Pages

Showing posts with label ரத்த அழுத்தம். Show all posts
Showing posts with label ரத்த அழுத்தம். Show all posts

Monday, November 7, 2016

இதய நோயாளிகளே...காளான் சாப்பிடுங்க!


காய்களின் ராஜாவாக கேரட்டையும், ராணியாக காளானையும் குறிப்பிடுவார்கள். காரணம் என்ன தெரியுமா? 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரத சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதம். முட்டை, இறைச்சி ஆகியவற்றில் புரதம் உள்ளது, அதில் கொழுப்பும் இருக்கிறது.

ஆனால் அவை கொலஸ்ட்ராலை ரத்தத்தில் சேமித்து அபாயத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் காளானில் கொழுப்புச்சத்து இல்லை. எனவே காளானை பயமின்றி சாப்பிடலாம். இதனால்தான் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதய வியாதி, மலச்சிக்கல், வளரும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி முதலியவற்றுக்கு காளான் உணவு சிபாரிசு செய்யப்படுகிறது.

குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் எளிதில் ஜீரணம் ஆக வேண்டும். காளானில் உள்ள மிக முக்கியமான அமிலங்கள் எளிதில் செரிமான சக்தியை தந்துவிடுகின்றன. புரத சத்து அதிகம் உள்ள காளானில் மிக முக்கியமான இரும்பு சத்தும், பல வைட்டமின்களும் உள்ளன. அதனால் மருத்துவ குணங்களும் அதிகம். வைட்டமின் 'ஏ' அதிகளவில் இருக்கிறது. காளானில் உடல் வளர்ச்சிக்கு தேவையான எட்டு வகையான அமிலோ, அமிலங்கள் உள்ளன.

காலரா, அம்மை நோய், விஷக் காய்ச்சல், மலேரியா போன்றவை குணமாக காளான் சூப் நல்ல பலன் தரும். காளானில் உள்ள ஒரு விதமான பொருள் புற்றுநோய் வைரஸ், பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மையை பெற்றுள்ளது. வயிற்றுப்புண், ஆசனப்புண் ஆகியவை குணமாக காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றுடன் சமைத்து சாப்பிடலாம்.

பிரியாணி செய்தால் காளான், முட்டை, பச்சைப் பட்டாணி ஆகிய மூன்றையும் தவறாமல் சேர்க்க வேண்டும். இது சத்தான உணவு. இது உடல் ஆரோக்கியத்துக்கும், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படும். உடல் நலத்தில் அக்கறை உள்ள அனைத்து தரப்பினரும் வாரத்தில் ஒரு முறை காளான் சூப் வைத்து சாப்பிடுவது நல்லது.

ஆரஞ்சு பழத்தை விட 4 மடங்கும், ஆப்பிள் பழத்தை விட 12 மடங்கும் முட்டைகோசைவிட2 மடங்கும் புரதச்சத்தும், மருத்துவ குணங்களும் நிரம்பியது காளான். நமது நாட்டில் எட்டு வகை காளான்கள் உள்ளன. இவற்றுள் மொட்டு காளான், சிப்பி காளான், வைக்கோல் காளான் என மூன்று வகை காளான்களை உற்பத்தி செய்து நாம் பயன்படுத்துகிறோம். இதய நோயாளிகள் வலி குறைந்து உற்சாகமாக  இருக்க காளான் உணவுக்கு, முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

Tuesday, December 9, 2014

நோய் தீர்க்கும் வாழைப்பழம்

வாழைப்பழம்


வாழைப்பழம், குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினருக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. எனவே, தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மருத்துவர்களை சந்திக்காமல் இருப்பதற்கு உதவும். வாழையின் பூ, தண்டு, இலை முதல் நார் வரை அனைத்து பாகங்களையும் உபயோகிக்கலாம்.

இன்றும் நமது இல்லங்களில் சாதாரணமாக வாழைப்பழங்கள் இருக்கும். ஆனால், நம்மில் பலர் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. வாழையால்  உடல் பருமன் அதிகரிக்கும் என்ற பயத்தில் பலர் இந்த வாழையின் பக்கம் போவதில்லை. ஆனால், வாழை பல நோய்களை தீர்க்கும் குணமுள்ளது.

வாழைப்பழத்தில், சுக்ரோஸ், பிரக்டோஸ், குளுகோஸ், என மூன்று இயற்க்கை சர்க்கரை உள்ளது. இதில் செரிமானத்திற்கு மிகவும் முக்கியமான பைபரும் பெருமளவு இணைந்துள்ளது. ஒரு வாழை ஏராளமான ஆற்றல் உடையது. இரண்டு வாழைப்பழங்கள், விறுவிறுப்பான 90 நிமிட நடைபயிற்சிக்கு போதுமான ஆற்றலை கொடுக்கவல்லது. ஆனால், வாழைப்பழத்திலிருந்து நமக்கு கிடைப்பது ஆற்றல் மட்டுமல்ல. அன்றாட வாழ்வுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கொண்டுள்ளதுடன், சில நோய்களுக்கு சிறந்த தீர்வாகவும் அமைந்துள்ளது.

மன அழுத்தம்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்கள்  மத்தியில் மேற்கொள்ளப்பட்ட  ஒரு சமீபத்திய  ஆய்வின்படி, ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். இதற்கு காரணம், வாழைப்பழங்களில் உள்ள டிரிப்தோபன் என்ற புரதம் ஆகும். இது நம் உடலில், உடலை  நிலைப்படுத்தும்  தன்மை  கொண்ட , செரொடொனினாக மாறுகிறது.

ரத்த சோகை
வாழையில் அதிகமாக மற்றொரு சத்துப் பொருள், இரும்பு, இது ரத்த ஹீமோகுளோபின் உற்பத்தியை தூண்டுவதுடன், ரத்த சோகைக்கு பெரும் நிவாரணம் தரக்கூடியது. எனவே ரத்த சோகைக்காக பேரிச்சையை மட்டும் நாடாமல், எளிதாக கிடைக்கும் வாழையையும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம்.

ரத்த அழுத்தம்


வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியமும், குறைந்த அளவு உப்பும் உள்ளது. எனவே ரத்த அழுத்தத்தை சீராக்க பெரிதும் பயன்படுகிறது. இதில் உள்ள பொட்டாசியம், வளரும் இளம் மூளையை மேம்படுத்துவதில் இன்றியமையாதது. எனவே, வாழைப்பழம் மாணவர்களுக்கு மிகவும் ஏற்றப்பழமாகும்.

நெஞ்செரிச்சல்

வாழைப்பழங்கள் இயற்கையான ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்தது. எனவே அடுத்த முறை நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் வெறும் வாழைப்பழம் போதும்.

Tuesday, July 22, 2014

ஏழைகளின் புரதம் வேர்க்கடலை

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லோருக்கும் நியாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துக்கள், வேர்கடலை, கடலை எண்ணெயை பயன்படுத்தினால் ரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்பது பரவலாக உள்ளது. ஆனால் இந்த பயத்திற்கு எந்த வித ஆதாரமும் இல்லை.

வேர்க்கடலையில் கொழுப்பு சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு, உடலுக்கு தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை  ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவு புரத சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல 30 விதமான ஊட்டச்சத்துக்கள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?
 நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்து இருகிறார்கள். அதை கிளைகெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது வேர்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிகாரர்கள் வேர்கடலையை எந்த வித பயமுமின்றி தாராளமாகச் சாப்பிடலாம். வேர்கடலையில் உள்ள மெக்னெசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும், ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மை உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்கடலையில் உள்ளன?

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியதுக்கு உள்ளது. வேர்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்கடலை சாப்பிடுவதால்  ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும். வேர்கடலையில் நார்சத்து அதிகம். வேர்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.

வேர்கடலை சாப்பிட்டவுடன் "சாப்பிட்டது போதும் என்ற திருப்தி மிக விரைவில் வந்து விடும். எனவே வேர்கடலையை சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிடவேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொரித்து உடல் எடையை அதிகரித்து கொள்ளும் பிரச்சனை இல்லை. 

வேர்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது, இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்பு கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.  

Thursday, April 3, 2014

புத்துணர்ச்சி தரும் சக்தி பானங்களால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: ஆராய்ச்சியில் தகவல்

புத்துணர்ச்சி பானம்
மக்களுக்கு உடனடி புத்துணர்ச்சியைத் தரும் சக்தி பானங்கள் பல விற்பனைசந்தையில் உள்ளன. ஆனால் இவை அதிக ரத்த அழுத்தத்தையும், மரணம் விளைவிக்ககூடிய மாரடைப்பையும் தர வல்லவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

ஏற்கனவே ரத்த அழுத்தத்தினாலோ, இதய நோய்களாலோ அவதிப்படுபவர்கள், இது போன்ற பானங்களை எச்சரிக்கையுடன் தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள், இதற்கு முன்னால், இது குறித்து வெளியிடப்பட்ட ஏழு புள்ளிவிவரக் கணக்கீடுகளையும். ஆய்வு செய்தனர். இந்தக் கணக்கீடுகளில், 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டிருந்தன.

முதலில், இந்த ஆய்வாளர்கள் ஒன்று முதல் மூன்று எண்ணிக்கை வரை சக்தி பானங்கள் குடித்தவர்களின் இதயத்துடிப்பை பரிசோதித்தார்கள். அவர்களின் ஒவ்வொரு துடிப்பிற்கும் நடுவில் 10 மில்லிசெகண்டு இடைவெளி அதிகரித்து இருந்தது. இது இதயத்துடிப்பின் சீரான தன்மையைக் குலைத்து, இறுதியில் மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

சக்தி பானத்தை அருந்திய 132 பேரை பரிசோதித்த அவர்கள், அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தத்தின் அளவு 3.5 புள்ளிகள் அதிகரித்து இருந்ததையும் கண்டறிந்தார்கள்.

இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் அனைத்தும், அமெரிக்காவின் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய நோய்த்தொற்று மற்றும் அதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்பு குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டது.

Wednesday, March 19, 2014

கொழுப்பை குறைக்கும் செம்பருத்தி

செம்பருத்தி
மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும்.

வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும். இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.

அதன் விபரம்: உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.