Pages

Thursday, April 3, 2014

புத்துணர்ச்சி தரும் சக்தி பானங்களால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: ஆராய்ச்சியில் தகவல்

புத்துணர்ச்சி பானம்
மக்களுக்கு உடனடி புத்துணர்ச்சியைத் தரும் சக்தி பானங்கள் பல விற்பனைசந்தையில் உள்ளன. ஆனால் இவை அதிக ரத்த அழுத்தத்தையும், மரணம் விளைவிக்ககூடிய மாரடைப்பையும் தர வல்லவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

ஏற்கனவே ரத்த அழுத்தத்தினாலோ, இதய நோய்களாலோ அவதிப்படுபவர்கள், இது போன்ற பானங்களை எச்சரிக்கையுடன் தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள், இதற்கு முன்னால், இது குறித்து வெளியிடப்பட்ட ஏழு புள்ளிவிவரக் கணக்கீடுகளையும். ஆய்வு செய்தனர். இந்தக் கணக்கீடுகளில், 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டிருந்தன.

முதலில், இந்த ஆய்வாளர்கள் ஒன்று முதல் மூன்று எண்ணிக்கை வரை சக்தி பானங்கள் குடித்தவர்களின் இதயத்துடிப்பை பரிசோதித்தார்கள். அவர்களின் ஒவ்வொரு துடிப்பிற்கும் நடுவில் 10 மில்லிசெகண்டு இடைவெளி அதிகரித்து இருந்தது. இது இதயத்துடிப்பின் சீரான தன்மையைக் குலைத்து, இறுதியில் மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

சக்தி பானத்தை அருந்திய 132 பேரை பரிசோதித்த அவர்கள், அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தத்தின் அளவு 3.5 புள்ளிகள் அதிகரித்து இருந்ததையும் கண்டறிந்தார்கள்.

இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் அனைத்தும், அமெரிக்காவின் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய நோய்த்தொற்று மற்றும் அதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்பு குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டது.

Tuesday, April 1, 2014

வியர்வையில் குளிக்கிறீர்களா?

வியர்வை
கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வையும், அதனால் ஏற்படும் நாற்றமும் அதிகமாக இருக்கும். எவ்வளவு வாசனைத் திரவியங்களைப் பூசினாலும் அது தீர்வதில்லை.

அடிக்கும் வெயிலுக்கும் வியர்வைக்கும் பயந்து, குளிர்சாதன அறையிலேயே முடங்கிக் கிடப்பவர்களும் இருக்கிறார்கள். வியர்வையின் அளவை வைத்துத்தான் நமது உடல் வெப்பநிலையையே கணக்கிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். மனிதர்கள் அனைவருக்கும் வியர்வைச் சுரப்பி ஒரே எண்ணிக்கையில்தான் இருக்கும்.

அந்த சுரப்பிகள் இயங்கும் தன்மையில்தான் அதிகம், குறைவு என்று வேறுபடும். உண்மையில் வியர்க்காமல் இருந்தால்தான் பிரச்சினை. அதேநேரம் அதிகம் வியர்ப்பதும் ஒருவித நோய் பாதிப்பின் தன்மையாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் மருத்துவரைச் சந்தித்து தங்களுக்கு அதிகமாக வியர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்பச் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

உண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் வியர்வையில் பாக்டீரியா தொற்றால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது.

வியர்வையில் இரண்டு விதங்கள் உண்டு. சிலருக்கு உடல் முழுக்க ஒரேமாதிரி வியர்க்கும். சிலருக்கு முகம், தலை, வயிறு, தொடை, அக்குள் என்று குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வியர்க்கும். உடல் பருமன் அதிகமாக இருப்பதும் வியர்வைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

சிலர் மசாலா நிறைந்த உணவை ஆர்வமாய் அள்ளித் திணிப்பார்கள். இவர்களிடம் இருந்து வெளிப்படும் வியர்வை துர்நாற்றம் நிறைந்ததாய் மாறிவிடுகிறது. துர்நாற்ற வியர்வையால் அவதிப்படுகிறவர்கள் மசாலா, பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

உடம்பு நன்றாக வியர்த்து விட்டால் உடனே குளிப்பவர்கள் பாக்டீரியா தொற்றில் இருந்து தப்பி விடுவார்கள். இப்படிக் குளிப்பவர்கள் அந்த வாளித் தண்ணீரில் இயற்கை நறுமணப் பொருட்களை இட்டு உடலுக்கு ஊற்றிக் குளிக்கலாம். வியர்வை நாற்றம் விலகிவிடும்.

கோடையைச் சமாளிக்கும்விதமாக தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். அதோடு இந்தக் கோடையில் தவறாமல் கிடைக்கும் இளநீர், பனை நுங்கு, பதநீர் பருகுங்கள். வியர்வை கட்டுப்படுவதோடு, வெளிப்படும் கொஞ்ச வியர்வையும் நாற்றம் இல்லாததாக இருக்கும். கொஞ்சம் கவனம் வைத்தால், வியர்வைப் பிரச்சினையை விலக்கிவிடலாம்!

Sunday, March 30, 2014

பெண்களுக்கு வரும் பொதுவான உடல் பிரச்சினைகள்

பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் சில பொதுவான உடல் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன. உடற்பயிற்சி என்பது நம் உடல் எடையை குறைத்து நம்மை மிகவும் ஒல்லியான உடலாக மாற்றுவதற்கு என்று பலர் நினைக்கிறாகள்.

அது உண்மையல்ல. நம் உடல் பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும் ஒரு கருவிதான் உடற்பயிற்சி. பெண்களை வாட்டும் மிக முக்கியமான சில உடல் பிரச்சினைகளை இப்பொழுது பார்ப்போம்.

மாதவிலக்கு பிரச்சினைகள்:

ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கிற்கு முன் வீக்கம், வயிற்றுப் பிடிப்பு, மார்பக வீக்கம், மலச்சிக்கல், மூட்டு மற்றும் தசை வலி, முகப்பரு மற்றும் ஊசலாடும் மன உணர்வுகளால் ஒவ்வொரு பெண்ணும் பாதிக்கப்படுகிறாள்.

பாலிசிஸ்டிக் கருப்பை நோய்: 

இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மாதவிலக்கில் பிரச்சினை மற்றும் கருமுட்டை முழு வளர்ச்சி அடையாமல் மற்றும் சிறியதாக இருக்கும். இதனால் கருவுறும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும்.

கருப்பை கட்டிகள் (நார்த்திசுக்கட்டிகள்):

நார்ப் பொருளால் கட்டியானது கருப்பையில் தோன்றுவதால் அதிகமான உதிரப்போக்கு மற்றும் வலி, கருவுறுதலில் சிக்கலை உண்டாக்கும். இக்கட்டிகள் பொதுவாக இயற்கையாகவே மாதவிலக்கு நின்று விட்ட பெண்களுக்கு சுருங்கி விடும். சில நேரங்களில் அவை சுருங்காமல் மிகுந்த வலியைக் கொடுக்கும்.

பெரும்பாலான பெண்கள் இவ்வகை நார்த்திசுக்கட்டிகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சிறுநீரக நோய்த்தொற்று: இது ஆண்களை விடவும் பெண்களை அவர்களது மாதவிலக்கானது முற்றிலும் நின்று விட்ட பிறகு தாக்குகின்றது. சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து விடுபட முடியும்
உடல் பிரச்சினைகள்


இரத்த சோகை:

குடும்பத்தின் ஒவ்வொரு அசைவிற்கும் முக்கியத்துவம் தரும் பெண்கள் தங்களுடைய உணவைச் சரியாக எடுத்துக் கொள்ளாததாலேயே இந்நோய் அவர்களை தாக்குகின்றது. இரும்புச் சத்துள்ள இயற்கை, உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

மார்பக மற்றும் கர்ப்பபை வாய்ப்புற்றுநோய்:

பெரும்பாலும் பெண்களை அச்சுறுத்தும் நோய் என்று இதைச் சொல்லலாம். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, தாமதமான திருமணம், மோசமான உணவு, அதிகமாக புகையிலை மற்றும் மது அருந்துதல் இவற்றின் மூலம் இந்நோய் அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

மார்பகத்தில் கட்டியோ அல்லது தோல் தடித்து இருந்தாலோ, மார்பக காம்பிலிருந்து திரவம் போன்ற பொருள் வெளியேறினாலோ கட்டாயம் அவை மார்பக புற்றுநோயின் அறிகுறி என்று சொல்லலாம்.

பாலியல் தொடர்பு, குழந்தைப்பேறில் இடைவெளி இல்லாமல், சுகாதாரமின்மை இவை அனைத்தும் கர்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணங்களாகும். இந்நோய் பெரும்பாலும் முற்றிய பிறகு வெளிச்சத்திற்கு வருகின்றது என்று சொல்லலாம்.

இதய நோய்கள்:

இப்பொழுது இளம் பெண்களையும் இந்நோய் தாக்குகின்றது. மருந்து மாத்திரைகள் அதிகமாக எடுத்துக் கொள்வது, முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை போன்றவையும் இந்நோய் தோன்றக் காரணமாக இருக்கின்றன.

ஆஸ்டியோபோரோசிஸ்:

எலும்புகளில் கால்சியம் குறைபாடு ஏற்படுவதால் இந்நோய் உண்டாகிறது. கீலவாதம், மனஅழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்களும் பெருமளவில் பெண்களை தாக்குகின்றன.

Saturday, March 29, 2014

கருப்பை கோளாறுகளை தீர்க்கும் பாட்டி வைத்தியம்


மாதவிடாய் கால வயிற்று வலியின் போது வயிற்றில் ஈரத்துணி போடலாம். வயிற்றை சுற்றிலும் விளக்கெண்ணெய் தடவலாம்.

• கருப்பை கோளாறுகளை தவிர்க்க வாழைப்பூ சாறு, பொரியல் வாரம் ஒரு
முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• வெள்ளைப்படுதலை தடுக்க முருங்கைக் கீரை, தயிர் சேர்க்கவும். கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்.

• முருங்கைக் கீரை சூப், முடக்கத்தான் கீரை சூப், மணத்தக்காளிக் கீரை சூப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டியது அவசியம்.

• கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலந்த பொடி வகை அல்லது மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் கருப்பை தொந்தரவால் உண்டாகும் முழங்கால் வலி, இடுப்பு வலி ஆகியவற்றை தடுக்கலாம்.

• ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.

• ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெயில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.

காலை நேர உணவு அவசியம் !

காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான சக்தியை அளிக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு, காலை உணவை சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர். அதிலும் பள்ளிக்குழந்தைகள் அநேகம் பேர் காலை உணவை உட்கொள்வதே இல்லை. பெரும்பாலும் காலி வயிறுடனே பள்ளிக்குச் செல்கின்றனர். இதற்கு நேரமின்மையையே காரணமாக தெரிவிக்கின்றனர்.

இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான சக்திக்கு, காலையில் உணவு சாப்பிடுவது அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.

காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது, அது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம். அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும்.

எனவே ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக திட்டமிட்டு குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

Friday, March 28, 2014

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்-2

உலர் திராட்சை
திராட்சையில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும்.

மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும். உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர்.

எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும்.

கொய்யாவின் மருத்துவக் குணங்கள்

கொய்யா
பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.

* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.