Pages

Showing posts with label குடல்புழு தொல்லை. Show all posts
Showing posts with label குடல்புழு தொல்லை. Show all posts

Thursday, July 2, 2015

குழந்தைகளுக்கு வரும் குடல்புழு தொல்லையும், சிகிச்சையும்


அசுத்தமான தெருவில், மண் தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது ஆகியவை குடல்புழு ஏற்படுவதற்குத் துணைபோகின்றன.
சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் உண்ணும் பழக்கம் இருந்தால் குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும், குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். குடல்புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையிலும் ஆண், பெண் என்று இனமுண்டு.
பெண் புழு இடுகிற முட்டைகள் மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். குழந்தைகள் விளையாடும்போது கை விரல் நகங்களில் புகுந்துகொள்ளும். கைகளை நன்றாகச் சுத்தப்படுத்தாமல் சாப்பிடும்போது உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்குச் சென்று, பொரிந்து ‘லார்வா’எனப்படும் குறும்புழுக்கள் வெளிவரும்.
ஒவ்வொரு லார்வாவும் சிறுகுடலின் சுவரைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குச் சென்று சுமார் நான்கு நாட்கள் அங்கே தங்கும். பிறகு அங்கிருந்து இதயத்துக்குச் சென்று நுரையீரலுக்குள் நுழையும். பிறகு அங்கிருந்து உணவுக் குழாய்க்கு வரும், மீண்டும் இரைப்பை வழியாகக் குடலுக்கு வந்துசேரும் இந்த ‘சுற்றுலா’வுக்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகும்.
அதற்குள் ‘லார்வா’ கட்டத்தில் இருந்தவை முழு புழுக்களாக வளர்ச்சி பெற்றுவிடும். அதன்பிறகு நமக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கும். குடல் புழுவை ஒழிக்கப் பெரியவர்களுக்கு மாத்திரையாகவும் குழந்தைகளுக்குத் திரவ மருந்தாகவும் பல மருந்துகள் கிடைக்கின்றன.
எந்தப் புழுவின் பாதிப்பு உள்ளது என்பதை மலப்பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருத்துவர் யோசனைப்படி மருந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் 100 சதவீதம் அழிந்துவிடும். அதேவேளையில் கீழே சொல்லப்பட்டிருக்கும் சுகாதார முறைகளையும் கடைப்பிடித்தால்தான் குடல்புழுக்கள் மீண்டும் மீண்டும் தொல்லை தராது. 



தவிர்க்க என்ன வழி?

* சுற்றுப்புறச் சுகாதாரம் மேம்பட வேண்டும். 

* குளிப்பறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.

* திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக் கூடாது.

* கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்வதற்குப் பழக்கப்படுத்துங்கள்.

* சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக் கூடாது.

* நகங்களைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும்.


* குழந்தைகள் விரல் சூப்பக் கூடாது.

* குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம்.

* எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

* ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளைக் குடிநீருக்கோ, உணவுக்கோ கொண்டுவருவதில் ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

* சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.

* காய், கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.

* நன்றாகக் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.

* சாப்பிடுவதற்கு முன்பு கைகளைச் சோப்பு போட்டுக் நன்றாக கழுவ வேண்டியது அவசியம்.

* காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும்.

* வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். பித்த வெடிப்பு, சேற்றுப்புண் இருந்தால் உடனே சிகிச்சை பெற்றுவிட வேண்டும். 


* வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அதைத் தூக்கி கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.