பெண்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு உணவுதான் அடிப்படை
கணவன், குழந்தைகள், குடும்பத்தினர் என அனைவரின் உடல்நலனையும் கவனித்துக்கொள்ளும் பெண்கள், தங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. இதனால் 40 வயதை நெருங்குவதற்குள் நடை தளர்ந்து, மூட்டுவலி, முதுகுவலி என முடங்கிப்போய் விடுகின்றனர்.
பெண்கள் வயதுக்கு வந்ததும், இடுப்பு எலும்பு வலுவாக உளுத்தங்களி, உடல் உஷ்ணத்தைக் குறைக்க மணத்தக்காளி, உடலில் தேவையற்ற கொழுப்பை நீக்கி, வலுவைக் கூட்ட கொள்ளு எனப் பெண்களுக்கு பிரத்யேகமான சமையல் அம்மாவின் கைமணத்தில் மணக்கும். ஆனால், இன்றைய டீன் ஏஜ் பெண்களோ, நம் பாரம்பரிய உணவுச்சத்துக்களின் மகத்துவம் தெரியாமல், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர்.
இதனால், இளம் வயதிலேயே ஒபிசிட்டி, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகித் தவிக்கின்றனர். நாம் நன்றாக இருந்தால்தான், நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக இருக்க முடியும் என்பதை, ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். மாதவிடாய், கர்ப்பம், தாய்மை, மெனோபாஸ் என, உடலின் மாற்றங்களை எதிர்கொள்ள, பெண்களுக்கு அதிக பலமும் சக்தியும் தேவை.
அந்த சத்துக்களை உணவின் மூலமே பெற முடியும். கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு இவை ஐந்தும், தேவையான அளவு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்களின் உடல் நலனுக்கு அவசியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுவை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும்.