Pages

Tuesday, May 12, 2015

உங்கள் குழந்தையை நன்கு சாப்பிட வைப்பது எப்படி?


 


குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது ஒரு கலை. ஆனால் அதை மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து, சில பெற்றோர் பிரயத்தனம் செய்கின்றனர். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு.

சில குழந்தைகள் உணவை விழுங்காமல், அப்படியே வெளியே தள்ளி விடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்துக்கு ஒருமுறை, சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி

உள்ளிட்ட உணவுகளும், ஜூஸ், பால் போன்றவற்றையும் கொடுப்பது அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக்கூழ் என அவர்களுக்கு பிடித்த உணவுகளை அளிப்பது, உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும்.

தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்க வேண்டும். புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவற்றைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்க வேண்டும்.

பிரட், ஆப்பிள், சூப், போன்றவற்றை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள். குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவுக்கு உணவு பிடிக்குமோ, அந்த அளவுக்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்க வேண்டும்.

அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக, எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்தி விடும். புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது, குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கவனித்து, பின்னர் அதிகமாக அளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட, நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்ட வேண்டும். குழந்தையின் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப, உணவை ருசியாக தயாரித்து அளித்தால், குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள். இன்னும் சில குழந்தைகளுக்கு, முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவூட்டுவது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுவி, அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஸ்பூன் கொண்டு உணவு ஊட்டும் போது, எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில், ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது. ஆகவே, பொறுமையாக, லாவகமாக, மென்மையாக உணவூட்டுவதே சரியானது.

No comments: