Pages

Showing posts with label குழந்தை வளர்ப்புக்கலை. Show all posts
Showing posts with label குழந்தை வளர்ப்புக்கலை. Show all posts

Friday, May 30, 2014

குழந்தைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்கள்!

குழந்தை. நினைக்கும் போதே நெஞ்சம் இனிக்கிறது. தவிப்பு எவ்வளவோ இருந்தாலும், தன் மேடான வயிற்றை தடவிப்பார்த்து, 'எப்படா செல்லம் நீ பிறப்பாய்?' என்று கேட்ட கர்ப்பகால நாட்கள் எவ்வளவு சுகமானவை. வயிற்றின் உள்ளே இருந்தாலும், 'உங்கள் கேள்வி எனக்கும் கேட்கத்தான் செய்கிறது அம்மா..' என்பதுபோல் குழந்தை கொடுக்கும் உதையை அனுபவித்தது எவ்வளவு பெரிய பாக்யம்.

பிரசவத்திற்கு சில வாரங்களே இருந்தாலும், வயிற்றுக்குள் தன் குழந்தை என்ன செய்து கொண்டிருக்கிறது? என்பதைப் பார்க்க ஆசைப்பட்டு 4-டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் குழந்தை சிரிப்பதையும், கொட்டாவி விடுவதையும், கை-கால்களை அசைப்பதையும் பார்த்து மகிழ்ந்ததோடு மட்டுமில்லாமல், அதை பதிவு செய்துவைத்துக்கொண்டு பிரசவத்திற்கு முந்தைய நாள் வரை கம்ப்யூட்டர் திரையில் போட்டுப்பார்த்து சிலிர்த்த அனுபவங்களும் எத்தனை.. எத்தனை!

விம்மல், வலி, வேதனை அத்தனையையும் சகித்துக்கொண்டு அந்த அன்புக் குழந்தையைப் பெற்று, அதன் முகத்தை பார்த்தபோது, 'நான் எவ்வளவோ படித்திருந்தாலும், இந்த உலகத்தில் நவீனமாக என்னால் எத்தனையோ படைக்கப்பட்டாலும், அத்தனையையும் விட சிறந்த அற்புத படைப்பு நீதான்..' என்று உச்சி முகர்ந்து உணர்ச்சிவசப்பட்டு நெகிழ்ந்ததை எல்லாம் நினைத்துப் பாருங்கள்.

அப்படி நீங்கள் மகிழ்ந்த உங்கள் அன்பு குழந்தைக்கு இப்போது எத்தனை வயது?

- நான்கு வயதோ - ஐந்து வயதோ

- பத்து வயதோ

இப்போது அந்த குழந்தை பள்ளிக்கு சென்று கொண்டிருக்கலாம். படிக்கும். விளையாடும். ஆனால் அது சிரிப்பை தொலைத்துவிட்டு நிற்கிறது. சுயசிந்தனையை மேம்படுத்த முடியாமல் வாடுகிறது. உற்சாகத்தை இழந்து தவிக்கிறது.

நினைத்துப் பாருங்கள். இனிக்க இனிக்க குழந்தையிடம் பேசிய அந்த நாள் எங்கே போனது. குழையக் குழைய கொஞ்சிய அந்த நாட்கள் எங்கே போனது. 'நிலாவைப் பார்.. அதன் உள்ளே ஒரு பாட்டி இருக்கிறாள் பார்..' என்றெல்லாம் குழந்தையை குதூகலிக்க வைத்த அந்த வாஞ்சை எங்கே போனது?!

இன்று குழந்தைகள் பைகளை தூக்கிக்கொண்டு பள்ளிக்கு போகின்றன. போகும்போது உடல் கனத்தாலும், மூளை சற்று அமைதியாக இருக்கும். படித்துவிட்டு திரும்பி வரும் போது உடல் கனத்தோடு, பாடச்சுமையால் மூளையும் கனமாகி, சோர்ந்து போய் வருகிறார்கள். 'மாலை சோர்ந்துபோய் வீடு திரும்பும் கணவரை, இன்முகத்தோடு வரவேற்று உபசரிக்கவேண்டும்' என்ற பாடத்தை கடைபிடிக்கும் தாய்மார்களில் எத்தனை பேருக்கு உடலும், மூளையும், மனதும் கனத்துப்போய், களைத்துப்போய் வீடு திரும்பும் குழந்தைகளையும் அதுபோல் வரவேற்க வேண்டும் என்பது தெரிகிறது? பலருக்கும் தெரிவதில்லை.

தெரிந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில்லை. அதற்கு காரணம், அளவற்ற சுயநலம். தன் அடையாளமாக, தன் வாரிசாக, தான் இறந்த பின்பும் தன் பெயரை நிலைநாட்ட இருக்கிற குழந்தை படிப்பில், அறிவில், ஆற்றலில், ஆரோக்கியத்தில், ஆடலில், பாடலில், விளையாட்டில் அத்தனையிலும் முதலிடத்தில் நிற்க வேண்டும் என்ற பேராசை. அதற்காக சில நேரங்களில் சிலர் தங்கள் மனசாட்சியை மறந்து வதைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

தப்பு, சரி என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் சக்தி அதிகம். இந்த வார்த்தைகளை குழந்தைகளிடம் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் தப்பு, சரி என்பதன் அர்த்தத்தை குழந்தைகளிடம் சரியாக விளக்க நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

தப்பி ஓடுவது சில இடங்களில் தப்பாக இருக்கிறது. சில இடங்களில் சரியாக இருக்கிறது. தாக்குவது சில இடங்களில் சரியாக இருக்கிறது. சில இடங்களில் தப்பாக இருக்கிறது. எதிர்வாதம் செய்வது சில சூழல்களில் தப்பாக இருக்கிறது. சில சூழல்களில் சரியாக இருக்கிறது. இப்படியே நீங்கள் சிந்தித்துக்கொண்டு வந்தால் தப்பு, சரி என்று படும். சரி தப்பென்று படும். மிகச் சரியானதென்று உணர்த்தப்பட்ட சில விஷயங்களை காலம் ரொம்பவும் தப்பு என்று மாற்றியும் உணர்த்தியிருக்கிறது. ஒருவருக்கு தப்பாக தெரிவது, இன்னொருவருக்கு சரியானதாகவும் ஆகியிருக்கிறது. அதனால் குழந்தைகள் விஷயத்தில் தப்பு, சரி இரண்டையும் போட்டு ரொம்ப குழப்பாதீர்கள்.

குழந்தை செய்யும் ஒரு விஷயம், உங்கள் பார்வையில் தப்பாக தெரியும்போது, "அந்த செயல் என் பார்வையில் இதனால்... இப்படி... தப்பாகத் தெரிகிறது. சமூகமும் இதனால்.. இப்படி.. இதனை.. தப்பாகத்தான் எடுத்துக்கொள்ளும். தப்பாக உணரப்படும் ஒரு விஷயம் இப்படிப்பட்ட எதிர்விளைவுகளை உருவாக்கும்` என்பதை குழந்தைகளிடம் விளக்குங்கள். அதை அவர்கள் புரிந்துகொண்டு, அதைச் செய்யக்கூடாது என்று முடிவு செய்யட்டும்.

குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. ஆனால் ரசித்து, அனுபவித்து குழந்தைகள் வளர்க்கப்படாமல், முரண்பாட்டோடு வளர்க்கப்படுகிறார்கள். பொய் சொல்லாதே என்று குழந்தைகளிடம் கூறிக்கொண்டு பெற்றோர் பொய் சொல்வார்கள். அடுத்தவர்களைப் பற்றிய நிறைகளைத்தான் பேசவேண்டும் என்று குழந்தைகளிடம் கூறிக்கொண்டு, மற்றவர்களைப் பற்றிய குறைகளை பெற்றோர் பேசிக் கொண்டிருப்பார்கள். பக்கத்து வீட்டு குழந்தையிடம் இருக்கும் கலைத் திறனை பாராட்டிவிட்டு, தன் குழந்தை அதுபோன்ற கலைச் செயலில் ஈடுபடும்போது, 'வேலை மெனக்கெட்டு அதைப் போய் செய்கிறாயே' என்று முளையிலே கிள்ளி எறிவார்கள். தனக்கு படித்து தந்த ஆசிரியர்களை கண்டபடி விமர்சித்துவிட்டு, தன் குழந்தையிடம் 'நீ உன் ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கவேண்டும்' என்று உபதேசிப்பார்கள். இப்படி குழந்தை வளர்ப்புக்கலை பெரும்பாலான பெற்றோரால் முரண்பாடாக கையாளப்படுகிறது.

