Pages

Showing posts with label அசிட்டிக் அமிலம். Show all posts
Showing posts with label அசிட்டிக் அமிலம். Show all posts

Sunday, April 27, 2014

பார்லியில் உள்ள சத்துப்பட்டியல்

பார்லி
பார்லி (வாற்கோதுமை) சத்துமிக்க தானிய வகைகளில் ஒன்று. இன்று நீரிழிவு, ரத்த அழுத்த நோயாளிகளின் பிரதான உணவு வகையில் ஒன்றாகவும், ஆரோக்கிய விரும்பிகளின் உணவுப் பட்டியலிலும் தவறாமல் இடம் வகிக்கிறது. இதிலுள்ள சத்துக்களை அறிவோம்...

* பார்லி மிதமான ஊட்டம் தரக்கூடியது. 100 கிராம் பார் லியில் 270 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

* நூறு கிராம் பார்லியில் 54.4 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவும். குடல் பகுதியில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியா நுண்ணுயிர்கள் இந்த நார்ச்சத்துக்களை எளிதில் கரையத்தக்க கொழுப்பு அமிலமாக மாற்றி வழங்கும். அது 'பியூட்ரிக் அமிலம்' எனப்படும். இது உடற்செல்களுக்கான அத்தியாவசிய எரிபொருளாகும்.

* நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் புரப்பியானிக் அமிலம், அசிட்டிக் அமிலம் எனப்படும் இரு கொழுப்பு அமிலங்களையும் உருவாக்குகிறது. தசை மற்றும் நுரையீரல் செல்களின் எரிபொருளாக இவை பயன்படும். இந்த புரப்பியானிக் அமிலம்தான் ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் செயலிலும் பங்கெடுக்கிறது.

* பார்லியில் உள்ள 'பீட்டா குளுகான்' எனும் நார்ப் பொருள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை பித்தநீருடன் கலந்து, கழிவுப் பொருட்களுடன் சேர்த்து அகற்றிவிடுகிறது.

* பார்லியில் 'வைட்டமின் பி' (நியாசின்) நல்ல அளவில் காணப்படுகிறது. அதிக அளவில் பார்லியை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, இதயவியாதியான கார்டியோ வாஸ்குலார் பாதிப்புக்கு நியாசின் எதிர்ப்பு ஆற்றல் வழங்கும். மேலும் கெட்ட கொழுப்புகளான லிப்போ புரோட்டின் மற்றும் கொலஸ்டிராலின் அளவையும் கட்டுப்படுத்தும். ஒரு கப் பார்லி சாப்பிட்டால் தினசரி உடலில் சேர்க்க வேண்டிய 'வைட்டமின் பி' சத்தில் 14.2 சதவீதம் கிடைக்கும்.

* உடலுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்கள் சிறந்த அளவில் காணப்படுகிறது. செலினியம் தினசரி அளவில் 52 சதவீதமும், டிரிப்டோபான் 37.5 சதவீதமும், தாமிரம் 31.4 சதவீதமும், மாங்கனீசு 31 சத வீதமும், பாஸ்பரஸ் 23 சதவீதம் உள்ளன.

* காலை உணவில் பார்லியை அதிகமாக சேர்த்து வர இதய பாதிப்புகளை வெகுவாக கட்டுப்படுத்தலாம். 40 வயது கடந்த பெண்களுக்கு உடல்ரீதியாக பல்வேறு நன்மை வழங்கக் கூடியது பார்லி. மார்பக புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல் தரும்.

* மிகுதியாக காணப்படும் மக்னீசியம், 300 நொதிகளை தூண்டும் துணைக்காரணியாக செயல்படுகிறது. இன்சுலின் சுரப்பதை தூண்டுவதால் நீரிழிவு பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது. பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் தருவதாகவும் உள்ளது.

வழக்கமாக பார்லி சேர்த்துவந்தால் ஆஸ்துமா பாதிப்புகள் அண்டாது. பார்லி தோற்றத்தில் கோதுமையின் சாயலில் இருக்கும். இதனை அப்படியே வேக வைத்து அரிசி சாதம்போல சாப்பிடலாம்.

கோதுமையைப் போலவே மாவாக அரைத்து சப்பாத்தி, கூழ், தோசை, இட்லி என பல உணவுப் பண்டங்கள் தயாரித்து ருசிக்கலாம். பார்லி மாவு கலந்து கேக், இனிப்பு வகைகள் செய்து சாப்பிடலாம். பார்லி சூப் உடலுக்கு தெம்பு தரும். இதயத்துடிப்பு சீராகும். மதுபானம் தயாரிப்பில் நொதித்தலுக்கு பார்லி உதவுகிறது.