அறிவு கூர்மைக்கு தேவையான சத்து அதிகளவு உள்ளது. இது தவிர காய்கறி, கீரை, கேரட், பீன்ஸ் போன்றவையும் குழந்தைகளின் அறிவுகூர்மையை அதிகரிக்கும்.

Sunday, December 1, 2013

வெங்காய சமோசா

மாலை நேரத்து மழை  குளிரில் சுடச்சுட ஏதாவது சாப்பிட கிடைத்தால் உள்ளே தள்ளலாம் என தோன்றுகிறதா....? சாதாரண பஜ்ஜி, வடை, போண்டா போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக வெங்காய சமோசா செய்து சாப்பிட்டு பார்க்கலாமா?

 தேவையான  பொருட்கள்:

 முதலில் வெங்காய மசாலாவை தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
               * மைதா மாவு - கால் கிலோ
               * எண்ணெய், உப்பு -தேவையான அளவு
               * அரை கிலோ பெரிய வெங்காயம்
               * ஐந்து பச்சை மிளகாய்
               * சிறிதளவு கொத்தமல்லி
               * கறிவேப்பிலை
               * ஒரு ஸ்பூன் சோம்பு
               * காரத்துக்கேற்ப மிளகாய் தூள்
               * சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும்
               * தேவையான அளவு உப்பு


செய்முறை:

முதலில் பச்சை மிளகாய்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை,கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி, தனியாக வைத்துக் கொள்ளவும் உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து, பின் இதனுடன் தண்ணீர் சேர்த்து பூரி மாவு போல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.

ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் மெல்லிதாக தேய்த்து, அதன் மேல் மாவை தூவவும். இன்னொரு உருண்டையை எடுத்து இதே போல் தேய்த்து அதன் மீது வைத்து, மறுபடியும் நன்கு மெல்லிதாக தேய்க்கவும்.

இதனை எண்ணெய் ஊற்றாத தோசைக்கல்லில்  போட்டு. இரு புறமும் திருப்பிப் போட்டு தனியே எடுத்து விடவும். பின் கத்தியால் நீளவாக்கில் வெட்டி வைத்து கொள்ளவும்.

கடாயில் அளவாக எண்ணெய் விட்டு காய்ந்ததும், சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும். பிறகு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.

இப்போது, நீளவாக்கில் வெட்டி வைத்த துண்டை எடுத்து, முக்கோண வடிவில் மடித்து, ஆற வைத்த வெங்காய மசாலாவை உள்ளே வைத்து மூடி விடவும். நன்கு மூடுவதற்கு, மைதா பேஸ்ட் அல்லது தண்ணீரை பயன்படுத்தவும்.

கடாயில் எண்ணெயை  ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போடவும். பொன்னிறமாக மாறியவுடன், எடுத்து ஆற வைக்கவும். பின் சாஸ் அல்லது புதின தயிர் சட்னியை தொட்டு வாயில் வைத்தால்... ஆகா!


பளீச் முகம் வேண்டுமா?


தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழ சாறு ஒரு ஸ்பூன், கேரட் சாறு ஒரு ஸ்பூன், ஈஸ்டர் தூள் அரை ஸ்பூன், இவை எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விட முகம் பளபளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு  அல்லது பால்  ஏடு எடுத்து கால்  ஸ்பூன் மஞ்சள் கலந்து பூசி, நல்ல மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கி முகம் பளிச்சிடும்.

ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் / பாதாம்பருப்பு, எண்ணெய் ஒரு ஸ்பூன் என எல்லாவற்றையும் கலந்து, நன்றாக கலக்கி முகத்தில் பூசி மஸாஜ்  செய்து வந்தால் கரும்புள்ளி நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.

இரவு படுக்க போகும் முன்பு புதினா சாறை  முகத்தில் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.