Pages

Friday, May 2, 2014

உங்கள் குழந்தையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

குழந்தை
ஒரு மனிதனுக்கு எல்லா செல்வங்களையும் விட சிறந்தது குழந்தைச் செல்வம் தான். அந்த குழந்தையின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதில் அளவில்லா இன்பம். சில சமயங்களில் குழந்தையின் வளர்ச்சிப் படிகள் சீறாக அமைவதில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளை எவ்வாறு கண்டு கொள்வது.

அவற்றை எப்படி சரி செய்வது என்பதை பற்றி விளக்குவதே இந்த கட்டுறையின் நோக்கம். ஒரு குழந்தை கருவில் இருந்து தான் அதன் முதல் வளர்ச்சி தொடங்குகின்றது. குழந்தை பிறப்பிற்கு பின் உள்ள வளர்ச்சிப்படிகளைப் பற்றி பார்ப்போம். குழந்தையின் வளர்ச்சியை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. உடல் சார்ந்த வளர்ச்சிகள்

2. அறிவு சார்ந்த வளர்ச்சிகள் இதில் உடல் சார்ந்த வளர்ச்சி என்பது குழந்தை பிறந்தது முதல் நடக்கும் வரை உள்ள பல்வேறு வளர்ச்சிப் படிகள். அதாவது குழந்தை பிறந்து 3 முதல் 4 மாதத்திற்குள் காலை நிற்க வேண்டும். 4 முதல் 5 மாதத்தில் திரும்பி படுத்தல்,

6-7 மாதத்தில் நெஞ்சால் தேய்த்துக் கொண்டு முன்னே நகருதல், 7-8 மாதத்தில் கைகளை ஊன்றி உட்காருதல், 8-9 மாதத்தில் தவழுதல், 9-10 மாதத்தில், உதவியுடன் பிடித்துக் கொண்டு நிற்றல், 10-11 மாதத்தில் உதவியுடன் நடத்தல்,

11-12 மாதத்தில் தனியாக நடத்தல், 14-18 மாதங்களில் மாடிப்படி ஏறுதல், 18-24 மாதங்களில் மாடிப்படி இறங்குதல், இந்த வளர்ச்சிப்படிகள் ஒன்றி அல்லது இரண்டு மாதங்கள் முன் பின் நடக்கலாம். ஆனால் அதைவிட அதிகமாக (இரண்டு மாதங்கள் கழிந்தும்) மாதங்கள் கடந்தும் வளர்ச்சிப்படியில் மாற்றம் இல்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அனுகி அதற்கான மருத்துவத்தை ஆரம்பிக்க வேண்டும்.

ஏனென்றால் சில பெற்றோர்கள் சரியான மாதத்தில் குழந்தையின் வளர்ச்சிப்படி இல்லை என்றாலும் அதை உடனடியாக கவனிக்க மறந்து விடுகின்றனர். அல்லது நமது குடும்பததில் எல்லோரும் சற்று தாமதமாகத்தான் நடந்தார்கள் என்று எண்ணி குழந்தையை வீட்டிலே வைத்து விடுகின்றனர். பின் தாமதமாக பயிற்சியளிப்பது மிக குறைவான முன்னேற்றத்தையே தரும்.

2. அறிவு சார்ந்த வளர்ச்சிப் படிகள்:- குழந்தையின் அறிவு சார்ந்த வளர்ச்சிப் படிகள் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே நம்மால் கண்டு கொள்ள முடியும். எளிமையாக கண்டு கொள்ள நான் இங்கு குழந்தையின் சில நடவடிக்கைகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

1. குழந்தையை கூப்பிடும் போது திரும்பிப் பார்க்காமல் இருத்தல்.

2. குழந்தையிடம் பேசும் போது முகத்தை பார்க்காமல் இருத்தல்.

3. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் இருந்தல்.

4. தனியாக விளையாடுதல்.

5. சில சமயங்களில் அடம் பிடித்தல்/ அழுது கொண்டே இருத்தல்.

6. ஓரிடத்தில் அமராமல் சுற்றிக் கொண்டே இருத்தல்.

7. பொது இடங்களில் சுய கட்டுப்பாடு இன்றி அழுதல், அடம் பிடித்தால், மற்றவர்களுடன் பழக மறுத்தல்.

8. பொருட்களை உடைத்தல்/ தூக்கி எறிதல்.

9. இயற்கை உபாதையை கட்டுப்பாடு இன்றி இருக்கும் இடத்திலேயே கழித்தல்.

10. 1 வயதில் பேசிய குழந்தை 1 வயது முதல் பேசாமல் இருத்தல்.

11. வயதுக்கேற்ற புரிதல், பேசுதல் இல்லாமல் இருத்தல்.

12. தனியாக அர்த்தமற்ற வார்த்தைகளால் பேசுதல் அல்லது கத்துதல்.

இது போன்ற செயல்களை நாம் வீட்டில் கவனித்தால் உடனடியாக இதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும். பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் கவனிக்க வேண்டியவை.

1. பள்ளியில் ஓரிடத்தில் அமராமல் சுற்றித்திரிதல்.

2. தான் கொண்டு சென்ற பொருட்களை தொலைத்து விடுதல்.

3. சரியாக புரிந்து கொள்ளாமல் இருத்தல்.

4. கையெழுத்து சரியாக இல்லாமல் இருத்தல்.

5. கவனக்குறைவுடன் இருத்தல்.

6. (spelling mistake) எழுத்துப்பிழை உடன் எழுதுதல்.

7. மற்ற குழந்தைகளுடன் ஒத்துக் போகாமல் இருத்தல்.

8. home work சரியாக செய்யாமல் இருத்தல்.

9. வயதுக்கேற்ற பேச்சு இல்லாமல் இருத்தல்.

10. படித்ததை எளிதில் மறந்து விடுதல்.

11. (board copy) கரும் பலகையை பார்த்து எழுதாமல் இருத்தல்.

இது போன்ற பிரச்சினைகளை உங்கள் குழந்தைகளிடத்தில் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்.

பூசணிக்காய் மருத்துவ பயன்கள்

பூசணிக்காய்
கோடைக்காலத்தில் வெப்பத்தினால் உடலில் அதிகம் உண்டாகும் வெப்பத்தை பூசணிக்காய் தணிக்கிறது. அதனால் இதைக் கோடைப் பூசணி என்றும் வழங்குவார்கள்.  உணவுகளுக்காகவும் மருத்துவக் குணங்களுக்காவுமே பூசணியைப் பயிர் செய்கின்றனர்.

இது படர் கொடியைச் சேர்ந்தது.  இக்காய்கறி பெண்களுக்கு ஏற்படும் வலிப்பு நோய், சிறுநீர் பிரியாமை முதலியவற்றைக் குணப்படுத்தி விடுகிறது. 1 கிராம் பூசணியில் கிடைக்கும் கலோரி 15 தான். இதனால் நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச் சதை நோயாளிகளும் இதைச் சமைத்து உண்ணலாம்.

உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது. சிறுநீர் நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது. பாலுணர்ச்சியைத் தூண்டுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கிவிடுகிறது.

மேற்கண்ட அனைத்து நன்மைகளையும் பெறப் பூசணிக்காயைச் சமைத்து உண்டால் போதும், மனத்திற்கு அமைதி ஏற்படும். நன்கு பழுத்த பூசணியின் சதையை மட்டும் எடுத்துக் கொதிக்கும் தண்ணீரில் சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிப் போடவும். ஆறியதும் இரு தேக்கரண்டி சர்பத் சேர்த்து அருந்தவும்.

இது முக்கியமான மருந்தாகும். இதயம் பலகீனமாய் உள்ளவர்கள், இரத்த சோகை நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடல் உடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் இந்த மருந்தை தினமும் (ஒருவேளை) தயாரித்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், உடலின் வெப்பம் தணியவும், ஆணின் உயிரணுக்கள் அடர்த்தியுடன் வெளிப்படவும் இந்த மருந்தை அருந்த வேண்டும். பூசணியின் சதையை மட்டும் எடுத்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். பிறகு, அதை இடித்துப் பொடி செய்து சாப்பிட்டால் இரத்த வாந்தி, கோழை முதலியன குணமாகும்.

மூலம், சிறுநீர் ஆகியவற்றில் வரும் இரத்தம், நுரையீரல்கள் மற்றும் மூக்கு வழியாக வரும் இரத்தம் முதலியவற்றை இறுகி உறையச் செய்ய முடியும். இதற்காகத் தோல் நீக்கிய பூசணிக்காய்த் துண்டுகளை மிக்ஸி மூலம் சாறாக மாற்றி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால் போதும்.

இரண்டு மூன்று முறை இவ்வாறு அருந்தியதுமே இரத்தம் உறைந்து விடும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறவும் பூசணிக்காயை உணவில் சேர்ப்பது நலம். பூசணிக் கொடியின் இளந்தளிர் இலைகளுக்கும் இதே மருத்துவக் குணங்கள் உள்ளன.

பழுத்த பூசணியின் சதையைச் சாறாக்கிக் சர்பத் சேர்த்து அருந்தினால் உடல் வெப்பம் தணியும்; குளிர்ச்சி உண்டாகும். சூடான தோசை வார்க்கும் தட்டில் பூசணியைப் பிழிய வேண்டும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அழுத்தினால் போதும். அதில் கிடைக்கும் சாற்றுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து அருந்த வேண்டும்.

தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் வயிற்றுப் புண் முற்றிலும் குணமாகும். இந்தச் சாறு அருந்திய மூன்று மணி நேரத்திற்குப் பிறகே வேறு வகையான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். பூசணியின் விதைகள் குடல் புழுக்களை அழிக்கும் தன்மையைப் பெற்றுள்ளன.

தோல் நீக்காமல் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து இந்த விதைகளைச் சாப்பிட வேண்டும். இதன் மூலம் குடலில் உள்ள எல்லா வகையான புழுக்களும் அகன்றுவிடும். பூசணிக்காயின் விதைகளை அகற்றிவிட்டுச் சதையை மட்டும் வேக வைக்க வேண்டும். புண்களின்மீது இந்தச் சதையை நன்கு பிசைந்து வைத்துக் கட்ட வேண்டும்.

புண்களினால் ஏற்படும் கெட்ட நாற்றம் நீங்கி, புண்கள் குணமாகும். வெளியில் பச்சை நிறத் தோலுடன் காட்சி அளிக்கும் பூசணிக்கு கல்யாணப் பூசணிக்காய் என்று பெயர். இதில் சதை அதிகம் இருக்கும். இதுவும் காக்கை வலிப்பு, நரம்புக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள் முதலியவற்றைக் குணமாக்குகிறது.

எனவே, பூசணிக்காயை உங்கள் உணவில் ஒதுக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.  இதன் மருத்துவப் பயனையும் சத்துணவையும் அறிந்தால் உணவாகப் பயன்படுத்தி உடல் நலம் பெறுவார்கள் என்பது உறுதி.

Tuesday, April 29, 2014

பேரிக்காயின் சத்துப்பட்டியல்

பேரிக்காய்
* ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை பேரிக்காய்கள். 'ரோசாசியே' தாவர குடும்பத்தை சேர்ந்த பேரிக்காயின் அறிவியல் பெயர் 'பைரஸ் கமியூனிஸ்'. பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களிலும், உருண்டை, மணி வடிவங்களிலும் பேரிக்காய்கள் விளைகின்றன. ஆசிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் பேரிக்காய் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.

* உடலிற்கு வலிமையளிக்கக் கூடிய நார்சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ப் பொருட்கள் காணப்படுகின்றன.

* பேரிக்காயில் உள்ள நார்ப் பொருட்கள் குடல் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகின்றன. இதில் காணப்படும் எளிதில் கரையாத 'பாலிசாக்ரைடு' மூலக்கூறுகள் குடலில் சேரும் புற்று நோய் நச்சுகளை அகற்றவல்லது.

* குறைந்த ஆற்றல் அளிக்கக் கூடியவை பேரிக்காய்கள். 100 கிராம் பழத்துண்டில் 58 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

* அதிக அளவிலான 'வைட்டமின்-சி' சத்துப்பொருட்கள் பேரிக்காயில் நிறைந்து உள்ளன. புதிதாக பறித்த 100 கிராம் பழத்தில் 7 சதவீதத்திற்கு 'வைட்டமின்-சி' காணப்படுகிறது.

* பேரிக்காயில் பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸி-சான்தின் போன்ற சத்துப் பொருட்களும் காணப்படுகின்றன. இவை உடலுக்கு வலிமை அளிப்பதுடன், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகின்றன.

* தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகள் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி- குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் போலேட் போன்றவையும் மிகுதியாக காணப்படுகின்றன.

* பேரிக்காய் பழங்கள் உடலுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற உபாதைகளை ஏற்படுத்துவதில்லை.

குடைமிளகாயின் சிறப்புத் தன்மை மற்றும் மருத்துவ பலன்கள்

குடை மிளகாய்
கலர் கலராய் தெரியும் குடை மிளகாய், பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது! கொலாஸ்ட்ரால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு ப்ராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் கொண்டது. குடைமிளகாய், நம் நாட்டு உணவை ருசிப்படுத்த வெளி நாட்டில் இருந்து கடல் கடந்து வந்தது.

சைனீஸ் உணவுகளில் ருசிக்கும், அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் இந்த காய்கறி வகைக்கு இப்போது இந்தியாவிலும் வரவேற்பு மிக அதிகம். இப்போது இந்திய பாரம்பரிய உணவுகளிலும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் கலந்து காணப்படுகிறது. பொதுவாகவே உணவு என்றாலே உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்க்கப்படுவதுண்டு. அந்த அளவுக்கு காரமற்றது குடைமிளகாய் என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை. குடை மிளகாயின் பூர்வீகம் அமெரிக்க நாடுகள். இப்போது இந்தியாவில் அமோகமாக விளைச்சல் செய்யப்படுகிறது.

இதற்கு ஒரு பொதுப் பெயர் இல்லை. நாட்டிற்கு நாடு இதன் பெயர் மாறுபடுகிறது. இங்கிலாந்தில் ‘சில்லி பெப்பர்’ என்றும், அமெரிக்கா மற்றும் கனடாவில் ‘பெல் பெப்பர்’ என்றும், ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் ‘காப்சிகம்’ என்றும் அழைக்கிறார்கள். சுவீட் பெப்பர் என்றும் அழைப்பதுண்டு.

இதில் இருக்கும் காரத்தன்மைக்கு காரணம், ‘காப்ஸேயில்’ என்ற ரசாயனம். காரத்தன்மையின் பத்து சதவீதம் குடை மிளகாயின் விதையிலும், தோலின் வெளிப்பகுதியிலும் அடங்கியிருக்கிறது. மீதமுள்ள 90 சதவீத காரத்தன்மை உள்தோல், மத்திய பகுதி, விதையை உற்பத்தி செய்யும் திசுக்கள் அடங்கியுள்ள பகுதிகளில் உள்ளது.

குடை மிளகாயை உணவில் சேர்ப்பது பல விதங்களில் நமக்கு பலன் அளிக்கிறது. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக அது செயல்படுகிறது. கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும்.

அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும். பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவை களை கட்டுப்படுத்தும் சக்தியும் ‘காப்ஸேயில்’ இருக்கிறது. காப்ஸேயில் ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

கொலஸ்ட்ராலையும், சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் நீர்க்கட்டை குறைக்கும் தன்மையும் கொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைய உள்ளது.

இவை இரண்டும் சக்திமிக்க ஆன்டி ஆக்சிடென்ட்களாக செயல்பட்டு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. குடைமிளகாய் மஞ்சள், சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் அதிகமாக கிடைக்கிறது. பச்சையாகவோ, பாதி வெந்நிலையிலோ இதை சாப்பிட்டால்தான் கூடுதல் சத்து உடலுக்கு கிடைக்கும்.

100 கிராம் குடை மிளகாயில் இருக்கும் சத்து:

புரோட்டின் - 0.99 கிராம்.
சக்தி - 31 கலோரி.
சோடியம் - 4 மி.கிராம்.
கொலஸ்ட்ரால் - இல்லை.
கொழுப்பு - 0.3 மி.கிராம்.
தாதுச் சத்து - 6.02 மி.கிராம்.
பொட்டாசியம் - 211 மி.கிராம்.
மெக்னீசியம் - 12 மி.கிராம்.
வைட்டமின் ஏ - 3131 ஐ.யூ.
வைட்டமின் சி - 127.7 மி.கிராம்.
கால்சியம் - 7 மி.கிராம்.
இரும்பு - 0.43 மி.கிராம்.

Sunday, April 27, 2014

டெங்குவை ஒழித்து உயிர் இழப்பை தடுக்கும் நிலவேம்பு

நிலவேம்பு
கிராம மக்களையும் நகர்ப்புற மக்களையும் ஏன்? அனைத்து தரப்பு மக்களையும் எப்பொழுதுமே பயமுறுத்திக் கொண்டிருப்பவை வியாதிகள். டிசிஸ் என்று சொல்லக்கூடிய நோய்களுக்கு பயப்படாதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம். விஞ்ஞான வளர்ச்சியில் நம் தேசம் விண்ணை தொட்டுக்கொண்டிருக்கிறது.

நாகரீக வளர்ச்சியிலும் வெள்ளைக்காரர்களை மிஞ்சிக் கொண்டிருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியில் நம்மை சுற்றியுள்ள பூமா தேவியையே விலைக்கு வாங்கும் நிலைக்கு உயர்ந்து நிற்கிறோம். மனிதனை மனிதனே ஏமாற்றி பிழைக்கும் காலம் தானே இது.

இந்த வகையில் சமீப காலமாக அனைத்து உலக மக்களையும் பயமுறுத்திக் கொண்டு ஒரு சில நேரங்களில் உயிர் இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது டெங்கு வைரஸ் காய்ச்சல். இது எந்த நேரத்திலும் எந்த காலத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

பயம் வேண்டாம் :

இதை எண்ணி பொது மக்கள் பயப்பட தேவையில்லை. டெங்கு காய்ச்சல் மட்டும் அல்ல எந்த நோயாக இருந்தாலும் நாம் நினைத்தால் மட்டுமே கட்டுப்படுத்தமுடியும், தீர்க்கவும் முடியும், வராமல் தடுக்கவும் முடியும் என்பது தான் உண்மை. எந்த நோய்களும் தானாக வருவது இல்லை.

அப்படி தானாக வருவதும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தான் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் முதல் புற்று நோய், அம்மை நோய் வரை அனைத்துமே வைரஸ் கிருமிகளால் ஏற்படுவது. மனிதர்களுக்கு வரும் பல்வேறு வகை நோய்கள் அனைத்துமே தாமாகவே வரவழைத்துக் கொள்வது.

தற்சமயம் அதிகரித்து காணப்படும் சர்க்கரை நோய், ஆஸ்துமா நோய், கை, கால், மூட்டு வீக்கம், எலும்பு தேய்மான நோய்கள், தோல் நோய்கள், இதய நோய்கள், உடல் பருமன் என சொல்லிக் கொண்டே போலாம்.

உணவுப்பழக்கம்:

இவை அனைத்தும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறையாலும் பழக்க வழக்கங்களாலும் வேலைப்பளு மன அழுத்தம், உறக்கம் இன்மை, ஓய்வு இன்மை, கவலைகளாலும் தான் பெரும்பாலான நோய்களுக்கு நாம் இரையாகிறோம்.

நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும் போது `ஏடிஎஸ் ஜிப்தி' என்ற பெண் கொசு பகலில் மனிதர்களை கடித்து டெங்கு வைரஸ் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இது பிளாவி வைரஸ் இனத்தை சேர்ந்தது. தமிழ் நாட்டில் தான் இவ்வகை கொசுக்கள் அதிகம் காணப்படுகின்றன.

கொசு கடித்த நாள் முதல் 5-ல் இருந்து 7 நாட்களுக்குள் டெங்கு வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். காய்ச்சல் நமக்கு வருகிறது என்று தெரிந்த உடனேயே நம் உடல் எதோ ஒரு நோய்க்கு ஆளாகி உள்ளது அல்லது பாதிப்படைய போகிறோம் என்று உணர்ந்து கொண்டு உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவர்களை நாம் சென்று பார்க்க வேண்டும்.

ஏதோ தலைவலி, சாதாரண காய்ச்சல், சாதாரண உடல் வலி, செரியமையால் வாந்தி என எண்ணிக் கொண்டு அருகில் இருக்கும் மருந்து கடைகளில் மருத்துவர்கள் பரிந்துரையோ ஆலோசனையோ இல்லாமல் எந்த மருந்துகளையும் பயன்படுத்தி விலை மதிப்பில்லா உடலையும் உயிரையும் இழக்க வேண்டாம். பாதிப்புகளுக்கும் உட்படுத்தி கொள்ள வேண்டாம்.

டெங்கு அறிகுறிகள்:

டெங்கு காய்ச்சலாக இருந்தால் தலைவலி தும்மல், குளிர், நடுக்கம், கண்களில் வலி, கை கால் மூட்டுகளில் வலி, சாப்பிட இயலாமை போன்ற அறிகுறிகள் காணப்படும்.

நோயை உடனடியாக கவனிக்காமல் சாதாரண காய்ச்சலாக எண்ணி அஜாக்கிரதையாக 2, 3 நாட்கள் சென்ற பிறகு மருத்துவம் செய்ய மருத்துவரை அணுகும் போது நோயின் தீவிர நிலை ஏற்பட்டு தோல் பகுதி , பல் ஈறுகளில் ரத்த கசிவு கூட ஏற்படலாம்.

டெங்கு வைரஸ் கொசுவானது மழை நீர் தேங்கி உள்ள பழைய மண்பானைகள் இருக்குமிடம், பிளாஸ்டிக் பொருட்கள் தேக்கி வைத்துள்ள இடங்கள், சிமிண்ட் நீர் தேக்க தொட்டிகள், கழிவு நீர் குழாய்கள், குளிர்சாதன பெட்டி, தேங்காய் மட்டை, தேங்காய் நார் போட்டு வைத்துள்ள குடோன்கள், குப்பைகள் தேக்கி வைத்துள்ள இடங்கள்...

இப்படி பல்வேறு இடங்களில் வைரஸ் கொசுவானது தங்கி இருந்து இனப்பெருக்கம் செய்து மனிதர்களை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும்.

ரத்தப்பரி சோதனை:

டெங்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட உடன் ரத்தபரிசோதனை செய்து பிளேட்லெட் என்று செல்லக்கூடிய ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு இந்த நோயை உறுதி செய்து கொள்ளலாம். சராசரியாக ஒருவருக்கு ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை இருக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு ரத்த தட்டுகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவாகவும், 1 லட்சத்துக்கு குறைவாகவும் காணப்படும் போது நோயாளி தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்.

இந்நிலையில் இருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள வீடுகளில் குப்பைகள் தேங்காமல் சுகாதாரமாக தண்ணீர் பாத்திரங்களை மூடி வைப்பது, கழிவு நீர், மழை நீர் தேங்காமல் பாதுகாப்பது, ஜன்னல்களில் கொசு வலைகளை அமைப்பது, தூங்கும் பொழுது கொசு வலைகளை பயன்படுத்துவது, இயற்கை கொசு விரட்டிகளை பயன்படுத்துவது, தூய சாம்பிராணி புகை போடுவது போன்றவற்றால் தடுக்க முடியும்.

நிலவேம்பு- வெட்டிவேர்:

மருந்து என்று எடுத்துக் கொண்டால் எந்த பக்க விளைவையும் தராத நில வேம்பு,வெட்டி வேர், விலாமிச்சம் வேர்,சந்தனம், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, பற்படாகம், சுக்கு, மிளகு சேர்ந்த நில வேம்பு குடிநீர் சூரணத்தை 200 மில்லி லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் சூரணத்தை போட்டு 50 மில்லியாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி காலை, மதியம், மாலை என நோயின் தன்மை வயதுக்கு தக்கபடி மருத்துவர் ஆலோசனை படி வழங்கலாம்.

பப்பாளி இலை சாறு 10 மில்லி முதல் 20 மில்லி வரை தேன் கலந்து காலை, மதியம், மாலை என வழங்கலாம். மலை வேம்பு இலைச்சாறு 10 மில்லி முதல் 20 மில்லி வரை தேன் கலந்து 3 வேளையும் வழங்கலாம். மகாசுதர்சன மாத்திரை காலை 2, மாலை-2, இரவு-2 என நோயாளியின் தீவிரத்திற்கு ஏற்ப மருத்துவர் ஆலோசனை பெற்று வழங்கலாம்.

மேல் பூச்சி தைலங்கள், பற்றுக்களை மருததுவர் ஆலோசனையோடு நோயாளிக்கு வழங்கினால் டெங்கு காய்ச்சல் மட்டும் அல்ல எந்த நோயையும் முற்றிலும் குணப்படுத்தலாம். தரமான மருந்துகளை மருத்துவர் ஆலோசனை பெற்று வாங்குங்கள், போலிகள் நிறைந்த உலகில் ஏமாறாமல் மருத்துவர் உதவியுடன் நோய்களை குணமாக்கி உடலை பாதுகாத்து கொள்ளுங்கள் என்கிறார் திருச்சி ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை சிறப்பு நிலை சித்த மருத்துவர் டாக்டர் எஸ்.காமராஜ்.

கொசுவை ஒழிக்க புகை மூட்டம் :

1. மா இலை, நொச்சி இலை, வேப்பிலை ஆகிய மூன்றையும் கலந்து புகை போடலாம்.

2.துளசி இலை, வேப்பிலை இரண்டையும் கலந்தும் புகை போடலாம்.

3. துளசி, மருதாணி, தும்பை, நொச்சி, மாஇலை கலந்தும் புகை போடலாம்.

4.வேப்பிலை, துளசி இலை, மிளகு, மஞசள், சுக்கு போட்டு கசாயம் போட்டு குடிக்கலாம்.

5. மஞ்சள், துளசி, வேப்பிலை, தும்பை இலை, நொச்சி இலை, கரிக்கட்டை இவைகளை ஒன்று சேர்த்து வில்லை தட்டி நிழலில் உலர்த்தி பின் கொசு வர்த்தியாக பயன்படுத்தலாம்.

6.கற்பூர தைலத்தை உடல் பகுதியில் பூசிக்கொண்டால் எளிதாக கொசு கடியில் இருந்து தப்பிக்கலாம்.

உடம்பை குறைக்கணுமா?

உடல் எடை
அதிக உடல் எடை தான் இன்று பலரையும் படுத்தி எடுக்கும் விஷயமாக இருக்கிறது. 'எப்படித்தான் உடல் எடையைக் குறைப்பது?' என்று திணறித் தவித்துப் போகிறார்கள். அவர்களுக்கு உதவும், எளிய முறையில் உடல் பருமனைக் குறைக்கும் வழிகள் இவை...

* அன்றாடம் எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* உடல் பருமனை அதிரடியாகக் குறைக்கிறேன் பேர்வழி என்று கொலைப்பட்டினி கிடைக்கக்கூடாது.

* நொறுக்குத் தீனிகளைத் தள்ளி வைக்க வேண்டும். 'இன்று மட்டும் சாப்பிடுகிறேன்' என்று நினைத்தால், என்றுமே அவற்றுக்கு விடைகொடுக்க முடியாது.

* உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

* இனிப்புகள், சர்க்கரை வகைகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

* எண்ணையில் வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்த்து, வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைப்பகுதியை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

* செயற்கைக் குளிர்பானங்களுக்கு நமக்கு நாமே தடை விதித்துக்கொள்ள வேண்டும்.

* தினமும் பழங்கள் சாப்பிடலாம்.

* அவரை, பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், காலி பிளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் இரவு உணவுடன் 200 கிராம் அளவுக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப்பயறு, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

* கைக்குத்தல் அவல், முழுக்கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.

* கொழுப்புச் சத்துள்ள உணவுப்பொருட்களைத் தவிர்த்தல் மிகவும் நல்லது. பாலில் கூட குறைந்த கொழுப்புச்சத்து உள்ள 'டோன்டு மில்க்' வகைகளையே பயன்படுத்தலாம்.

* வேலைக்காரர்கள், எந்திரங்களை அதிகம் சார்ந்திருக்காமல், வீட்டு வேலைகளை நாமே செய்யலாம். உடல் ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம். வீட்டு வேலைகளை நாமே பார்த்த திருப்திக்குத் திருப்தி!

* அசைவ விரும்பிகள், அவற்றின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். பொரிப்பது, வறுப்பது தவிர்த்து, தந்தூரி வகைக்கு மாறலாம்.

பார்லியில் உள்ள சத்துப்பட்டியல்

பார்லி
பார்லி (வாற்கோதுமை) சத்துமிக்க தானிய வகைகளில் ஒன்று. இன்று நீரிழிவு, ரத்த அழுத்த நோயாளிகளின் பிரதான உணவு வகையில் ஒன்றாகவும், ஆரோக்கிய விரும்பிகளின் உணவுப் பட்டியலிலும் தவறாமல் இடம் வகிக்கிறது. இதிலுள்ள சத்துக்களை அறிவோம்...

* பார்லி மிதமான ஊட்டம் தரக்கூடியது. 100 கிராம் பார் லியில் 270 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

* நூறு கிராம் பார்லியில் 54.4 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவும். குடல் பகுதியில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியா நுண்ணுயிர்கள் இந்த நார்ச்சத்துக்களை எளிதில் கரையத்தக்க கொழுப்பு அமிலமாக மாற்றி வழங்கும். அது 'பியூட்ரிக் அமிலம்' எனப்படும். இது உடற்செல்களுக்கான அத்தியாவசிய எரிபொருளாகும்.

* நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் புரப்பியானிக் அமிலம், அசிட்டிக் அமிலம் எனப்படும் இரு கொழுப்பு அமிலங்களையும் உருவாக்குகிறது. தசை மற்றும் நுரையீரல் செல்களின் எரிபொருளாக இவை பயன்படும். இந்த புரப்பியானிக் அமிலம்தான் ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் செயலிலும் பங்கெடுக்கிறது.

* பார்லியில் உள்ள 'பீட்டா குளுகான்' எனும் நார்ப் பொருள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை பித்தநீருடன் கலந்து, கழிவுப் பொருட்களுடன் சேர்த்து அகற்றிவிடுகிறது.

* பார்லியில் 'வைட்டமின் பி' (நியாசின்) நல்ல அளவில் காணப்படுகிறது. அதிக அளவில் பார்லியை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, இதயவியாதியான கார்டியோ வாஸ்குலார் பாதிப்புக்கு நியாசின் எதிர்ப்பு ஆற்றல் வழங்கும். மேலும் கெட்ட கொழுப்புகளான லிப்போ புரோட்டின் மற்றும் கொலஸ்டிராலின் அளவையும் கட்டுப்படுத்தும். ஒரு கப் பார்லி சாப்பிட்டால் தினசரி உடலில் சேர்க்க வேண்டிய 'வைட்டமின் பி' சத்தில் 14.2 சதவீதம் கிடைக்கும்.

* உடலுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்கள் சிறந்த அளவில் காணப்படுகிறது. செலினியம் தினசரி அளவில் 52 சதவீதமும், டிரிப்டோபான் 37.5 சதவீதமும், தாமிரம் 31.4 சதவீதமும், மாங்கனீசு 31 சத வீதமும், பாஸ்பரஸ் 23 சதவீதம் உள்ளன.

* காலை உணவில் பார்லியை அதிகமாக சேர்த்து வர இதய பாதிப்புகளை வெகுவாக கட்டுப்படுத்தலாம். 40 வயது கடந்த பெண்களுக்கு உடல்ரீதியாக பல்வேறு நன்மை வழங்கக் கூடியது பார்லி. மார்பக புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல் தரும்.

* மிகுதியாக காணப்படும் மக்னீசியம், 300 நொதிகளை தூண்டும் துணைக்காரணியாக செயல்படுகிறது. இன்சுலின் சுரப்பதை தூண்டுவதால் நீரிழிவு பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது. பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் தருவதாகவும் உள்ளது.

வழக்கமாக பார்லி சேர்த்துவந்தால் ஆஸ்துமா பாதிப்புகள் அண்டாது. பார்லி தோற்றத்தில் கோதுமையின் சாயலில் இருக்கும். இதனை அப்படியே வேக வைத்து அரிசி சாதம்போல சாப்பிடலாம்.

கோதுமையைப் போலவே மாவாக அரைத்து சப்பாத்தி, கூழ், தோசை, இட்லி என பல உணவுப் பண்டங்கள் தயாரித்து ருசிக்கலாம். பார்லி மாவு கலந்து கேக், இனிப்பு வகைகள் செய்து சாப்பிடலாம். பார்லி சூப் உடலுக்கு தெம்பு தரும். இதயத்துடிப்பு சீராகும். மதுபானம் தயாரிப்பில் நொதித்தலுக்கு பார்லி உதவுகிறது.