Pages

Sunday, June 15, 2014

பாரம்பரிய அழகுக் குறிப்புகளைப் பின்பற்றுங்கள்!

பாரம்பரிய அழகுக் குறிப்பு
சீயக்காய் தேய்த்துக் குளிப்பது, விளக்கெண்ணெயைக் கண்களில் விட்டுக் கொண்டு தூங்குவது, மஞ்சள் பூசுவது போன்ற பாரம்பரியமான பல  அழகு-ஆரோக்கியப் பழக்கங்கள் இன்று இல்லை. காணாமல் போன அவற்றுடன் சேர்ந்து நாம் தொலைத்தது நம் அழகையும் இளமையையும்தான்.  அந்தக் காலத்தில் பின்பற்றிய எந்த விஷயமுமே அர்த்தமற்றவையல்ல என்பதைக் காலம் கடந்த பிறகுதான் உணர்கிறோம். ஆனாலும், இதுவும்  தாமதமில்லை... பாரம்பரிய அழகுக் குறிப்புகளைப் பின்பற்றும் உங்கள் முயற்சியை இன்றிலிருந்தே தொடங்குங்கள்!

எல்லோருக்கும் பயன்படக்கூடிய அத்தகைய அழகுக் குறிப்புகள் சிலவற்றை விளக்குகிறார் அழகியல் ஆலோசகர் ராஜம் முரளி.
அந்தக் காலத்தில் காலையில் எழுந்ததுமே, கொல்லைப் பக்கத்துக்குப் போய், அங்குள்ள புல் தரையில் கால்களை நன்கு தேய்த்துக் கழுவுவார்கள்.  அந்தப் புல்லின் சாறு பட்டால், கால்கள் சுத்தமாவதுடன், வெடிப்புகள் வராமல் தடுக்கும். இன்றோ கால் கழுவுகிற பழக்கமே இல்லை. அதனால்தான்  சிறுவயதிலேயே பாதங்கள் வறண்டு, வெடித்துக் காணப்படுகின்றன.

உங்கள் வீட்டுக் குளியலறையில் கரகரப்பான கல் ஒன்றைப் பதித்துக் கொள்ளுங்கள். குளிக்கும் போதும், ஒவ்வொரு முறை கால்களைக் கழுவும்  போதும், அந்தக் கல்லில் தேய்த்துக் கழுவலாம். பாதங்கள் பட்டுபோல இருக்க வேண்டும் என விரும்பினால், அந்தக் கல்லை நன்கு  சுத்தப்படுத்திவிட்டு, அதிலேயே நல்ல மஞ்சளை இழைத்துவிட்டு, அதன் மேல் கால்களைத் தேய்த்துக் கழுவலாம்.

ஆரோக்கியத்துக்காக நிறைய பேர் தினமுமோ, அடிக்கடியோ இளநீர் குடிக்கிறார்கள். 30 ரூபாய் கொடுத்து வாங்கும் இளநீரில் தண்ணீரை மட்டும்  குடித்துவிட்டு, உள்ளே இருக்கும் வழுக்கையை கஷ்டப்பட்டு சாப்பிடுவது அல்லது தூக்கி எறிவதும்தான் நடக்கிறது. அதற்குப் பதில் அந்த  வழுக்கையை அரைத்து உடல் முழுக்கத் தேய்த்துக் குளித்தால் சருமம் பட்டு போல மென்மையாகும்.

தோட்டம் வைத்துப் பராமரிக்கிற அளவுக்கு இன்று யாருக்கும் இட வசதியோ, நேரமோ இல்லை. ஆனாலும், சின்னச் சின்ன தொட்டிகளில் திருநீற்றுப்  பச்சிலை, துளசி, நித்ய கல்யாணி போன்றவற்றை வைத்துப் பராமரிக்கலாம். இவற்றுக்கு மருத்துவக் குணங்கள் உண்டு. துளசி மற்றும்  நித்யகல்யாணியிலிருந்து வீசும் காற்றானது நம் நுரையீரலுக்கு மிகவும் நல்லது.

சாம்பிராணி போடுவது இன்று சர்ச்சைக்குரிய விஷயமாகி விட்டது. தரமான சாம்பிராணியை வாங்கிப் பொடித்து, அத்துடன் சந்தனக் கட்டையின் சீவல்  (கிடைத்தால்) சேர்த்து தணலில் போட்டுப் புகைய விட்டு, ஒரு மூங்கில் கூடையால் கவிழ்த்து விடவும். 200 மி.லி. நல்லெண்ணெயில் பாதியை  தலைக்கும், மீதியில் மஞ்சள் குழைத்து உடல் முழுவதிலும் தேய்த்து ஊறியதும், வெந்நீரில் குளிக்கவும். புகை வருகிற கூடையின் மேல் தலை  முடியை விரித்தபடி காட்டவும். சாம்பிராணிப் புகையானது கழுத்திலும் மண்டையிலும் உள்ள நீரை எடுக்கும். அந்த வாசனை நல்ல, ஆழ்ந்த  உறக்கத்தைக் கொடுக்கும்.

அந்தக் காலத்தில் எல்லாம் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவென சிறப்புப் பொருட்கள் ஏது? பால் காய்ச்சியதும் படிகிற ஏட்டில், சிறிது  புளிப்பான தயிர் சேர்த்து நன்கு அடித்து, அதில் சிறிது கடலை மாவையும் சேர்த்துக் குழைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்து விடுவார்கள். இது  சருமம் வறண்டு போவதைத் தடுத்து, சருமச் சுருக்கங்களையும் தள்ளிப் போடும்.

வெண்ணெய், தயிர், பாலாடை, சிறிது கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றுடன் சில துளிகள் பாதாம் எண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ கலந்து உடல்  முழுக்கத் தடவி, சிறிது நேரம் ஊறியதும் குளிக்கலாம்.

அரப்புத்தூள் என நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். பார்ப்பதற்குப் பச்சையாக இருக்கும். ஒரு பங்கு அரப்புத்தூளுடன், 1 பங்கு சீயக்காய் தூள்  கலந்து தலையில் எண்ணெய் வைத்தோ, வைக்காமலோ, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கூந்தல் மென்மையாகும். இன்று யாரும் கஞ்சி  வடித்தெல்லாம் சாதம் வைப்பதில்லை. தலைக்குக் குளிக்கிற நாட்களில் மட்டும், கைப்பிடி அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு, நிறைய தண்ணீர்  விட்டு, வெந்ததும் கஞ்சியை வடித்து, தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் பளபளப்பாவதுடன் வளர்ச்சியும் தூண்டப்படும்.

விளக்கெண்ணெயில் திரி போட்டு விளக்கேற்றவும். சந்தனத்தூளைக் கரைத்து ஒரு தட்டில் தடவி, அதை விளக்கின் மேல் கவிழ்த்துப் போட்டு, புகை  அதில் படியும்படி வைக்கவும். அதில் படிகிற கருமையான படிவத்துடன், சிறிது விளக்கெண்ணெய் கலந்து கண்களுக்கு மையாக உபயோகிக்கலாம்.  இந்தக் கண் மையில் ஒவ்வாமை என்ற பேச்சுக்கே இடமில்லை. கண்களுக்கும் குளிர்ச்சி. கண்கள் பளபளப்பாகும்.

வெற்றிலைப்பாக்கு போடுகிற பழக்கமும் இன்று மறைந்து வருகிறது. அந்தப் பழக்கம் இருந்தவர்களுக்கு அதிலுள்ள கால்சியம் சத்து காரணமாக  மூட்டுவலிகள் வராமலிருந்தது. வெற்றிலை போடுகிற பழக்கமுள்ள தாய்க்குப் பிறக்கும் குழந்தைக்கும் கால்சியம் குறைபாடு வராது. அஜீரணத்துக்கும்  நல்லது... அழகுக்கும் உதவும்.

Wednesday, June 11, 2014

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப்....!

தலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்.

முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

முருங்கைக்கீரை
அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள், வடிகட்டியபின் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக் கொள்ளலாம். இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும். பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

Tuesday, June 3, 2014

அயோடின் உப்பையும் அளவுடன் பாவிப்போம்!!

 மனித உடலின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இன்னொரு உணவுப் பொருள் சோடியம் குளோரைடு எனப்படும் கறி உப்பு ஆகும்.

மாரடைப்பு, இரத்தக்கொதிப்பு, சிறுநீரக நோய்கள் தற்போது அதிகரித்ததன் காரணங்களில் உப்புப் பாவனையும் முக்கியமானது.

நாம் உட்கொள்ளும் உப்பை சிறுநீரகங்கள்தான் வெளியேற்ற வேண்டும். சிறுநீரகங்கள் 05 கிராம் உப்பை மட்டுமே வெளியேற்ற முடியும். அப்படியானால் மீதமுள்ள 07 கிராம் உப்பும் உடம்பில் சேர்கிறது.

ஒரு பங்கு உப்பை வெளியேற்ற 23 பங்கு தண்ணீர் தேவை. கலங்களில் உள்ளே இருக்கின்ற நீர் வெளியேறி, கலங்களுக்கு வெளியே உள்ள இந்த உப்பைக் கரைக்கிறது. ஆகவே, உடலில் கலங்களுக்கு வெளியே நீரின் அளவு மிகுதியாகி வீக்கம், இரத்தக் கொதிப்பு, இதயம் செயல் இழப்பு முதலியவை நிகழ்கின்றன.

சோடியமானது தன்னோடு கல்சியத்தையும் தக்க வைத்துக்கொள்ளுவதால் இரத்தக் குழாய் அடைப்புகள், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் முதலியவை உருவாகும்.  புற்றுநோய்களும் வரக்கூடிய வாய்புண்டு.

கனிமங்கள்,  தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் முதலிய சுமார் 84 வகை ஊட்டச் சத்துக்கள் தினமும் நமக்குத் தேவை.

உடலுக்குத் தேவையான உப்பு, உணவில் இயற்கையாகவே இருக்கிறது.

 எப்போது சமையலறையிலும் இன்னும் போதாது என்று சாப்பாட்டு மேசையிலும் வைத்து உப்பை நாம் உண்ண ஆரம்பித்தோமோ அன்றுதான் அதிலிருந்தே மனிதனின் உடல் ஆரோக்கிம் கெட்டுப்போக ஆரம்பித்து விட்டது.

'ரீஃபைனிங்' என்கிற பெயரில் அரிசி, சீனி, சர்க்கரை,  பால் இதையெல்லாம் எப்படிக் கெடுத்தோமோ அதேபோலதான் உப்பையும் கெடுக்க ஆரம்பித்தோம்.

கடல் நீரைத் தேங்க வைத்து, காயவைத்துக் கிடைக்கும் உப்பையே பெரும்பாலும் உபயோகித்து வருகிறோம். நமக்கு இப்போது கிடைக்கும் உப்பு
( Table salt ) கெடுதல் விளைவிப்பதில் சீனிக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல.

எல்லாவற்ற்றிற்கும் மேலாக, இப்போது வந்துள்ள புதிய ஆபத்து, அயோடின் கலந்த உப்பு  ஆகும். உப்பில் இயற்கையாகவே அயோடின் உண்டு. அதைக் காய்ச்சி உறிஞ்சி எடுத்துவிட்டு,   அயோடின் சேர்க்கிறோம் என்று செயற்கையாக அயோடின் சேர்க்கப்படுகின்றது.

தைராய்டு சுரப்பியிலிருந்து, தைராக்ஸின் ஹோர்மோன் உற்பத்தியாவதற்கு அயோடின் தேவை. அது குறைவாக இருந்தால், உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி குறைவதுடன் கழுத்தில் தைராய்டு சுரப்பியில் வீக்கம் ( Goitre ) முதலிய குறைபாடுகள் தோன்றும்.

ஆகவே, அயோடின் மிக மிக அவசியம்.

ஆனால், வெறும் 0.15 மி.கி. அயோடின் மட்டுமே  சாதாரண ஒருவருக்குதத் தேவைப்படுகிறது. இந்த அளவு அயோடின் எல்லா காய்கறிகளிலும் பால், முட்டை, அசைவ உணவிலும் இயற்கையாகக் கிடைக்கிறது. போதாக்குறைக்கு இயற்கையாகக் கிடைக்கும் உப்பிலும் கிடைக்கிறது.

இதுதவிர, அயோடின் கலக்கும்போது கூடவே பொட்டாசியம் குளோரைடு, சல்ஃபர்,  மெக்னிஷியம், ஃபுளோரைடு, பேரியம், ஸ்ட்ரோன்ஷியம் முதலிய வேதிப்பொருட்களும் கலந்துவிடுகின்றன.

இவை தேவையே இல்லை. இயற்கையான அயோடின் நல்லது. செயற்கையான அயோடின், உடலில் பல அழற்சிகளை உண்டாக்கும்.

ஆகவே அயோடின் உப்பையும் அளவுடன் பாவிப்போம். அதுவே ஆரோக்கியத்தின் அவசியமும் ஆகும்.

Saturday, May 31, 2014

வெங்காயத்தில் மருத்துவக் குணம் ஏராளம்

வெங்காயம்
வெங்காயத்தில் காணப்படும் 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற வேதிப்பொருள்தான் அதன் நெடிக்கும், நம் கண்களில் கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டும் ஏறக்குறைய ஒரே தன்மை உடையவை, ஒரே பலனைத் தருபவை. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புக்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது. வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளலாமா...

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* சமஅளவு வெங்காயச்சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட, காதுவலி, குறையும்.

* வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி இளஞ்சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

* வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட, எல்லா மூலக் கோளாறுகளும் நீங்கும்.

* வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

* வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்துப் பிசைந்து, மீண்டும் லேசாகச் சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட, கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

* வெங்காயச்சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடித்தால் இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர, பல் வலி, ஈறுவலி குறையும்.

* வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட, உடல் பலமாகும்.

* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

* படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை பூசி வந்தால் அவை மறைந்து விடும்.

* திடீரென மயக்கமடைந்தால் வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால் மயக்கம் தெளியும்.

* வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

* வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

* பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர, மேகநோய் நீங்கும்.

* வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் மேக நோய் குறையும்.

* வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

* பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

* வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. செரிமானத்துக்கும் உதவுகிறது.

* வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

எலும்புகளுக்கு உறுதியளிக்கும் பால்

பால்
ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுப் பொருட்களில் பால் முக்கிய இடம் பெறுகிறது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவுப் பொருளாக பால் மற்றும் பால்பொருட்கள் விளங்குகின்றன. இதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்...

* பால் மற்றும் பால்பொருட்கள் குறைந்த ஆற்றல் வழங்குபவை. ஒரு 'கப்' பாலில் 80 முதல் 120 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. எனவே உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள விரும்புபவர்களும், குண்டு உடலை குறைக்க விரும்புபவர்களும் பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்க்கலாம்.

* பால் உடலுக்குத் தேவையான 100 சதவீத கால்சியம் தேவையை பூர்த்தி செய்யும். 75 சதவீதம் வைட்டமின்-டி மற்றும் வைட்டமின் பி-12 கிடைக்கச் செய்யும்.

* 250 கிராம் எடை கொண்ட ஒரு கோப்பை பாலில் தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 478 கிராம் வைட்டமின்-ஏ, 32 சதவீதம் வைட்டமின்-டி காணப்படுகிறது. மேலும் வைட்டமின்-கே, பி-குழும வைட்டமின்களான தயாமின், ரிபோபிளேவின், நியாசின், வைட்டமின் பி-6, வைட்டமின் பி-12 ஆகியவையும் குறைந்த அளவில் உள்ளன.

* பாலில் கொழுப்புச் சத்து குறைந்த அளவில் காணப்படுகிறது. 250 கிராம் பாலில் 2.4 கிராம் மட்டுமே கொழுப்பு உள்ளது.

* உடம்புக்கு வலுச்சேர்க்கும் அத்தியாவசிய தாதுஉப்புகளான கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு போன்றவை சராசரியாக காணப்படுகிறது.

* பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் புரதப்பொருட்கள் மிகுந்துள்ளன. இவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் உறுதிக்கு உதவும். சிறுவயது முதலே பால் மற்றும் பால் பொருட்களை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்பு பலவீனம், எலும்பு உடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.

* பாலில் உள்ள கால்சியமும், பாஸ்பரசும் பற்களுக்கு நன்மை பயக்கும். இதிலுள்ள கேசின் என்ற பொருள் பற்களின் எனாமலை பாதுகாக்கும்.

* பால் உணவுகளை, பழங்களுடன் குறைந்த உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* 'கார்டியோவாஸ்குலார்' எனும் இதயபாதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் பால் மற்றும் பால் பொருட்களுக்கு உண்டு. கால்சியம் தாதுவானது ரத்தத்தில் கெட்ட கொழுப்பு பொருட்கள் அதிகமாவதை தடுக்கிறது. இதனால் இதயபாதிப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

* சமீபத்தில் 37 ஆயிரம் நடுத்தர வயது பெண்மணிகளுக்கு பால் உணவுகளை கொடுத்து ஆராய்ச்சி செய்ததில் டைப்-2 நீரிழிவு கட்டுப்படுத்தப்பட்டது தெரியவந்தது.

நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கும் தண்டுக்கீரை

தண்டுக்கீரை
உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்பவை கீரைகள். பல வகை கீரைகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டாலும், தண்டுக்கீரைக்கு தனி மகத்துவம் உண்டு. விதை, தண்டு, இலை என எல்லா பாகங்களும் ருசிக்கப்படும் ஒரே கீரை வகை இதுதான். சிறப்புமிக்க தண்டுக்கீரையின் சத்துக்களை பார்க்கலாம்.....

* தண்டுக்கீரை அமரன்தாசியீயா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் அம ரன்தஸ் ஸ்பைனஸ் ஆகும். தண்டுக்கீரையில் 70-க்கும் அதிகமான வகைகள் உலகமெங்கும் விளைகிறது.

* சமைத்த தண்டுக்கீரையில் வைட்டமின்- ஏ மற்றும் வைட்டமின்-சி சத்துக்கள் கணிசமாக நிறைந்துள்ளன.

* பி-குழும வைட்டமின்களான தயமின், நியாசின் மற்றும் ரீபோபிளேவின் போன்றவை அதீத அளவில் உள்ளன. இவை உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்பு பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன.
* கால்சியம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புகளும் இதில் உள்ளன. இவை உடலை நோய் காரணிகளிடமிருந்து காப்பதுடன், பல்வேறு சத்துக்களை வழங்கி உடல்செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

* லியூசின் மற்றும் திரியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் தண்டுக்கீரையில் காணப்படுகின்றன. இவை உடலில் புரதப் பொருளை சீரான விகிதத்தில் அதிகரிக்கச் செய்கின்றன.

* உடலின் பருமனை அதிகரிக்கச் செய்யும் காரணிகளான சர்க்கரை (1.69 கிராம்) மற்றும் கார்போஹைட்ரேட் (62.25 கிராம்) குறைவான அளவுகளிலே உள்ளன. இதனால் தண்டுக் கீரையை தினசரி உணவோடு சேர்த்துக் கொள்வதால் மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

* நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் பல்வேறு 'ஆன்டி-ஆக்ஸிடெண்ட்' பொருட்கள் இதில் இருக்கின்றன. இவை ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களை வளப்படுத்துவதன் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கின்றன.

Friday, May 30, 2014

குழந்தைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்கள்!

குழந்தை. நினைக்கும் போதே நெஞ்சம் இனிக்கிறது. தவிப்பு எவ்வளவோ இருந்தாலும், தன் மேடான வயிற்றை தடவிப்பார்த்து, 'எப்படா செல்லம் நீ பிறப்பாய்?' என்று கேட்ட கர்ப்பகால நாட்கள் எவ்வளவு சுகமானவை. வயிற்றின் உள்ளே இருந்தாலும், 'உங்கள் கேள்வி எனக்கும் கேட்கத்தான் செய்கிறது அம்மா..' என்பதுபோல் குழந்தை கொடுக்கும் உதையை அனுபவித்தது எவ்வளவு பெரிய பாக்யம்.

பிரசவத்திற்கு சில வாரங்களே இருந்தாலும், வயிற்றுக்குள் தன் குழந்தை என்ன செய்து கொண்டிருக்கிறது? என்பதைப் பார்க்க ஆசைப்பட்டு 4-டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் குழந்தை சிரிப்பதையும், கொட்டாவி விடுவதையும், கை-கால்களை அசைப்பதையும் பார்த்து மகிழ்ந்ததோடு மட்டுமில்லாமல், அதை பதிவு செய்துவைத்துக்கொண்டு பிரசவத்திற்கு முந்தைய நாள் வரை கம்ப்யூட்டர் திரையில் போட்டுப்பார்த்து சிலிர்த்த அனுபவங்களும் எத்தனை.. எத்தனை!

விம்மல், வலி, வேதனை அத்தனையையும் சகித்துக்கொண்டு அந்த அன்புக் குழந்தையைப் பெற்று, அதன் முகத்தை பார்த்தபோது, 'நான் எவ்வளவோ படித்திருந்தாலும், இந்த உலகத்தில் நவீனமாக என்னால் எத்தனையோ படைக்கப்பட்டாலும், அத்தனையையும் விட சிறந்த அற்புத படைப்பு நீதான்..' என்று உச்சி முகர்ந்து உணர்ச்சிவசப்பட்டு நெகிழ்ந்ததை எல்லாம் நினைத்துப் பாருங்கள்.

அப்படி நீங்கள் மகிழ்ந்த உங்கள் அன்பு குழந்தைக்கு இப்போது எத்தனை வயது?

- நான்கு வயதோ - ஐந்து வயதோ

- பத்து வயதோ

இப்போது அந்த குழந்தை பள்ளிக்கு சென்று கொண்டிருக்கலாம். படிக்கும். விளையாடும். ஆனால் அது சிரிப்பை தொலைத்துவிட்டு நிற்கிறது. சுயசிந்தனையை மேம்படுத்த முடியாமல் வாடுகிறது. உற்சாகத்தை இழந்து தவிக்கிறது.

நினைத்துப் பாருங்கள். இனிக்க இனிக்க குழந்தையிடம் பேசிய அந்த நாள் எங்கே போனது. குழையக் குழைய கொஞ்சிய அந்த நாட்கள் எங்கே போனது. 'நிலாவைப் பார்.. அதன் உள்ளே ஒரு பாட்டி இருக்கிறாள் பார்..' என்றெல்லாம் குழந்தையை குதூகலிக்க வைத்த அந்த வாஞ்சை எங்கே போனது?!

இன்று குழந்தைகள் பைகளை தூக்கிக்கொண்டு பள்ளிக்கு போகின்றன. போகும்போது உடல் கனத்தாலும், மூளை சற்று அமைதியாக இருக்கும். படித்துவிட்டு திரும்பி வரும் போது உடல் கனத்தோடு, பாடச்சுமையால் மூளையும் கனமாகி, சோர்ந்து போய் வருகிறார்கள். 'மாலை சோர்ந்துபோய் வீடு திரும்பும் கணவரை, இன்முகத்தோடு வரவேற்று உபசரிக்கவேண்டும்' என்ற பாடத்தை கடைபிடிக்கும் தாய்மார்களில் எத்தனை பேருக்கு உடலும், மூளையும், மனதும் கனத்துப்போய், களைத்துப்போய் வீடு திரும்பும் குழந்தைகளையும் அதுபோல் வரவேற்க வேண்டும் என்பது தெரிகிறது? பலருக்கும் தெரிவதில்லை.

தெரிந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில்லை. அதற்கு காரணம், அளவற்ற சுயநலம். தன் அடையாளமாக, தன் வாரிசாக, தான் இறந்த பின்பும் தன் பெயரை நிலைநாட்ட இருக்கிற குழந்தை படிப்பில், அறிவில், ஆற்றலில், ஆரோக்கியத்தில், ஆடலில், பாடலில், விளையாட்டில் அத்தனையிலும் முதலிடத்தில் நிற்க வேண்டும் என்ற பேராசை. அதற்காக சில நேரங்களில் சிலர் தங்கள் மனசாட்சியை மறந்து வதைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

தப்பு, சரி என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் சக்தி அதிகம். இந்த வார்த்தைகளை குழந்தைகளிடம் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் தப்பு, சரி என்பதன் அர்த்தத்தை குழந்தைகளிடம் சரியாக விளக்க நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

தப்பி ஓடுவது சில இடங்களில் தப்பாக இருக்கிறது. சில இடங்களில் சரியாக இருக்கிறது. தாக்குவது சில இடங்களில் சரியாக இருக்கிறது. சில இடங்களில் தப்பாக இருக்கிறது. எதிர்வாதம் செய்வது சில சூழல்களில் தப்பாக இருக்கிறது. சில சூழல்களில் சரியாக இருக்கிறது. இப்படியே நீங்கள் சிந்தித்துக்கொண்டு வந்தால் தப்பு, சரி என்று படும். சரி தப்பென்று படும். மிகச் சரியானதென்று உணர்த்தப்பட்ட சில விஷயங்களை காலம் ரொம்பவும் தப்பு என்று மாற்றியும் உணர்த்தியிருக்கிறது. ஒருவருக்கு தப்பாக தெரிவது, இன்னொருவருக்கு சரியானதாகவும் ஆகியிருக்கிறது. அதனால் குழந்தைகள் விஷயத்தில் தப்பு, சரி இரண்டையும் போட்டு ரொம்ப குழப்பாதீர்கள்.

குழந்தை செய்யும் ஒரு விஷயம், உங்கள் பார்வையில் தப்பாக தெரியும்போது, "அந்த செயல் என் பார்வையில் இதனால்... இப்படி... தப்பாகத் தெரிகிறது. சமூகமும் இதனால்.. இப்படி.. இதனை.. தப்பாகத்தான் எடுத்துக்கொள்ளும். தப்பாக உணரப்படும் ஒரு விஷயம் இப்படிப்பட்ட எதிர்விளைவுகளை உருவாக்கும்` என்பதை குழந்தைகளிடம் விளக்குங்கள். அதை அவர்கள் புரிந்துகொண்டு, அதைச் செய்யக்கூடாது என்று முடிவு செய்யட்டும்.

குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. ஆனால் ரசித்து, அனுபவித்து குழந்தைகள் வளர்க்கப்படாமல், முரண்பாட்டோடு வளர்க்கப்படுகிறார்கள். பொய் சொல்லாதே என்று குழந்தைகளிடம் கூறிக்கொண்டு பெற்றோர் பொய் சொல்வார்கள். அடுத்தவர்களைப் பற்றிய நிறைகளைத்தான் பேசவேண்டும் என்று குழந்தைகளிடம் கூறிக்கொண்டு, மற்றவர்களைப் பற்றிய குறைகளை பெற்றோர் பேசிக் கொண்டிருப்பார்கள். பக்கத்து வீட்டு குழந்தையிடம் இருக்கும் கலைத் திறனை பாராட்டிவிட்டு, தன் குழந்தை அதுபோன்ற கலைச் செயலில் ஈடுபடும்போது, 'வேலை மெனக்கெட்டு அதைப் போய் செய்கிறாயே' என்று முளையிலே கிள்ளி எறிவார்கள். தனக்கு படித்து தந்த ஆசிரியர்களை கண்டபடி விமர்சித்துவிட்டு, தன் குழந்தையிடம் 'நீ உன் ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கவேண்டும்' என்று உபதேசிப்பார்கள். இப்படி குழந்தை வளர்ப்புக்கலை பெரும்பாலான பெற்றோரால் முரண்பாடாக கையாளப்படுகிறது.

இன்று வீட்டுக்கு ஒரு குழந்தை. பெற்றோர் இருவரும் சம்பாதிக்கிறார்கள். இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள்ளாதபோது உணர்வுரீதியாக ஒற்றைக் குழந்தையை தனிமைப்படுத்தி விடுகிறார்கள். தனிமைப்படுத்தப்படும் குழந்தையோடு அதிக நேரத்தை செலவிட்டு அதனை தாங்கிக்கொள்ளாமல் பல பெற்றோர் அதிக நேரம் உழைத்து, குழந்தையின் தனிமையை அதிகப்படுத்திவிடுகிறார்கள். குழந்தை தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போது, 'உனக்காகத்தானே கஷ்டப்பட்டு உழைக்கிறோம். நான்கு வீடு.. இரண்டு கார்.. வங்கியில் சில லட்சம்... பங்குச் சந்தையில் பல லட்சம் சேர்த்துவைத்திருக்கிறேன்' என்பார்கள்.

நான்காம் வகுப்பு படிக்கும் எந்த குழந்தை, 'அப்பா எனக்கு நான்கு வீடு வாங்கி வையுங்கள்' என்று கேட்கிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் எந்த குழந்தை, 'தனக்கு எத்தனை கார்கள் வாங்கி வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்கிறது. எந்த குழந்தையும் எப்போதும் அவைகளை கேட்டதில்லை. அன்பையும், பாசத்தையும், அவைகளை வெளிப்படுத்த தேவையான நேரத்தையும், அதற்குரிய அமைதியான சூழ்நிலையையும்தானே எல்லா குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களிடம் எதிர்பார்க்கின்றன.

இந்த பூமி சுழன்று கொண்டே இருக்கிறது. அது இயற்கை. அதுபோல் உங்கள் குழந்தை வளர்ந்துகொண்டே இருக்கிறது. பள்ளிக்கு சென்றது. பின்பு கல்லூரிக்குச் செல்லும். அடுத்து வேலை பார்க்கும். அப்போது அதன் உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். மகள் மாணவி ஆவாள். அதிகாரி ஆவாள். காதலி ஆவாள். மனைவி ஆவாள். அப்போது அவள் உறவுகளாலும், கிளைகளாலும் பரந்து விரிந்துகொண்டிருப்பாள். அந்த நேரத்தில் முதுமையால் நீங்கள் உங்களை சுருக்கிக்கொண்டிருப்பீர்கள். இந்த உண்மையை இன்றே உணருங்கள். காலம் மாறும். உறவுகள் மாறும். காட்சிகள் மாறும். அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இன்றே இப்போதே நீங்கள் தயாராகிவிட்டால் உங்களுக்குள் ஒரு பக்குவம் வந்துவிடும். குழந்தைகள் மீது உங்கள் வேகமும், எதிர்பார்ப்பும் மிதமாகிவிடும். குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

குழந்தைகளின் உணர்வுகளை மதித்து நீங்கள் அவர்களை வளர்த்தால், உங்கள் மகள் திருமண வயதில் 'என் அப்பாவைப்போல் கணவர் அமையவேண்டும்' என்பாள். உங்கள் மகன், 'என் அம்மாவைப் போன்ற குணாதிசயங்கள் கொண்ட மனைவி வேண்டும்' என்பான். அதுவே உங்களின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.