இன்று வீட்டுக்கு ஒரு குழந்தை. பெற்றோர் இருவரும் சம்பாதிக்கிறார்கள். இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள்ளாதபோது உணர்வுரீதியாக ஒற்றைக் குழந்தையை தனிமைப்படுத்தி விடுகிறார்கள். தனிமைப்படுத்தப்படும் குழந்தையோடு அதிக நேரத்தை செலவிட்டு அதனை தாங்கிக்கொள்ளாமல் பல பெற்றோர் அதிக நேரம் உழைத்து, குழந்தையின் தனிமையை அதிகப்படுத்திவிடுகிறார்கள். குழந்தை தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போது, 'உனக்காகத்தானே கஷ்டப்பட்டு உழைக்கிறோம். நான்கு வீடு.. இரண்டு கார்.. வங்கியில் சில லட்சம்... பங்குச் சந்தையில் பல லட்சம் சேர்த்துவைத்திருக்கிறேன்' என்பார்கள்.

நான்காம் வகுப்பு படிக்கும் எந்த குழந்தை, 'அப்பா எனக்கு நான்கு வீடு வாங்கி வையுங்கள்' என்று கேட்கிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் எந்த குழந்தை, 'தனக்கு எத்தனை கார்கள் வாங்கி வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்கிறது. எந்த குழந்தையும் எப்போதும் அவைகளை கேட்டதில்லை. அன்பையும், பாசத்தையும், அவைகளை வெளிப்படுத்த தேவையான நேரத்தையும், அதற்குரிய அமைதியான சூழ்நிலையையும்தானே எல்லா குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களிடம் எதிர்பார்க்கின்றன.

இந்த பூமி சுழன்று கொண்டே இருக்கிறது. அது இயற்கை. அதுபோல் உங்கள் குழந்தை வளர்ந்துகொண்டே இருக்கிறது. பள்ளிக்கு சென்றது. பின்பு கல்லூரிக்குச் செல்லும். அடுத்து வேலை பார்க்கும். அப்போது அதன் உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். மகள் மாணவி ஆவாள். அதிகாரி ஆவாள். காதலி ஆவாள். மனைவி ஆவாள். அப்போது அவள் உறவுகளாலும், கிளைகளாலும் பரந்து விரிந்துகொண்டிருப்பாள். அந்த நேரத்தில் முதுமையால் நீங்கள் உங்களை சுருக்கிக்கொண்டிருப்பீர்கள். இந்த உண்மையை இன்றே உணருங்கள். காலம் மாறும். உறவுகள் மாறும். காட்சிகள் மாறும். அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இன்றே இப்போதே நீங்கள் தயாராகிவிட்டால் உங்களுக்குள் ஒரு பக்குவம் வந்துவிடும். குழந்தைகள் மீது உங்கள் வேகமும், எதிர்பார்ப்பும் மிதமாகிவிடும். குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

குழந்தைகளின் உணர்வுகளை மதித்து நீங்கள் அவர்களை வளர்த்தால், உங்கள் மகள் திருமண வயதில் 'என் அப்பாவைப்போல் கணவர் அமையவேண்டும்' என்பாள். உங்கள் மகன், 'என் அம்மாவைப் போன்ற குணாதிசயங்கள் கொண்ட மனைவி வேண்டும்' என்பான். அதுவே உங்களின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.