நார்த்தங்காயை தமிழகத்தில் ஊறுகாய் போட மட்டுமே பலர் பயன்படுத்தி
வருகின்றனர். ஆனால், நார்த்தங்காயில் உடலுக்கு பலன் தரும் பல மருத்துவ
குணங்கள் உள்ளன. நார்த்தங்காய் மரத்தின் வேர், மலர், கனிகள் அனைத்தும்
மருத்துவ குணம் கொண்டவை. கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு
அமிலங்கள் உள்ளன. இதன் மலர்கள் தசையை இறுக்கி, செயல் ஊக்கியாக
விளங்குகிறது.
இதன் வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு முக்கிய மருந்தாகும். கனியின் தோல், வயிற்றுப்போக்கை நிறுத்தும். வயிற்றுப் புண்ணுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது. நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் ரத்தம் சுத்தமடையும். வாதம், வயிற்றுப் புண், வயிற்றுப் புழுக்களை நீக்கி, பசியை அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள், சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வரலாம்.
உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறை மதிய வேளையில் அருந்தி வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் ரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. நார்த்தம் பழத்தை, காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
நார்த்தம் பழத்தை சாறு எடுத்து, அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். ரத்தம் மாசடையும்போது, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற, நார்த்தம் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.
கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்சாறு எடுத்து, தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்தி வந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும். சிலர் கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு பெரிதாக பலூன் போல் உப்பி விடும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால், வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப்பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டால், நீண்ட ஆயுளோடு வாழலாம்.