Pages

Showing posts with label சுண்டைக்காய். Show all posts
Showing posts with label சுண்டைக்காய். Show all posts

Wednesday, May 13, 2015

சுண்டைக்காய் சாப்பிடுவது வயிற்று புண்ணுக்கு நல்லது!


 Image result for sundakkai



சுண்டைக்காய், மருத்துவ குணம் உள்ள காய். கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என, இருவகை உண்டு. சுண்டக்காயை மோரில் ஊற வைத்து, வற்றல் போட்டு வறுத்தும், வற்றல் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளை போக்க நல்ல மருந்தாகும்.

உணவில் மாதம் ஒரு முறை, கசப்பு சுண்டைக்காய் சேர்த்துக் கொண்டால், கிருமித் தொந்தரவு இருக்காது. அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவுக்கும், கிருமிகளுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்தாகும். கசப்பாக இருந்தாலும், உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி, உடலை ஆரோக்கியமாக வைத்து நீண்ட ஆயுளை கொடுக்கிறது.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவை தடுக்கும். கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும். முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உண்டு. இதனால், உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும்; உடல் சோர்வு நீங்கும்.

சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை, சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்களை போக்கும்.

மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி, சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். முற்றிய சுண்டைக்காயை நசுக்கி, மோரில் போட்டு ஊற வைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு, தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம். அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி, சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் நீங்கும். சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் நீங்கும்.

ரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணி. ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்தி வந்தால் பாதிப்பு குறையும்.