Pages

Saturday, April 26, 2014

வெல்லத்தின் வெகுமதிகள்!

வெல்லம்
வெல்லத்தின் வெகுமதிகள்!'இனிப்பு ஆபத்தானது' என்று பலரும் பலமுறை சொல்லக் கேட்டிருப்போம். ஆரோக்கிய வாழ்க்கைக்கு இனிப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதே மருத்துவம் சொல்லும் முதல் தகவல். பருமன், நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் விதிக்கும் தடைப் பட்டியலில் முதன்மையாக இருக்கிறது இனிப்பு.

ஆனால் அதேவேளையில், சர்க்கரைக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்படும் வெல்லத்தில் அவ்வளவு பிரச்சினைகள் இல்லை. இன்றும் பல கிராமங்களில் காபி, டீ உள்பட எல்லாவற்றுக்கும் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துக்கொள்கிறார்கள்.

வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக்குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யக்கூடியது. அதனால்தான் பலர், உணவு உண்டபிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள். செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தைச் சரிசெய்யும் சக்தி வெல்லத்துக்கு உண்டு.

சர்க்கரை சேர்த்துக்கொள்வதால் வரக்கூடிய 'அசி டிட்டி' எனப்படும் அமிலம் சுரக்கும் பிரச்சினை, வெல்லம் சேர்த்துக்கொள்வோருக்கு வருவதில்லை. இது ரத்தத்தையும் சுத்தப்படுத்தக்கூடியது. எனவே உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர்கள் எப்போதும் சிபாரிசு செய்வது வெல்லம்தான்.

வெல்லத்திலும், பனை வெல்லத்திலும் இரும்புச்சத்தும், கால்சியமும் அதிகமாக உள்ளன. சர்க்கரை தயாரிப்பின்போது, அதை வெண்மையாக்குவதற்கு சில ரசாயனங்களைச் சேர்ப்பதால் இரும்புச் சத்து அழிக்கப்படுகிறது. வெல்லத் தயாரிப்பில் அந்த இழப்பு இல்லை.

வெல்லம் என்று நாம் பொதுவாகச் சொல்வது, கரும்புச் சாறில் இருந்து தயாரிக்கப்படுவது. பனைமரத்தில் இருந்தும் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கரும்பிலிருந்து பெறப்படும் கரும்புச் சாறிலிருந்துதான் வெல்லமும், சர்க்கரையும் கிடைக்கின்றன.

தண்ணீர்ப் பசையின்றி கெட்டியாகக் காய்ச்சப்பட்ட கரும்புச் சாற்றிலிருந்து வெல்லம் எடுக்கப்படுகிறது. வெல்லத்தை விட பனைவெல்லம் இன்னும் சிறந்தது. அதில் பி1, பி2, பி3, பி6, பி12 சத்துகள் அடங்கியிருக்கின்றன. சர்க்கரை தேவைப்படும் இடங்களில் வெல்லம் அல்லது பனைவெல்லம் சேர்ப்பது நல்லதே!

No comments: