Pages

Sunday, April 27, 2014

டெங்குவை ஒழித்து உயிர் இழப்பை தடுக்கும் நிலவேம்பு

நிலவேம்பு
கிராம மக்களையும் நகர்ப்புற மக்களையும் ஏன்? அனைத்து தரப்பு மக்களையும் எப்பொழுதுமே பயமுறுத்திக் கொண்டிருப்பவை வியாதிகள். டிசிஸ் என்று சொல்லக்கூடிய நோய்களுக்கு பயப்படாதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம். விஞ்ஞான வளர்ச்சியில் நம் தேசம் விண்ணை தொட்டுக்கொண்டிருக்கிறது.

நாகரீக வளர்ச்சியிலும் வெள்ளைக்காரர்களை மிஞ்சிக் கொண்டிருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியில் நம்மை சுற்றியுள்ள பூமா தேவியையே விலைக்கு வாங்கும் நிலைக்கு உயர்ந்து நிற்கிறோம். மனிதனை மனிதனே ஏமாற்றி பிழைக்கும் காலம் தானே இது.

இந்த வகையில் சமீப காலமாக அனைத்து உலக மக்களையும் பயமுறுத்திக் கொண்டு ஒரு சில நேரங்களில் உயிர் இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது டெங்கு வைரஸ் காய்ச்சல். இது எந்த நேரத்திலும் எந்த காலத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

பயம் வேண்டாம் :

இதை எண்ணி பொது மக்கள் பயப்பட தேவையில்லை. டெங்கு காய்ச்சல் மட்டும் அல்ல எந்த நோயாக இருந்தாலும் நாம் நினைத்தால் மட்டுமே கட்டுப்படுத்தமுடியும், தீர்க்கவும் முடியும், வராமல் தடுக்கவும் முடியும் என்பது தான் உண்மை. எந்த நோய்களும் தானாக வருவது இல்லை.

அப்படி தானாக வருவதும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தான் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் முதல் புற்று நோய், அம்மை நோய் வரை அனைத்துமே வைரஸ் கிருமிகளால் ஏற்படுவது. மனிதர்களுக்கு வரும் பல்வேறு வகை நோய்கள் அனைத்துமே தாமாகவே வரவழைத்துக் கொள்வது.

தற்சமயம் அதிகரித்து காணப்படும் சர்க்கரை நோய், ஆஸ்துமா நோய், கை, கால், மூட்டு வீக்கம், எலும்பு தேய்மான நோய்கள், தோல் நோய்கள், இதய நோய்கள், உடல் பருமன் என சொல்லிக் கொண்டே போலாம்.

உணவுப்பழக்கம்:

இவை அனைத்தும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறையாலும் பழக்க வழக்கங்களாலும் வேலைப்பளு மன அழுத்தம், உறக்கம் இன்மை, ஓய்வு இன்மை, கவலைகளாலும் தான் பெரும்பாலான நோய்களுக்கு நாம் இரையாகிறோம்.

நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும் போது `ஏடிஎஸ் ஜிப்தி' என்ற பெண் கொசு பகலில் மனிதர்களை கடித்து டெங்கு வைரஸ் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இது பிளாவி வைரஸ் இனத்தை சேர்ந்தது. தமிழ் நாட்டில் தான் இவ்வகை கொசுக்கள் அதிகம் காணப்படுகின்றன.

கொசு கடித்த நாள் முதல் 5-ல் இருந்து 7 நாட்களுக்குள் டெங்கு வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். காய்ச்சல் நமக்கு வருகிறது என்று தெரிந்த உடனேயே நம் உடல் எதோ ஒரு நோய்க்கு ஆளாகி உள்ளது அல்லது பாதிப்படைய போகிறோம் என்று உணர்ந்து கொண்டு உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவர்களை நாம் சென்று பார்க்க வேண்டும்.

ஏதோ தலைவலி, சாதாரண காய்ச்சல், சாதாரண உடல் வலி, செரியமையால் வாந்தி என எண்ணிக் கொண்டு அருகில் இருக்கும் மருந்து கடைகளில் மருத்துவர்கள் பரிந்துரையோ ஆலோசனையோ இல்லாமல் எந்த மருந்துகளையும் பயன்படுத்தி விலை மதிப்பில்லா உடலையும் உயிரையும் இழக்க வேண்டாம். பாதிப்புகளுக்கும் உட்படுத்தி கொள்ள வேண்டாம்.

டெங்கு அறிகுறிகள்:

டெங்கு காய்ச்சலாக இருந்தால் தலைவலி தும்மல், குளிர், நடுக்கம், கண்களில் வலி, கை கால் மூட்டுகளில் வலி, சாப்பிட இயலாமை போன்ற அறிகுறிகள் காணப்படும்.

நோயை உடனடியாக கவனிக்காமல் சாதாரண காய்ச்சலாக எண்ணி அஜாக்கிரதையாக 2, 3 நாட்கள் சென்ற பிறகு மருத்துவம் செய்ய மருத்துவரை அணுகும் போது நோயின் தீவிர நிலை ஏற்பட்டு தோல் பகுதி , பல் ஈறுகளில் ரத்த கசிவு கூட ஏற்படலாம்.

டெங்கு வைரஸ் கொசுவானது மழை நீர் தேங்கி உள்ள பழைய மண்பானைகள் இருக்குமிடம், பிளாஸ்டிக் பொருட்கள் தேக்கி வைத்துள்ள இடங்கள், சிமிண்ட் நீர் தேக்க தொட்டிகள், கழிவு நீர் குழாய்கள், குளிர்சாதன பெட்டி, தேங்காய் மட்டை, தேங்காய் நார் போட்டு வைத்துள்ள குடோன்கள், குப்பைகள் தேக்கி வைத்துள்ள இடங்கள்...

இப்படி பல்வேறு இடங்களில் வைரஸ் கொசுவானது தங்கி இருந்து இனப்பெருக்கம் செய்து மனிதர்களை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும்.

ரத்தப்பரி சோதனை:

டெங்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட உடன் ரத்தபரிசோதனை செய்து பிளேட்லெட் என்று செல்லக்கூடிய ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு இந்த நோயை உறுதி செய்து கொள்ளலாம். சராசரியாக ஒருவருக்கு ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை இருக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு ரத்த தட்டுகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவாகவும், 1 லட்சத்துக்கு குறைவாகவும் காணப்படும் போது நோயாளி தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்.

இந்நிலையில் இருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள வீடுகளில் குப்பைகள் தேங்காமல் சுகாதாரமாக தண்ணீர் பாத்திரங்களை மூடி வைப்பது, கழிவு நீர், மழை நீர் தேங்காமல் பாதுகாப்பது, ஜன்னல்களில் கொசு வலைகளை அமைப்பது, தூங்கும் பொழுது கொசு வலைகளை பயன்படுத்துவது, இயற்கை கொசு விரட்டிகளை பயன்படுத்துவது, தூய சாம்பிராணி புகை போடுவது போன்றவற்றால் தடுக்க முடியும்.

நிலவேம்பு- வெட்டிவேர்:

மருந்து என்று எடுத்துக் கொண்டால் எந்த பக்க விளைவையும் தராத நில வேம்பு,வெட்டி வேர், விலாமிச்சம் வேர்,சந்தனம், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, பற்படாகம், சுக்கு, மிளகு சேர்ந்த நில வேம்பு குடிநீர் சூரணத்தை 200 மில்லி லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் சூரணத்தை போட்டு 50 மில்லியாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி காலை, மதியம், மாலை என நோயின் தன்மை வயதுக்கு தக்கபடி மருத்துவர் ஆலோசனை படி வழங்கலாம்.

பப்பாளி இலை சாறு 10 மில்லி முதல் 20 மில்லி வரை தேன் கலந்து காலை, மதியம், மாலை என வழங்கலாம். மலை வேம்பு இலைச்சாறு 10 மில்லி முதல் 20 மில்லி வரை தேன் கலந்து 3 வேளையும் வழங்கலாம். மகாசுதர்சன மாத்திரை காலை 2, மாலை-2, இரவு-2 என நோயாளியின் தீவிரத்திற்கு ஏற்ப மருத்துவர் ஆலோசனை பெற்று வழங்கலாம்.

மேல் பூச்சி தைலங்கள், பற்றுக்களை மருததுவர் ஆலோசனையோடு நோயாளிக்கு வழங்கினால் டெங்கு காய்ச்சல் மட்டும் அல்ல எந்த நோயையும் முற்றிலும் குணப்படுத்தலாம். தரமான மருந்துகளை மருத்துவர் ஆலோசனை பெற்று வாங்குங்கள், போலிகள் நிறைந்த உலகில் ஏமாறாமல் மருத்துவர் உதவியுடன் நோய்களை குணமாக்கி உடலை பாதுகாத்து கொள்ளுங்கள் என்கிறார் திருச்சி ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை சிறப்பு நிலை சித்த மருத்துவர் டாக்டர் எஸ்.காமராஜ்.

கொசுவை ஒழிக்க புகை மூட்டம் :

1. மா இலை, நொச்சி இலை, வேப்பிலை ஆகிய மூன்றையும் கலந்து புகை போடலாம்.

2.துளசி இலை, வேப்பிலை இரண்டையும் கலந்தும் புகை போடலாம்.

3. துளசி, மருதாணி, தும்பை, நொச்சி, மாஇலை கலந்தும் புகை போடலாம்.

4.வேப்பிலை, துளசி இலை, மிளகு, மஞசள், சுக்கு போட்டு கசாயம் போட்டு குடிக்கலாம்.

5. மஞ்சள், துளசி, வேப்பிலை, தும்பை இலை, நொச்சி இலை, கரிக்கட்டை இவைகளை ஒன்று சேர்த்து வில்லை தட்டி நிழலில் உலர்த்தி பின் கொசு வர்த்தியாக பயன்படுத்தலாம்.

6.கற்பூர தைலத்தை உடல் பகுதியில் பூசிக்கொண்டால் எளிதாக கொசு கடியில் இருந்து தப்பிக்கலாம்.

உடம்பை குறைக்கணுமா?

உடல் எடை
அதிக உடல் எடை தான் இன்று பலரையும் படுத்தி எடுக்கும் விஷயமாக இருக்கிறது. 'எப்படித்தான் உடல் எடையைக் குறைப்பது?' என்று திணறித் தவித்துப் போகிறார்கள். அவர்களுக்கு உதவும், எளிய முறையில் உடல் பருமனைக் குறைக்கும் வழிகள் இவை...

* அன்றாடம் எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* உடல் பருமனை அதிரடியாகக் குறைக்கிறேன் பேர்வழி என்று கொலைப்பட்டினி கிடைக்கக்கூடாது.

* நொறுக்குத் தீனிகளைத் தள்ளி வைக்க வேண்டும். 'இன்று மட்டும் சாப்பிடுகிறேன்' என்று நினைத்தால், என்றுமே அவற்றுக்கு விடைகொடுக்க முடியாது.

* உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

* இனிப்புகள், சர்க்கரை வகைகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

* எண்ணையில் வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்த்து, வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைப்பகுதியை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

* செயற்கைக் குளிர்பானங்களுக்கு நமக்கு நாமே தடை விதித்துக்கொள்ள வேண்டும்.

* தினமும் பழங்கள் சாப்பிடலாம்.

* அவரை, பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், காலி பிளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் இரவு உணவுடன் 200 கிராம் அளவுக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப்பயறு, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

* கைக்குத்தல் அவல், முழுக்கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.

* கொழுப்புச் சத்துள்ள உணவுப்பொருட்களைத் தவிர்த்தல் மிகவும் நல்லது. பாலில் கூட குறைந்த கொழுப்புச்சத்து உள்ள 'டோன்டு மில்க்' வகைகளையே பயன்படுத்தலாம்.

* வேலைக்காரர்கள், எந்திரங்களை அதிகம் சார்ந்திருக்காமல், வீட்டு வேலைகளை நாமே செய்யலாம். உடல் ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம். வீட்டு வேலைகளை நாமே பார்த்த திருப்திக்குத் திருப்தி!

* அசைவ விரும்பிகள், அவற்றின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். பொரிப்பது, வறுப்பது தவிர்த்து, தந்தூரி வகைக்கு மாறலாம்.

பார்லியில் உள்ள சத்துப்பட்டியல்

பார்லி
பார்லி (வாற்கோதுமை) சத்துமிக்க தானிய வகைகளில் ஒன்று. இன்று நீரிழிவு, ரத்த அழுத்த நோயாளிகளின் பிரதான உணவு வகையில் ஒன்றாகவும், ஆரோக்கிய விரும்பிகளின் உணவுப் பட்டியலிலும் தவறாமல் இடம் வகிக்கிறது. இதிலுள்ள சத்துக்களை அறிவோம்...

* பார்லி மிதமான ஊட்டம் தரக்கூடியது. 100 கிராம் பார் லியில் 270 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

* நூறு கிராம் பார்லியில் 54.4 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவும். குடல் பகுதியில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியா நுண்ணுயிர்கள் இந்த நார்ச்சத்துக்களை எளிதில் கரையத்தக்க கொழுப்பு அமிலமாக மாற்றி வழங்கும். அது 'பியூட்ரிக் அமிலம்' எனப்படும். இது உடற்செல்களுக்கான அத்தியாவசிய எரிபொருளாகும்.

* நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் புரப்பியானிக் அமிலம், அசிட்டிக் அமிலம் எனப்படும் இரு கொழுப்பு அமிலங்களையும் உருவாக்குகிறது. தசை மற்றும் நுரையீரல் செல்களின் எரிபொருளாக இவை பயன்படும். இந்த புரப்பியானிக் அமிலம்தான் ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் செயலிலும் பங்கெடுக்கிறது.

* பார்லியில் உள்ள 'பீட்டா குளுகான்' எனும் நார்ப் பொருள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை பித்தநீருடன் கலந்து, கழிவுப் பொருட்களுடன் சேர்த்து அகற்றிவிடுகிறது.

* பார்லியில் 'வைட்டமின் பி' (நியாசின்) நல்ல அளவில் காணப்படுகிறது. அதிக அளவில் பார்லியை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, இதயவியாதியான கார்டியோ வாஸ்குலார் பாதிப்புக்கு நியாசின் எதிர்ப்பு ஆற்றல் வழங்கும். மேலும் கெட்ட கொழுப்புகளான லிப்போ புரோட்டின் மற்றும் கொலஸ்டிராலின் அளவையும் கட்டுப்படுத்தும். ஒரு கப் பார்லி சாப்பிட்டால் தினசரி உடலில் சேர்க்க வேண்டிய 'வைட்டமின் பி' சத்தில் 14.2 சதவீதம் கிடைக்கும்.

* உடலுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்கள் சிறந்த அளவில் காணப்படுகிறது. செலினியம் தினசரி அளவில் 52 சதவீதமும், டிரிப்டோபான் 37.5 சதவீதமும், தாமிரம் 31.4 சதவீதமும், மாங்கனீசு 31 சத வீதமும், பாஸ்பரஸ் 23 சதவீதம் உள்ளன.

* காலை உணவில் பார்லியை அதிகமாக சேர்த்து வர இதய பாதிப்புகளை வெகுவாக கட்டுப்படுத்தலாம். 40 வயது கடந்த பெண்களுக்கு உடல்ரீதியாக பல்வேறு நன்மை வழங்கக் கூடியது பார்லி. மார்பக புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல் தரும்.

* மிகுதியாக காணப்படும் மக்னீசியம், 300 நொதிகளை தூண்டும் துணைக்காரணியாக செயல்படுகிறது. இன்சுலின் சுரப்பதை தூண்டுவதால் நீரிழிவு பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது. பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் தருவதாகவும் உள்ளது.

வழக்கமாக பார்லி சேர்த்துவந்தால் ஆஸ்துமா பாதிப்புகள் அண்டாது. பார்லி தோற்றத்தில் கோதுமையின் சாயலில் இருக்கும். இதனை அப்படியே வேக வைத்து அரிசி சாதம்போல சாப்பிடலாம்.

கோதுமையைப் போலவே மாவாக அரைத்து சப்பாத்தி, கூழ், தோசை, இட்லி என பல உணவுப் பண்டங்கள் தயாரித்து ருசிக்கலாம். பார்லி மாவு கலந்து கேக், இனிப்பு வகைகள் செய்து சாப்பிடலாம். பார்லி சூப் உடலுக்கு தெம்பு தரும். இதயத்துடிப்பு சீராகும். மதுபானம் தயாரிப்பில் நொதித்தலுக்கு பார்லி உதவுகிறது. 

இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்

இலைகள்
கல்யாண முருங்கை (முள் முருங்கை):-

அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும். மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும். சர்க்கரை நோய், சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.

வாழைத்தண்டு:-

சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது.

பாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது. (Very effective in kidney disorders).சிறுநீர் தொல்லைகள் வராமல், சிறுநீரகத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்காக ஆரோக்கியமாக வாழ்பவர்கள் கூட வாரம் இரண்டுநாள் வாழைத்தண்டு சாறு குடிக்க வேண்டும்.

கண்டங்கத்தி:-

காசநோய், ஆஸ்துமா, மார்சளி, காய்ச்சல், தொழுநோய், இரத்த அழுத்தம், பக்கவாதம், கல்லீரல் நோய்கள் முதலியவற்றிற்கு மிகவும் சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

தூது வேளை:-

நரம்புத்தளர்ச்சி மறையும், மார்புச்சளி அகற்றும், தோல் வியாதிக்கும் நல்லது. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக் ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும். காது மந்தம், நமைச்சல், உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் தூது வேளை நல்லது.

மஞ்சள் கரிசாலங்கண்ணி:-

காமாலை, கண்கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றிற்கு சிறந்தது.

வெங்காயமும் பூண்டும்:-

கிருமிகளை வெளியேற்றும் டானிக், சொறி, சிரங்கு, யானைக்கால் வியாதி, சைனஸ், டான்ஸில், இரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். கொலாஸ்ட்ரால் குறையும். பச்சைப் பூண்டுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது.

Saturday, April 26, 2014

வாழைப்பழத்தின் வகைகளும், நன்மைகளும்!

வாழைப்பழம்
வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றது என்பது பொதுவான கருத்தாகும். அது மட்டுமின்றி, அறிவியல் ரீதியாகவும் இது சரி என்று நிரூபணமாகி இருக்கிறது.

வாழைப்பழத்தில் கார்போஹைடிரேட், விட்டமின், கால்சியம், தாது சத்துக்கள் அடங்கி இருப்பதுடன், எளிதில் ஜீரணமாகும், கொழுப்பை குறைக்கும் சக்தியும் அதிகம் உள்ளதாம். இந்த சக்தி நன்றாக வேலை செய்யும்போது, உடல் எடையும் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவுடன், அல்லது இரவு உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றது. வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அனைத்து வகைகளும் உடலுக்கு பலனை அளிக்கக்கூடியவையே. இப்போது வாழைப்பழத்தின் வகைகளும், அவற்றின் நன்மைகளையும் பார்க்கலாம்.. 

மலை வாழைப்பழம்- மலச்சிக்கலைத் தீர்க்கும்

செவ்வாழைப் பழம்- உயிரணுக்களைப் பெருக்கும்

மஞ்சள் வாழைப்பழம்- குடல் புண்களை ஆற்றும்

பேயன் வாழைப்பழம்- அம்மை நோயால் குடலில்

ரஸ்தாலி வாழைப்பழம்- நாவுக்கு சுவை தரும்

மொந்தன் பழம்- உடலின் வறட்சியைப் போக்கும்

பச்சை வாழைப்பழம்- உடலுக்குக் குளிர்ச்சி தரும்

நேந்திரம் வாழைப்பழம்- சேரும் நஞ்சை முறிக்கும். தோலுக்கு மினுமினுப்பைத் தரும்.

செரிமானப் பிரச்சினையா?

செரிமானம்
பசியால் வாடுவோரைவிட செரிமானப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள். அதிகமான உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் போன்றவை செரிமானப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம் ஆகின்றன.

நல்ல விருந்து சாப்பிட்டுவிட்டு உடனடியாகத் தூக்கத்தைப் போட்டால் செரிமானப் பிரச்சினையால் தான் திணற வேண்டியிருக்கும். பொதுவாகவே, வயிறு முட்ட உண்பதைத் தவிர்க்க வேண்டும். உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். செரிமானப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க மேலும் சில யோசனைகள்...

* பிடித்த, ருசியான உணவு என்பதால் அதிகமாக உண்பது, மன அழுத்தம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* செரிமான சக்தியை அதிகரிக்க எலுமிச்சம்பழம் சிறந்தது. அரை மூடி எலுமிச்சம்பழத்தை ஒரு டம்ளர் நீரில் கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.

* இஞ்சியும் செரிமானத்துக்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித் துண்டுகளை சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிடலாம்.

* இஞ்சிச் சாறையும், எலுமிச்சைச் சாறையும் நன்றாகக் கலந்து, ஒரு ஸ்பூன் குடித்தால் செரிமானக் கோளாறு நீங்கும்.

* ஒரு தேக்கரண்டி சீரகம் கலந்த நீரில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லிச் சாறில் உப்பு போட்டுக் குடிக்கலாம்.

* ஓமம் வயிற்றுக்கு நல்லது. ஓமத்தை மோரில் கலந்தும் அருந்தலாம்.

* ஜீரண அவஸ்தை ஏற்படாமல் தவிர்க்க ஆயுர்வேதம் அளிக்கும்

குறிப்பு இது:

கோதுமை உணவுக்குப் பிறகு குளிர்ந்த நீர் அருந்தவும். மாவுப் பண்டங்களைச் சாப்பிட்ட பின் சூடான நீரை அருந்தவும். பயறு உணவு வகைகளை உண்ட பின் நீர் மோர் அருந்தவும். சாப்பாட்டு விஷயத்தில் எப்போதும் கவனமாக இருந்தால் செரிமானப் பிரச்சினையே ஏற்படாது! 

ஆரோக்கியம் தான் சொத்து

ஆரோக்கியம்
உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுத்தால் அது ஆரோக்கியம் நிறைந்த சொத்தாக மாறுகிறது! தினமும் ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கீரை சாப்பிட்டவுடன் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

இரும்புச்சத்து, தாது உப்புக்கள், கால்சியம் நிறைந்து இருப்பதால் உடல் சீராக இயங்க கீரை வகைகள் உதவும். எலும்புகள் உறுதிப்படும். புதிதாக பறிக்கும் கீரைகளை அதற்கு தகுந்தபடி உடனேயே பொரியல் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

நோய் அண்டாது. குழந்தைகளை எல்லாவிதமான காய்கறிகளையும் உண்ணப் பழக்க வேண்டும். வயதானவர்கள் நீர்ச்சத்து, நார்ச்சத்து அடங்கி உள்ள அவரைக்காய், புடலங்காய், பூசணி, பீன்ஸ், வாழைத்தண்டு, கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.

தினமும் இரண்டு விதமான காய்கறிகள் சேர்த்து கொண்டால் உடலுக்கு நல்லது. பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பிஸ்தா, அக்ரூட் போன்ற பருப்பு வகைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது அவசியம். மொத்த பருப்பு வகைகளையும் கலந்து அதில் தினமும் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவில் சாப்பிடவேண்டும்.

இதனால் உடல் எடையும் கூடும். குழந்தைகளின் உடல் உறுதியாகும். சருமம் பொலிவடையும். முளைவிட்ட பயறு வகைகளில் நீர்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளன. கூடவே ரிபோபிளேவின் பி காம்பிளக்ஸ் வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.

அப்படியே சாப்பிடாமல் வெந்நீரில் போட்டு லேசாக வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். தினமும் 50 கிராம் அளவுக்கு முளை விட்ட தானியத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். உணவில் எண்ணெயை அளவோடு சேர்த்து கொண்டால் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்.

எண்ணெய் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு தேவையில்லாத கொலஸ்டிரால் உருவாகி பல நோய்களை உண்டுபண்ணும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயறு வகைகள் தேவை. அதே நேரத்தில் அதை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். தினமும் 50 முதல் 75 கிராம் வரை சாப்பிடலாம்.