Pages

Thursday, February 26, 2015

டீத்தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: கிட்னியை பாதிக்கும் பயங்கரம்!


tea estate of india க்கான பட முடிவு

டீத்தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: கிட்னியை பாதிக்கும் பயங்கரம்! 
‘‘இப்படியொரு ஆய்வு முடிவை நாங்களே எதிர்பார்க்கவில்லை. இந்திய தேயிலைகளில் கலந்திருக்கும் விஷம், பூச்சிக் கொல்லிகள் மூலம் வந்தது. லட்சக்கணக்கான தேயிலைத் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான அப்பாவி மக்களும் இந்த டீத்தூளால் பாதிக்கப்படுவார்கள்’’ என வருத்தத்தோடு பேசுகிறார்கிரீன்பீஸ்அமைப்பைச் சேர்ந்த அஸ்வினி. உலகளாவிய இந்தச் சுற்றுச்சூழல் அமைப்பின் இந்தியக் கிளையில் பணியாற்றும் அஸ்வினி, இந்தத் தேயிலை ஆய்வுக் குழுவில் ஒருவரும் கூட!

‘‘
இந்தியாவின் டீ தொழில் 175 வருட கால பாரம்பரியம் மிக்கது. இங்கு சுமார் 9.8 லட்ச ஹெக்டேர் நிலத்தில் டீ பயிரிடப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் டீ விளைந்தாலும், முக்கால் வாசி உற்பத்தி அசாம், மேகாலயா உள்ளிட்ட இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில்தான். இங்கேயும் சின்னச் சின்ன தேயிலை விவசாயிகள் என்று பார்த்தால் அவர்கள் வெறும் 26 சதவீதம்தான் இருக்கிறார்கள்.

மற்றபடி பெரும் நிறுவனங்கள்தான் தேயிலை விவசாயத்தில் கோலோச்சியிருக்கின்றன. அப்படிப்பட்ட நிறுவனங்களின் மிகப் பிரபலமான 49 பிராண்டுகளைத் தேர்ந்தெடுத்து நாங்கள் ஆய்வு செய்தோம்.

அசபேட், அசடேமிப்ரிட், ஆந்த்ராக்யுனான், க்ளோதி யானிடின், சைபர்மெத்ரின் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லிகள் அந்த புகழ்பெற்ற பிராண்ட் டீத்தூள்களில் கலந்திருப்பது ஆய்வில் தெரிய வந்தது. இவையெல்லாம் ஒருபோதும் தேயிலையில் பயன்படுத்தவே கூடாது என இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள்!’’ என அதிர வைக்கும் அஸ்வினி, தடையை மீறி இந்தப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத் தப்படுவது எதனால் என்பதையும் விளக்குகிறார்...

‘‘
இந்தியாவில் பூச்சிக்கொல்லிகள் போன்ற ரசாயனங்களைப் பதிவு செய்வதற்கென்றே மத்திய அரசின் அமைப்பு ஒன்று இருக்கிறது. இதை சி..பி.ஆர்.சி என்பார்கள். இதில் இதுவரை 248 வகையான பூச்சிக்கொல்லிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதில் 24 முதல் 34 வகையான பூச்சிக்கொல்லிகளைத்தான் டீக்களில் பயன்படுத்த வேண்டும் என அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு தவிர தேயிலை குறித்த விவகாரங்களுக்காகவே அரசு சார்பாகடீ போர்டுஎன்ற அமைப்பும் இயங்குகிறது. இந்த போர்டும் தேயிலையில் என்னென்ன ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம் என ஒரு லிஸ்ட்டைச் சொல்கிறது. டீயில் நாம் எடுத்துக்கொள்வது இலையைத்தான். தெளிக்கும் பூச்சிக்கொல்லிகள் இலையிலேயே தங்கிவிடும் என்பதால்தான் இப்படிக் கட்டுப்பாடுகள்.

இந்த சி..பி.ஆர்.சி மற்றும் டீ போர்டின் கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலமும் அங்கிருக்கும் விவசாயப் பல்கலைக்கழகங்களின் ஆய்வு வழிகாட்டுதலின் பேரில்தான் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த அனுமதிக்கும். இப்படிப் பார்த்தால் ஒரு டீ விவசாயி இந்த மூன்று அமைப்புகளில் யார் சொல்வதைப் பின்பற்றுவது என்ற குழப்பம் வந்துவிடுகிறது. இந்தக் குழப்பத்தை சாதகமாக்கிக் கொண்டுதான் எல்லா பூச்சிக் கொல்லிகளையும் வரைமுறை இன்றி பயன்படுத்துகிறார்கள்.

 
அது மட்டுமின்றி, தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகளை அனுமதிக்கப்பட்ட மருந்துகளோடு கலந்து காக்டெயில் போலாக்கி தேயிலைச் செடிகளில் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்திருக்கிறது. டீயில் பயன்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லிகளைப் பற்றி தெளிவான கொள்கை ஒன்றை அரசு வகுக்க வேண்டும் என்பதையே இந்தக் குளறுபடிகள் காட்டுகின்றன’’ என்கிறார் அவர்.

இப்படியே இந்திய டீக்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலப்பது தொடர்கதையானால், மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்? அதையும் அஸ்வினியே பட்டியலிட்டார்...‘‘இதெல்லாம் ஸ்லோ பாய்ஸன் போன்றவை. உடனடியாக பாதிப்புகள் தெரியாது. ஆனால், பாதிப்பு ஏற்படுவது உறுதி. உதாரணமாக வயிற்றுவலியில் துவங்கி தோல் நோய்கள், கிட்னி பாதிப்பு, உடல் வளர்ச்சிக் குறைபாடு, கல்லீரல் பிரச்னைகள், தாம்பத்யக் குறைபாடு வரைக்கும் இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிப்பு ஏற்படலாம்.

எங்கள் ஆய்வில் ஒரு பகுதியாக இந்த பாதிப்புகளையும் பட்டியலிட்டிருக்கிறோம். அரசுக்கும், டீ உற்பத்தியாளர்களுக்கும் இதையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். குறிப்பாக விவசாயிகளுக்கு, ‘நான்  பெஸ்டிசைட் மேனேஜ்மென்ட்’... அதாவது, பூச்சிக்கொல்லி இல்லாத முறையில் டீ உற்பத்தி செய்ய அறிவுறுத்தியிருக்கிறோம். ஆந்திராவில் இதைத்தான் பின்பற்றி வருகிறார்கள்.’’

இந்த அறிக்கை வெளியானதுமே கிரீன்பீஸ் அமைப்பு மீது வழக்கு போடப் போவதாக தேயிலை சார்ந்த பல அமைப்புகள் கொதித்துள்ளன. ஆனாலும் சில முன்னணி நிறுவனங்கள், ‘பூச்சிக்கொல்லியின் சுவடே இல்லாத டீத்தூளைத் தருவோம்என உறுதிமொழி எடுத்திருப்பது ஆறுதலான விஷயம்

‘‘
தேயிலைச் செடி வளரும் பருவமான ஏப்ரலில் எங்களது ஆய்வு கண்டுபிடிப்பைச் சரிபார்த்து திருத்திக்கொள்வதாக அவர்களும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். மாற்றம் வரும் என அரசையும் உற்பத்தியாளர்களையும் நம்புவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை!’’  நிதர்சனத்தைச் சொல்லி முடிக்கிறார் அஸ்வினி.இதற்கு புளியங்கொட்டை கலப்பட டீயே பரவாயில்லை போலிருக்கிறதே!