அத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6 - 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி என்பது Ficus Carica எனவும், நாட்டு அத்தி என்பது Racemosa எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.
அத்திப் பழத்தின் சத்துகள்
அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் புரதம்-4 கிராம், கால்ஷியம்-200 மி.கி, இரும்பு-4 மி.கி, வைட்டமின்-100 ஐ.யு, தயாமின்-0.10 மி.கி, கலோரி அளவு-260 ஆகியவை 100 கிராம் அத்திப் பழத்தில் அடங்கியவையாகும். உலர்ந்த அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.
அத்தியின் மருத்துவப் பயன்கள்
அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Anti Oxidants உள்ளன. அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.
அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.
அத்திப் பழம் சீரண சக்தியை தூண்டும். தினசரி சாப்பிட்டு வர ஆரோக்கியம் பெருகும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற உஷ்ண உபாதைகள் அகலும். அத்திப் பழம் உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது. பெண்களின் வெள்ளை படுதலையும் போக்கிடும். நாட்டு அத்தியின் பாலை, மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும். உபாதைகள் குறையும். அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.
No comments:
Post a Comment