விமான போக்குவரத்து சேவையில் விமானி(பைலட்), விமானப் பணிப்பெண்கள் (ஏர் ஹாஸ்டஸ்) ஆகியோர் முக்கியமானவர்கள், ஒரு விமானத்துக்கு விமானிதான் தலைவராக இருப்பார். அவருக்கு உதவியாக துணை விமானி இருப்பார். விமானம் பறக்கும் பயணத்தை திட்டமிடுவது, வானிலை தகவல்களை அறிக்கைகள் மூலம் அறிவது, ஓட்டுவதற்கேற்ப காற்று நிலைக்கு உகந்து நிலையில் விமானம் இருக்கிறதா என அறிதல், விமானத்தில் உள்ள பொருட்களை கண்காணித்தல், விமானம் ஓட்டுவது தொடர்பான தகவல்களை தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அவ்வப்போது தெரிவித்தல் ஆகியவை விமானியின் பணிகள். விமானியாவதற்கு உரிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமானால், அதற்கான உரிமங்களை பெற்றாக வேண்டும்.
மாணவர் பைலட் லைசென்ஸ்:
விமானியாவதற்கு முன் மாணவர் பைலட் லைசென்ஸ் பெற வேண்டும். பிளையிங் கிளப் நிறுவனத்தில் சேர்த்து அதற்கான பயிற்சியைப் பெற்றுத் தேர்ச்சியடைய வேண்டும். லைசென்ஸ் பெற 60 மணி நேரம் விமானத்தில் பறந்திருக்க வேண்டும். இதில் 20 மணி நேரம் பயிற்சியாளருடனும் 20 மணி நேரம் தனியாகவும் பறந்திருக்க வேண்டும். 5 மணி நேரம் நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு பறக்க வேண்டும்.
அத்துடன், ஏர் ரெகுலேஷன், நேவிகேஷன், ஏவியேஷன் மீட்டிரியாலஜி, ஏர்கிராப்ட், என்ஜின் ஆகியவற்றை கையாளும் பயிற்சியையும் பெறவேண்டும். குறைந்தது 17 வயது நிரம்பியவர் இதில் சேரலாம். இயற்பியல், கணிதம் ஆகியவற்றை படித்து, பிளஸ் 2வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மருத்துவத் தகுதிச் சான்றிதழ், செக்யூரிட்டி கிளியரன்ஸ் ஆகியவை பெற்றிருக்க வேண்டும்.
தனியார் பைலட் லைசென்ஸ்:
மாணவர் விமானி உரிமம் பெற்றவர்கள் பயிற்சியாளருடன் சேர்ந்து பறக்கலாம். இது 'டூயல் பிளை' என்று குறிப்பிடப்படுகிறது. இருவராக பறக்கும்போதே பயிற்சியை பெறலாம். 15 மணி நேரம் பயிற்சி பெறுவர். இந்த உரிமத்தைப் பெற மொத்தம் 60 மணி நேரம் பறக்க வேண்டும். இதற்குக் கல்வி தகுதி பிளஸ் 2. டெல்லியிலுள்ள விமானப்படை மத்திய மருத்துவ நிறுவனம் அல்லது பெங்களுருவிலுள்ள நிறுவனத்தில் தகுதிச் சான்றிதழ் பெறவேண்டும். அத்துடன் நுழைவுத் தேர்வையும் எழுத வேண்டும். அதில், ஆங்கில அறிவு, பொது அறிவு, கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய திறன்கள் சோதிக்கப்படும்.
வணிக பைலட்:
வணிக பைல்ட் லைசென்ஸ் பெற, 250 மணி நேரப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். பிளஸ்2 முடித்தவர்கள் தனியார் பைல்ட் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் விமானம் ஒட்டிய அனுபவம் தேவை. உடல் தகுதிச் சான்றிதழ் பெறவேண்டும். விமானம் ஒட்டும் தகுதியைப் பெறுவதற்குப் பி.எஸ்.சி., ஏவியேஷன், பி.இ., ஏர்லைன் இன்ஜ்., அண்ட் மேனேஜ்மென்ட், பி.இ., ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜி., பி.டெக்., ஏரோநாட்டிகல் ஆகிய ஏதாவதொரு படிப்பை முடிக்க வேண்டும்.