Pages

Saturday, April 26, 2014

ஆரோக்கியம் தான் சொத்து

ஆரோக்கியம்
உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுத்தால் அது ஆரோக்கியம் நிறைந்த சொத்தாக மாறுகிறது! தினமும் ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கீரை சாப்பிட்டவுடன் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

இரும்புச்சத்து, தாது உப்புக்கள், கால்சியம் நிறைந்து இருப்பதால் உடல் சீராக இயங்க கீரை வகைகள் உதவும். எலும்புகள் உறுதிப்படும். புதிதாக பறிக்கும் கீரைகளை அதற்கு தகுந்தபடி உடனேயே பொரியல் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

நோய் அண்டாது. குழந்தைகளை எல்லாவிதமான காய்கறிகளையும் உண்ணப் பழக்க வேண்டும். வயதானவர்கள் நீர்ச்சத்து, நார்ச்சத்து அடங்கி உள்ள அவரைக்காய், புடலங்காய், பூசணி, பீன்ஸ், வாழைத்தண்டு, கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.

தினமும் இரண்டு விதமான காய்கறிகள் சேர்த்து கொண்டால் உடலுக்கு நல்லது. பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பிஸ்தா, அக்ரூட் போன்ற பருப்பு வகைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது அவசியம். மொத்த பருப்பு வகைகளையும் கலந்து அதில் தினமும் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவில் சாப்பிடவேண்டும்.

இதனால் உடல் எடையும் கூடும். குழந்தைகளின் உடல் உறுதியாகும். சருமம் பொலிவடையும். முளைவிட்ட பயறு வகைகளில் நீர்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளன. கூடவே ரிபோபிளேவின் பி காம்பிளக்ஸ் வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.

அப்படியே சாப்பிடாமல் வெந்நீரில் போட்டு லேசாக வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். தினமும் 50 கிராம் அளவுக்கு முளை விட்ட தானியத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். உணவில் எண்ணெயை அளவோடு சேர்த்து கொண்டால் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்.

எண்ணெய் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு தேவையில்லாத கொலஸ்டிரால் உருவாகி பல நோய்களை உண்டுபண்ணும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயறு வகைகள் தேவை. அதே நேரத்தில் அதை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். தினமும் 50 முதல் 75 கிராம் வரை சாப்பிடலாம்.

No comments: