Pages

Tuesday, April 1, 2014

வியர்வையில் குளிக்கிறீர்களா?

வியர்வை
கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வையும், அதனால் ஏற்படும் நாற்றமும் அதிகமாக இருக்கும். எவ்வளவு வாசனைத் திரவியங்களைப் பூசினாலும் அது தீர்வதில்லை.

அடிக்கும் வெயிலுக்கும் வியர்வைக்கும் பயந்து, குளிர்சாதன அறையிலேயே முடங்கிக் கிடப்பவர்களும் இருக்கிறார்கள். வியர்வையின் அளவை வைத்துத்தான் நமது உடல் வெப்பநிலையையே கணக்கிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். மனிதர்கள் அனைவருக்கும் வியர்வைச் சுரப்பி ஒரே எண்ணிக்கையில்தான் இருக்கும்.

அந்த சுரப்பிகள் இயங்கும் தன்மையில்தான் அதிகம், குறைவு என்று வேறுபடும். உண்மையில் வியர்க்காமல் இருந்தால்தான் பிரச்சினை. அதேநேரம் அதிகம் வியர்ப்பதும் ஒருவித நோய் பாதிப்பின் தன்மையாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் மருத்துவரைச் சந்தித்து தங்களுக்கு அதிகமாக வியர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்பச் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

உண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் வியர்வையில் பாக்டீரியா தொற்றால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது.

வியர்வையில் இரண்டு விதங்கள் உண்டு. சிலருக்கு உடல் முழுக்க ஒரேமாதிரி வியர்க்கும். சிலருக்கு முகம், தலை, வயிறு, தொடை, அக்குள் என்று குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வியர்க்கும். உடல் பருமன் அதிகமாக இருப்பதும் வியர்வைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

சிலர் மசாலா நிறைந்த உணவை ஆர்வமாய் அள்ளித் திணிப்பார்கள். இவர்களிடம் இருந்து வெளிப்படும் வியர்வை துர்நாற்றம் நிறைந்ததாய் மாறிவிடுகிறது. துர்நாற்ற வியர்வையால் அவதிப்படுகிறவர்கள் மசாலா, பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

உடம்பு நன்றாக வியர்த்து விட்டால் உடனே குளிப்பவர்கள் பாக்டீரியா தொற்றில் இருந்து தப்பி விடுவார்கள். இப்படிக் குளிப்பவர்கள் அந்த வாளித் தண்ணீரில் இயற்கை நறுமணப் பொருட்களை இட்டு உடலுக்கு ஊற்றிக் குளிக்கலாம். வியர்வை நாற்றம் விலகிவிடும்.

கோடையைச் சமாளிக்கும்விதமாக தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். அதோடு இந்தக் கோடையில் தவறாமல் கிடைக்கும் இளநீர், பனை நுங்கு, பதநீர் பருகுங்கள். வியர்வை கட்டுப்படுவதோடு, வெளிப்படும் கொஞ்ச வியர்வையும் நாற்றம் இல்லாததாக இருக்கும். கொஞ்சம் கவனம் வைத்தால், வியர்வைப் பிரச்சினையை விலக்கிவிடலாம்!

No comments: