வயிறு நிறைய சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல என்பதை நமது முன்னோர்கள் அன்றே மிகத் தெளிவாக சொல்லி வைத்திருக்கின்றார்கள். மூன்றில் ஒரு பங்கு தண்ணீர், மூன்றில் ஒரு பங்கு வெற்றிடம் என்ற அடிப்படையில் தான் நாம் வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும். இப்பழக்கத்தை தொடந்து கடைப்பிடித்து வந்தாலே போதும். நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
இதனை கடைப்பிடிக்காத பட்சத்தில்தான் நோய்கள் எட்டிப் பார்க்கின்றன. அந்த வகையில் தவறான வகையில் தவறான உணவு பழக்க வழக்கத்தால் வருகின்ற பல நோய்களில், இருதய நோய் முக்கியமான இடத்தை வகிக்கிறது. பெரும்பாலும் இருதய நோய் கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளால் தான் வருகிறது. அதற்காக கொழுப்பு தன்மையுள்ள உணவுகளை தவிர்த்து விடுவது பொருத்தமான தீர்வாக இருக்காது. அளவான, ஆரோக்கியமான முறையிலான உணவே, இதற்கு சரியான தீர்வாகும். உதாரணமாக கோழி இறைச்சியை சமைக்கும் போது, தோல் உட்பட கொழுப்புகளை முற்றிலும் அகற்றி விட வேண்டும்.
ஆட்டிறைச்சி சமைக்கும் போது, எண்ணெய் திரளும் கொழுப்புகளை அடியோடு அகற்றுங்கள். பெரும்பாலும் ஆட்டிறைச்சியை நன்றாக அவித்துவிட்டு சமைப்பதால் அதில் இருக்கும் அளவுக்கதிகமான கொழுப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு தடவை பொரியலுக்காக பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அளவுக்கு மீறி பட்டர், மாஜரின் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வெண்ணெய் மற்றும் கேக் போன்ற இனிப்புகளை வாங்கும் போதும், தயாரிக்கும் போதும் முடிந்தளவுக்கு கொழுப்பு தன்மையுள்ள சேர்மானங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.
நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பச்சை மரக்கறி வகைகள், பழ வகைகள், கிழங்கு வகைகள் பருப்பு வகைகளில் அதிகமாக காணப்படுகிறது. சமைப்பதற்காக தேங்காய் எண்ணெய் உட்பட வேறு எந்த எண்ணெயை பயன்படுத்தினாலும், மிகவும் குறைவான அளவிலேயே பயன்படுத்த வேண்டும். எண்ணெய் அதிகமாக சேர்த்தால் தான் சாப்பாடு சுவையாக இருக்கும் என்பதெல்லாம் இல்லை.
சாப்பிட்ட பின்னர் நொறுக்குத் தீனி சாப்பிடுவதை முடிந்தவரைக்கும் தவிர்க்க வேண்டும். அதனால் உடற்பருமன் உங்களை அறியாமலேயே அதிகரிக்கும். வாரத்திற்கு இரண்டு நாட்களாவது நன்றாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினசரி உணவு பழக்க வழக்கத்தை இவ்வாறு மாற்றியமைத்துக் கொண்டாலே, எந்த வகையிலும் இருதய நோய் உட்பட எந்தவொரு நோயும் நெருங்காது.