உடலின் ஆரோக்கியத்தை வெளிக்காட்டுவதில் சருமத்திறுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே அதை பாதுகாப்பது மிகவும் அவசியம். பனிக்காலத்தில் தோலில் வெடிப்பு, அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் தோலை வருடும் பனிக்காற்று, இதமாய் தொல்லைகளையும் தந்து விட்டு செல்கிறது.
அதிகாலையில் பனி அதிகம் இருப்பதால், தோலில் வறட்சி ஏற்படுகிறது. சோப்பு போட்டு குளிப்பதால் தோல் வறண்டு வெள்ளை வெள்ளையாக திட்டுகள் உருவாகிறது. வறண்ட தோலின் மீது வெயில் படும் போது சிலருக்கு அரிப்பு ஏற்படலாம். இது போன்ற தொல்லைகளை தவிர்க்க நீர்ப்பசை மற்றும் எண்ணைய் பசை உள்ள ஈரப்பதமான சோப்பை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் பாதங்களை பாடாய் படுத்துவது வெடிப்பு தொடர்ந்து தண்ணீரில் வேலை செய்வது பித்தம் காரணமாக வெடிப்பு அதிகரிக்கும். சிறிய அளவில் வெடிப்பு உள்ளவர்கள் கண்டு கொள்ளாமல் விடுவதால் அதில் அழுக்கு சேர்ந்து வலியை ஏற்படுத்தும்.
சிறிய அரிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சொரியாசிஸ் ஏற்படவும் பனிக்காற்று காரணமாகி விடுகிறது. தலையில் பொடுகு உள்ளவர்களுக்கு பனிக்காலத்தில் தொல்லை அதிகரிக்கும். தலைப் பகுதியில் உள்ள தோலில் ஏற்படும் வறட்சியின் காரணமாக பொடுகு பிரச்னை அதிகமாகி அது உதிரத் தொடங்கும். இதனால் தலை முடி பொலிவிழந்து அரிப்பு அதிகரிக்கும். முடியும் கொட்டும்.
குழந்தைகளுக்கு இக்காலங்களில் கொசுக் கடியால் தோலில் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் தோல் பகுதியில் அரிப்புடன் புண் ஆகியவை ஏற்படலாம். இதற்கு குளிப்பதற்கு ஈரப்பதம் உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் தோல் வறட்சியை தவிர்க்கலாம்.
சாதாரண சோப்பு பயன்படுத்துபவர்கள் குளித்து ஐந்து நிமிடத்துக்குள் ஈரப்பதம் நிறைந்த கிரீமை தோல் பகுதியில் தடவினால் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் இரவு தூங்க செல்லும் முன் பத்து நிமிடங்கள் மிதமான சுடுதண்ணீரில் கல்உப்பு சேர்த்து கால்களை வைத்திருக்கலாம். பின் சுத்தமாக துடைத்து விட்டு வெடிப்பு மறைவதற்கான கிரீம்களை பயன்படுத்தலாம்.
பொடுகினை தவிர்ப்பதற்கு வாரம் இரண்டு முறை கட்டாயம் தலைக்கு குளித்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இப்பிரச்னை உள்ளவர்களின் துண்டு, சீப்பு, சோப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். சொரியாசிஸ் மற்றும் அரிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக தோல் டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். பனிக் காலத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கொசுக் கடியால் தோலில் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. டாக்டரின் ஆலோசனைகளுடன் கொசு தடுப்பு கிரீம்களை பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment