Pages

Showing posts with label குழந்தைகளுக்கு காலை உணவு. Show all posts
Showing posts with label குழந்தைகளுக்கு காலை உணவு. Show all posts

Saturday, March 29, 2014

காலை நேர உணவு அவசியம் !

காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான சக்தியை அளிக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு, காலை உணவை சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர். அதிலும் பள்ளிக்குழந்தைகள் அநேகம் பேர் காலை உணவை உட்கொள்வதே இல்லை. பெரும்பாலும் காலி வயிறுடனே பள்ளிக்குச் செல்கின்றனர். இதற்கு நேரமின்மையையே காரணமாக தெரிவிக்கின்றனர்.

இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான சக்திக்கு, காலையில் உணவு சாப்பிடுவது அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.

காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது, அது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம். அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும்.

எனவே ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக திட்டமிட்டு குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.