ஜார்ஜ் வாஷிங்டன் பற்றிய பிரபல கதை ஒன்று இன்றும்
அமெரிக்காவில் பிரபலம். வாஷிங்டனின் அப்பா ஆசையாக ஒரு செர்ரி மரத்தை
வளர்த்து வந்தாராம். ஒருநாள் வாஷிங்டனுக்கு புதிய கோடாலி ஒன்று கிடைக்க,
அதைக் கொண்டு கண்ணில் படுகிற மரம், செடிகளை எல்லாம் வெட்டி
எறிந்திருக்கிறார். அவர் வெட்டித் தள்ளியதில் அப்பா வளர்த்த செர்ரி மரமும்
ஒன்று. வெட்டப்பட்ட மரத்தைப் பார்த்து வாஷிங்டனின் அப்பாவுக்கு அதிர்ச்சி.
மரத்தை யார் வெட்டியது என அவர் எல்லோரிடமும் கேட்க, வாஷிங்டன், தனது தவறை
தைரியமாக ஒப்புக் கொண்டாராம். உண்மை தெரிந்து கோபத்தில் ஏதேனும் செய்து
விடுவாரோ என எல்லோரும் நடுங்கிக் கொண்டிருக்க, வாஷிங்டனின் அப்பாவோ,
அமைதியாகி இருந்தார். மகனை அழைத்து, ‘நான் கோபக்காரன்னு தெரிஞ்சும், நீ
உண்மையை சொன்னே பார்த்தியா... அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சது.
செர்ரி மரம் வெட்டப்படாம இருந்திருந்தா எனக்குக் கிடைச்சிருக்கிற
சந்தோஷத்தைவிட, நீ உண்மை பேசினதுல எனக்குப் பெரிய சந்தோஷம்...” என்று
மகனின் நேர்மையைப் பாராட்டினாராம். வாஷிங்டனின் மனத்தில் இது ஆழமாகப்
பதிந்து போனது. அதன்பிறகு, தன் வாழ்நாளில் எந்தச் சூழலிலும் எத்தனை பெரிய
விஷயத்துக்கும் பொய் சொல்வதில்லை என்கிற தன் கொள்கையில் உறுதியாக
இருந்திருக்கிறார்.
அமெரிக்காவில் இன்றும் பிரபலமாக சொல்லப்படுகிற
கதை இது. உண்மையென நிரூபிக்கப்படாத கதை என்றாலும், பிள்ளைகளுக்கு
நேர்மையைப் போதிக்க, அங்கே அனேக பெற்றோரும் இந்தக் கதையைச் சொல்லியே
வளர்ப்பார்கள். நேர்மை என்பது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. பல நல்ல
மனிதர்களும் வாழ்க்கையில் வழுக்கி விழக் காரணமே நேர்மையில் சறுக்கியது
தான். ஒரு காலத்தில் பெரிய தியாகிகளாகஅறியப்பட்டவர்களாக, பல லட்சியங்களை
சுமந்தவர்களாக இருந்த பலரும், ஒரு கட்டத்துக்குப் பிறகு, அவற்றிலிருந்து
நகர்ந்து, ‘நேர்மை அத்தனை முக்கியமில்லை’ என்கிற முடிவுக்கு வந்ததால்,
சமூகக் குற்றங்களில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக் கொண்ட கதைகளைக்
கேள்விப்படுகிறோம்.
நேர்மையிலிருந்து பிறழ்கிற இந்த குணம், குடும்பங்களில் - தம்பதிக்குள்
சர்வசாதாரணமாக நடக்கிற ஒன்று. கணவனும் மனைவியும் நேர்மையுடன் வாழும் போது,
அவர்களுக்குள் பரஸ்பர நெருக்கமும் மரியாதையும் கூடும். இருவரில் யாரேனும்
ஒருவர் அதிலிருந்து விலகும் போது இந்த இரண்டும் கெட்டுப் போகும். கணவர் பல
சந்தர்ப்பங்களில் மனைவியிடம் பொய் சொல்லியிருப்பார். மனைவிக்கும் அப்படி
கணவரிடம் பொய் சொல்ல வேண்டிய தருணம் ஒன்று வரும். ‘ஒரே ஒரு பொய்தானே...
அவர் நம்மகிட்ட சொல்லாத பொய்யா?’ என்கிற நினைப்பில் அவரும் பொய் சொல்லப்
பழகுவார். அது போகப் போக ஒரு பழக்கமாகவே மாறும். உண்மையை சொல்ல நிறைய
வாய்ப்புகள் இருந்தாலுமே, ‘எவ்வளவு தூரம் பொய் சொல்ல முடியும் எனப்
பார்ப்போமே’ என்று பார்ப்பதற்காகவாவது அப்படிச் செய்யத் தூண்டும். ஒருநாள்
தம்பதிக்குள் ஒரு பிரச்னை பூதாகரமாக வெடித்துக் கிளம்பும் போது, இருவரும்
ஒருவருக்கொருவர் நேர்மையின்றி நடந்து கொண்டது தெரிய வரும். ‘நீ என்னை
ஏமாத்திட்டே...’ என்கிற பேச்சு எழும். இருவருமே அந்த நேர்மையின்மைக்குப் பல
வருடங்களாகப் பழகியிருப்பார்கள் என்பதுதான் உண்மை.
சரி... நேர்மையற்றவர்களை எப்படி அடையாளம் காண்பது?
♦
நேர்மை தவறி நடப்பவர்கள் எப்போதுமே தன் தவறை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் அடுத்தவரையே காரணம் காட்டுவார்கள். சூழலைக்
குறை சொல்வார்கள். எதற்கும் பொறுப்பெடுத்துக் கொள்ள மாட்டார்கள். தப்பு
செய்தது உறுதி செய்யப்பட்டாலுமே, அதன் பின்னணியில் உள்ள தன் உள்நோக்கம்
சரிதான் என விவாதம் செய்வார்கள்.
♦ ஒழுக்கத்தையும் நேர்மையையும்
பற்றி அடுத்தவருக்கு போதனை செய்வார்கள். ஆனால், அவற்றை மீறியே
நடப்பார்கள். தான் தன் வாழ்க்கைத்துணையை விட எப்போதும், எல்லா விதங்களிலும்
மேல் என நம்புவார்கள். நேர்மையாக இருப்பதென்பது முட்டாள்களின் அடையாளம் என
நினைப்பார்கள்.
♦ நேர்மையான நல்ல மனிதர்கள் எந்த ஒரு செயலைச்
செய்வதற்கு முன்பும், ‘என் தகுதிக்கு இந்தச் செயலைச் செய்யலாமா?’ எனக்
கேட்பார்கள். நேர்மையற்றவர்கள் என்றால், ‘இந்தத் தவறை நான் செய்தால்
அதிலிருந்து தப்பிக்க முடியுமா?’ எனக் கேட்பார்கள். முடியும் எனத்
தெரிந்தால், அந்தத் தவறை செய்யத் தயங்க மாட்டார்கள். கணவன் -
மனைவிக்குள்ளும் இதுவே நடக்கிறது. ‘நான் செய்வது சரியா?’ எனக் கேட்கிற
துணையைவிட, ‘இதிலிருந்து தப்பித்து விடுவேனா?’ என யோசிக்கிறவரே அதிகமாக
இருக்கிறார்கள்.
♦ சின்னச் சின்ன பொய்கள் தீங்கற்றவை என
நினைப்பார்கள். அப்படி சின்னதாக பொய் சொல்லிப் பழகுகிறவர்கள், தொடர்ச்சியாக
அடுத்தடுத்த நேர்மையற்ற காரியங்களையும் செய்ய ஆரம்பிப்பார்கள். திருட்டு,
குடி, வாழ்க்கைத்துணை அல்லாத வேறொரு நபருடன் உறவு, போதைப் பழக்கம் என
அந்தத் தொடர்ச்சி எல்லைகள் மீறிப் போகலாம். துணைக்குத் தெரியாத வரையில்
தப்பித்துக் கொண்டிருப்பவர்கள், ஒரு நாள் தெரிய வரும் போது, அதை மிகப்
பெரிய நம்பிக்கைத் துரோகமாகப் பார்த்து, நிரந்தரப் பிரிவு வரை
போவார்கள்.நேர்மையற்ற வாழ்க்கையில் விழுந்து விடாமலிருக்க என்ன செய்யலாம்?
♦
நமக்கு நாமே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது. துணையிடம் சின்ன
பொய்யைக் கூட சொல்வதில்லை என்கிற அந்த உறுதியான ஒப்பந்தம், நிச்சயம் தவறு
செய்யத் தூண்டாது.
♦ நேர்மையற்று நடக்கிற துணையிடம், தன்
அதிருப்தியை கோபப்படாமலும் அதே நேரம் தெளிவாகவும் கண்டிப்பாகவும்
வெளிப்படுத்துவது. உதாரணத்துக்கு ‘உன்னுடைய நேர்மையற்ற செயலை நீ
தொடர்ந்தால், உறவைத் துண்டித்துக் கொள்வதைப் பற்றி யோசிக்கக் கூட நான்
தயங்க மாட்டேன்’ எனச் சொல்லி வைக்கலாம்.
♦ நேர்மையாக இருப்பது பாதுகாப்பான உணர்வைத் தரும் என நம்பலாம்.
♦
பொய்யை நியாயப்படுத்த முயற்சி செய்வதை நிறுத்த வேண்டும். துணையிடமிருந்து
தப்பிக்க, பொய்யை மறைக்கவோ, நியாயப்படுத்தவோ செய்கிற முயற்சிகள்,
ஆரம்பத்தில் எளிதாக இருந்தாலும், போகப் போக கணவன் அல்லது மனைவிக்கு தன்
துணையின் மீதான நம்பிக்கையின்மையை வளர்க்கும்.
♦ தவறுகளை
ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ பொய்யை சொல்லி சிக்கலை
ஏற்படுத்தி விட்டீர்களா? அதை ஏற்றுக் கொண்டு, ‘எதிர்காலத்தில் அந்தத்
தவறைத் தொடரவே மாட்டேன்’ என துணைக்கு உறுதியளியுங்கள். இதற்கு மிகப் பெரிய
துணிச்சல் வேண்டும். எல்லோருக்கும் சாத்தியமாகாதது. பழகிக் கொண்டாலோ, இந்த
மனப்போக்கானது, துணையிடம் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வளர்த்து
விடும்.
♦ ‘நேர்மையாக இருந்தால் பிழைக்கவே முடியாது’ என்பது அதை
கோட்டை விடுகிற பலருடைய வாதம். உண்மையில் நேர்மையின்மை தான் ஒருவரின்
வாழ்க்கையையே நாசம் செய்யக்கூடியது. பணம், புகழ், வசதிக்கு ஆசைப்பட்டு,
நேர்மையின்மையைப் புறந்தள்ளி விட்டு, பிறகு வாழ்க்கையை இழந்து நிற்கிற
எத்தனையோ நடிகைகளைப் பற்றியும் தற்கொலை முடிவு வரை போகிற அவலத்தையும்
அடிக்கடி கேள்விப்படுகிறோமில்லையா...நேர்மையின்மை என்கிற காரணத்தினால்தான்
அமெரிக்காவில் 50 சதவிகித திருமணங்கள் இரண்டே வருடங்களில் முடிவுக்கு
வருகின்றன. நேர்மையாக வாழ்வதென்பதை ஒரு சுவாரஸ்யமான சவால் என்றே சொல்ல
லாம். இதுவரை எப்படியோ.... இனி நேர்மையாக வாழ்வது என்கிற முடிவுக்கு
வந்துவிட்டீர்கள் என்றால், செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உங்களை நீங்களே சில
கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
♦ நான் நேர்மையாக இந்தக் காரியத்தைச் செய்கிறேனா?
♦ நான் செய்கிற இந்த விஷயம் யாரையாவது காயப்படுத்துமா? யாருக்காவது உதவுமா?
♦ என்னுடைய தேர்வு எனக்கு மட்டுமே அமைதியையும்
சந்தோஷத்தையும் தருமா? என்னைச் சார்ந்தவர்களுக்கும் தருமா? இப்படி சுய
பரிசீலனை செய்து கொண்டு வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கப்
பழகினால் நேர்மை உங்களுக்கு நட்பாகும். மகிழ்ச்சி என்பது நமக்குக் கிடைக்கிற
பரிசல்ல... அது நாம் செய்கிற செயல்களின் விளைவு. துன்பம் என்பதும் நமக்கான
தண்டனையல்ல... அதுவும் நமது செயல்களின் விளைவுதான். மகிழ்ச்சியை
நமதாக்கிக் கொள்ள வேண்டும் என்றால், நேர்மையாக நடந்து கொள்ளப் பழகுவதுதான்
ஒரே வழி. அது உங்கள் கைகளில்தான் உள்ளது.