Pages

Saturday, July 18, 2015

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வினிகர்


சரும பிரச்சனைகளை தீர்க்கும் வினிகர்


சருமத்தை அழகை பராமரிப்பதில் வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது. வினிரை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகம் பொலிவாததோடு, பருக்கள், வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கிவிடும். எனவே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், வினிகரைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். 


ஒரு சிறிய கப் வினிகரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்றமானது நீங்கும். ஒரு சிறிய டேபிள் ஸ்பூன் வினிகரை, முகம் கழுவும் போதோ அல்லது குளிக்கும் போதோ நீரில் கலந்து செய்தால், சருமம் நன்கு மென்மையாவதோடு, பொலிவோடும் இருக்கும். எண்ணெய் பசை சருமத்தினருக்கு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெயானது இருக்கும். 



எனவே ஒரு கப் நீரில் பாதிக்கு பாதி வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கழுவி வந்தால், சருமத்திலிருந்து வெளிவரும் அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, முகம் அழகாக அளவான எண்ணெயோடு வறட்சியின்றி காணப்படும். அதிகப்படியான வெயிலால் சருமத்தில் ஏற்படும் வேனிற்கட்டியை போக்குவதில் வினிகர் உதவியாக உள்ளது. 



மேலும் வினிகர் சருமத்தில் பிஎச் தன்மையை சீராக தக்க வைத்து, சருமத்தை குளிர்ச்சியுடன் வைக்கிறது. பாதத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை போக்குவதற்கு வினிகரை நீரில் கலந்து, அதில் கால்களை 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கால்களில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும். 



குதிகால் வெடிப்பால் அவஸ்தைப்படுபவர்கள், மெருகேற்ற உதவும் கல் கொண்டு, பாதங்களை தேய்த்து, பின் வினிகர் நீரில் பாதங்களை ஊற வைக்க வேண்டும். இதனால் பாத வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் போய்விடும். 



3 ஸ்ட்ராபெர்ரியை மசித்து, அதில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலந்து, 2 மணிநேரம் ஊற வைத்து, இரவில் தூங்கும் முன் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து, காலையில் கழுவினால், கரும்புள்ளிகள் அறவே போய்விடும்.

Thursday, July 2, 2015

குழந்தைகளுக்கு வரும் குடல்புழு தொல்லையும், சிகிச்சையும்


அசுத்தமான தெருவில், மண் தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது ஆகியவை குடல்புழு ஏற்படுவதற்குத் துணைபோகின்றன.
சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் உண்ணும் பழக்கம் இருந்தால் குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும், குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். குடல்புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையிலும் ஆண், பெண் என்று இனமுண்டு.
பெண் புழு இடுகிற முட்டைகள் மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். குழந்தைகள் விளையாடும்போது கை விரல் நகங்களில் புகுந்துகொள்ளும். கைகளை நன்றாகச் சுத்தப்படுத்தாமல் சாப்பிடும்போது உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்குச் சென்று, பொரிந்து ‘லார்வா’எனப்படும் குறும்புழுக்கள் வெளிவரும்.
ஒவ்வொரு லார்வாவும் சிறுகுடலின் சுவரைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குச் சென்று சுமார் நான்கு நாட்கள் அங்கே தங்கும். பிறகு அங்கிருந்து இதயத்துக்குச் சென்று நுரையீரலுக்குள் நுழையும். பிறகு அங்கிருந்து உணவுக் குழாய்க்கு வரும், மீண்டும் இரைப்பை வழியாகக் குடலுக்கு வந்துசேரும் இந்த ‘சுற்றுலா’வுக்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகும்.
அதற்குள் ‘லார்வா’ கட்டத்தில் இருந்தவை முழு புழுக்களாக வளர்ச்சி பெற்றுவிடும். அதன்பிறகு நமக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கும். குடல் புழுவை ஒழிக்கப் பெரியவர்களுக்கு மாத்திரையாகவும் குழந்தைகளுக்குத் திரவ மருந்தாகவும் பல மருந்துகள் கிடைக்கின்றன.
எந்தப் புழுவின் பாதிப்பு உள்ளது என்பதை மலப்பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருத்துவர் யோசனைப்படி மருந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் 100 சதவீதம் அழிந்துவிடும். அதேவேளையில் கீழே சொல்லப்பட்டிருக்கும் சுகாதார முறைகளையும் கடைப்பிடித்தால்தான் குடல்புழுக்கள் மீண்டும் மீண்டும் தொல்லை தராது. 



தவிர்க்க என்ன வழி?

* சுற்றுப்புறச் சுகாதாரம் மேம்பட வேண்டும். 

* குளிப்பறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.

* திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக் கூடாது.

* கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்வதற்குப் பழக்கப்படுத்துங்கள்.

* சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக் கூடாது.

* நகங்களைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும்.


* குழந்தைகள் விரல் சூப்பக் கூடாது.

* குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம்.

* எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

* ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளைக் குடிநீருக்கோ, உணவுக்கோ கொண்டுவருவதில் ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

* சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.

* காய், கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.

* நன்றாகக் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.

* சாப்பிடுவதற்கு முன்பு கைகளைச் சோப்பு போட்டுக் நன்றாக கழுவ வேண்டியது அவசியம்.

* காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும்.

* வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். பித்த வெடிப்பு, சேற்றுப்புண் இருந்தால் உடனே சிகிச்சை பெற்றுவிட வேண்டும். 


* வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அதைத் தூக்கி கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியல் டிப்ஸ்


வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியல் டிப்ஸ்


இவைகளில் எது உங்கள் சருமத்திற்கு ஒத்து வரும் என்று பார்த்து ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள். 


1. பாதாம் எண்ணெய் :  உலர்ந்த சருமத்திற்கு பாதாம் எண்ணெய் தேய்த்து வந்தால் நல்லது. பருக்கள் குழி அடையாளங்களையும் பாதாம் ஆயில் நாளடைவில் நீக்கிவிடும். ஆயில் கிடைக்காவிடில் பாதாமின் தோலுடன் 3 - 5 எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்க்கலாம். 



2. பச்சை நிற ஆப்பிள் :  பச்சை நிற ஆப்பிளின் சாறு தோல் சுருக்கம், அரிப்பு, வெடிப்பு அனைத்திற்கும் மிக நல்லது. 



3. தேன் :  தேனில் பால், தயிர், அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆகும்.  



4. கடலை எண்ணெய் :  1 தேக்கரண்டி கடலெண்ணெயில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் பரு, கரும்புள்ளிகள் வரவே வராது. 



5. மஞ்சள்  கண்களுக்கு கீழே கருவட்டத்தை நீக்க மஞ்சளில் அன்னாசி சாறு சேர்த்து தேய்த்து வரவும்.

Wednesday, May 13, 2015

சுண்டைக்காய் சாப்பிடுவது வயிற்று புண்ணுக்கு நல்லது!


 Image result for sundakkai



சுண்டைக்காய், மருத்துவ குணம் உள்ள காய். கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என, இருவகை உண்டு. சுண்டக்காயை மோரில் ஊற வைத்து, வற்றல் போட்டு வறுத்தும், வற்றல் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளை போக்க நல்ல மருந்தாகும்.

உணவில் மாதம் ஒரு முறை, கசப்பு சுண்டைக்காய் சேர்த்துக் கொண்டால், கிருமித் தொந்தரவு இருக்காது. அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவுக்கும், கிருமிகளுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்தாகும். கசப்பாக இருந்தாலும், உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி, உடலை ஆரோக்கியமாக வைத்து நீண்ட ஆயுளை கொடுக்கிறது.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவை தடுக்கும். கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும். முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உண்டு. இதனால், உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும்; உடல் சோர்வு நீங்கும்.

சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை, சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்களை போக்கும்.

மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி, சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். முற்றிய சுண்டைக்காயை நசுக்கி, மோரில் போட்டு ஊற வைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு, தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம். அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி, சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் நீங்கும். சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் நீங்கும்.

ரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணி. ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்தி வந்தால் பாதிப்பு குறையும். 

ஊறுகாய்க்கு மட்டுமில்லீங்க.... உடல் நலத்துக்கும் நல்லது!


 narthangai க்கான பட முடிவு

நார்த்தங்காயை தமிழகத்தில் ஊறுகாய் போட மட்டுமே பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நார்த்தங்காயில் உடலுக்கு பலன் தரும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. நார்த்தங்காய் மரத்தின் வேர், மலர், கனிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதன் மலர்கள் தசையை இறுக்கி, செயல் ஊக்கியாக விளங்குகிறது.

இதன் வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு முக்கிய மருந்தாகும். கனியின் தோல், வயிற்றுப்போக்கை நிறுத்தும். வயிற்றுப் புண்ணுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது. நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் ரத்தம் சுத்தமடையும். வாதம், வயிற்றுப் புண், வயிற்றுப் புழுக்களை நீக்கி, பசியை அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள், சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வரலாம்.

உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறை மதிய வேளையில் அருந்தி வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் ரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. நார்த்தம் பழத்தை, காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து, அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். ரத்தம் மாசடையும்போது, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற, நார்த்தம் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்சாறு எடுத்து, தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்தி வந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும். சிலர் கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு பெரிதாக பலூன் போல் உப்பி விடும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால், வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப்பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டால், நீண்ட ஆயுளோடு வாழலாம்.

Tuesday, May 12, 2015

உங்கள் குழந்தையை நன்கு சாப்பிட வைப்பது எப்படி?


 


குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது ஒரு கலை. ஆனால் அதை மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து, சில பெற்றோர் பிரயத்தனம் செய்கின்றனர். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு.

சில குழந்தைகள் உணவை விழுங்காமல், அப்படியே வெளியே தள்ளி விடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்துக்கு ஒருமுறை, சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி

உள்ளிட்ட உணவுகளும், ஜூஸ், பால் போன்றவற்றையும் கொடுப்பது அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக்கூழ் என அவர்களுக்கு பிடித்த உணவுகளை அளிப்பது, உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும்.

தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்க வேண்டும். புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவற்றைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்க வேண்டும்.

பிரட், ஆப்பிள், சூப், போன்றவற்றை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள். குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவுக்கு உணவு பிடிக்குமோ, அந்த அளவுக்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்க வேண்டும்.

அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக, எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்தி விடும். புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது, குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கவனித்து, பின்னர் அதிகமாக அளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட, நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்ட வேண்டும். குழந்தையின் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப, உணவை ருசியாக தயாரித்து அளித்தால், குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள். இன்னும் சில குழந்தைகளுக்கு, முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவூட்டுவது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுவி, அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஸ்பூன் கொண்டு உணவு ஊட்டும் போது, எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில், ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது. ஆகவே, பொறுமையாக, லாவகமாக, மென்மையாக உணவூட்டுவதே சரியானது.

மனஅழுத்தத்தை விரட்டியடிக்கலாம்!


 

காலம், நேரம் கடக்கும் ஒவ்வொரு வினாடியும் மனிதனின் லட்சியத்திற்கான பாதையும் மாறி வருகிறது. இப்படி, பம்பரமாய் சிலர் ஒருபுறம் சுற்ற, மறுபுறம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் போரடித்து, தனிமையால் மன அழுத்தத்தில் உள்ளாகுபவர்கள் அதிகம்.

வேலைக்கு சென்றால் ஒரு விதமான மன அழுத்தம் என்றால், வேலைக்கு செல்லாமல் தனிமையில் வாடும் மனஅழுத்தம், சிலரை மனநோயாளியாக்கி விடுகின்றன. சிலரை, அய்யோ பைத்தியம் பிடிச்சிரும் போல் இருக்கிறதே என்று புலம்பவும் வைக்கின்றன. காலை எழுந்தவுடன், வீட்டில் இருக்கும் அனைவரையும் வேலைக்கும், பள்ளிக்கும் அனுப்பி விட்டு, வீட்டின் அனைத்து வேலையையும் முடித்து, அதற்கு மேல் "டிவி' பார்த்து சலிப்பவர்களே அதிகம்.
இப்படி வீட்டில் இருந்தபடியே, தனிமையை தவிர்த்து, மன அழுத்தம் விடுபட பல வழிமுறைகள் உண்டு. எப்படி?

வீட்டில் இருந்தபடியே கைத்தொழில் செய்யலாம். அதாவது இத்தொழில் அதிக லாபம் இல்லாமலும், மனதிற்கு அமைதியை தருவதாகவும் இருந்தால் சரி என நினைப்பவர்கள், தங்களுக்கு பிடித்தமான ஒன்றை முதலில் தேர்ந்தெடுங்கள். அது ஓவியம் வரைதல், பெயின்டிங், பூச்செடிகள் வளர்த்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

முதலில், நாம் தேர்ந்தெடுத்த ஒன்றில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். வீட்டிலிருந்து அனைவரும் சென்றபின், பணியில் கவனம் செலுத்த துவங்குங்கள். மாலை அவர்கள் வரும் வரையில் ஈடுபட்டிருக்கும் பட்சத்தில், நேரம் போவதும் தெரியாது; வாழ்வை வீணடிப்பதாகவும் தோன்றாது.

தனிமை, சில நேரத்தில் கோபத்தை உண்டாக்கலாம். நம்மிடம் வந்து பேசுபவர்களுக்கு பதில் சொல்லக்கூட பிடிக்காது. இப்படி இருப்பவர்கள், வீட்டுப் பக்கத்தில் இருக்கும், மரங்களில் அமரும் கிளி, குருவிகளின் ஓசையை பதிவு செய்து சேகரித்து வைக்கலாம்.

* வீட்டில் தோட்டம் உருவாக்கி, செடிகளை பதியம் போட்டு, செடி, மரங்கள் விற்பனை செய்யலாம்.
* பானை, பிளாஸ்டிக் பெட்டிகள், கண்ணாடிகளில் நவீன தொழில்நுட்பம் கற்று, அதில் சாதிக்கலாம்.
* உபயோகம் இல்லாமல் வீணாகும் பொருட்களை வைத்து, வீட்டு அலங்கார பொருட்களை செய்யலாம். இதனை சந்தைபடுத்தினால் கிடைக்கும் லாபம், வாழ்வில் புதிய நம்பிக்கையையும் பிடிப்பையும் தரும்.
* கற்று கொடுப்பதில், ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு, வித்தியாசமான முறையில், செய்முறை விளக்கத்துடன் சொல்லி தரலாம்.

இதை படிக்கும் போதே, வீட்டில் இருப்பவர்கள் மனதில், அடுத்து நாம் என்ன செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியிருக்கும். இன்றே புறப்படுங்கள். வித்தியாசமான முறையில், ஒவ்வொன்றையும் செய்து அசத்துங்கள்... தனிமைக்கு குட்பை சொல்லி...

சுவாரஸ்யத்துக்கு வெல்கம் சொல்லலாம்.