Pages

Thursday, August 14, 2014

வீடு பார்க்கப் போறீங்களா?

வீடு பார்க்கப் போகும் போது பகல் நேரத்திலேயே செல்லுங்கள். பஸ் ஸ்டாப்பிலிருந்து அந்த வீட்டுக்கு நடந்து சென்று பாருங்கள். ஏனென்றால் நடந்து வந்தால் தான் எவ்வளவு நேரம் (தூரம்) ஆகிறது என்று தெரியும். நீங்கள் கார், வண்டி வைத்திருக்கலாம். ஆனால் உங்கள் வீட்டில் மனைவியோ, குழந்தைகளோ அடிக்கடி வெளியே செல்ல பஸ்தான் தேவைப்படும்!


முடிந்த வரை உங்கள் பிள்ளைகள் படிக்கிற பள்ளி அருகிலேயே வீடு இருக்கும்படி பாருங்கள்.

வீட்டைச் சுற்றி இடமிருந்தால் அதன் வழியே நடந்து சுற்றிப் பாருங்கள். அப்போதுதான் எங்கிருந்தெல்லாம் உங்கள் வீட்டைப் பிறர் கவனிக்க முடியும் என்பது புரியும்.

நீங்கள் குடிபோகும் வீட்டில் ஏற்கனவே குடியிருப்பவர்கள் காலி பண்ணாமல் இருந்தால் நீங்கள் சென்று வீடு பார்க்காதீர்கள். யாருமே இல்லாமல் வெறும் வீட்டை மட்டும் பார்க்கும்-போதுதான் வீடு எவ்வளவு பெரியது, நாம் வைத்துள்ள பொருட்களுக்கு அந்த வீடு போதுமா? என்பது தெரிய வரும்.

தண்ணீ­ர் வசதி, மின் வசதிக்கு தனி மீட்டர் தானா என்று நீங்களே சோதித்துப் பார்த்து விடுங்கள்.

தண்­ணீர் பைப் லீக் ஆவது, பாத்ரூமில் தண்ணீ­ர் அடைத்துக் கொண்டு போகாமல் இருப்பது, சில கதவுகள், ஜன்னல்கள் லாக் பண்ண முடியாமல் இருப்பது என்று எதுவாக இருந்தாலும் உங்க வீட்டு உரிமையாளரிடம் சொல்லி செய்யச் சொல்லுங்கள். அந்த வசதியை அவர் செய்து கொடுத்த பிறகே குடி வாருங்கள். குடி வந்த பிறகு அவர் செய்து தரமாட்டார்.

சில இடங்களில் கீழ் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மாடி வீட்டில் உரிமையாளர் இருப்பார். அவர் நாய் வளர்த்தால் எங்கு கட்டி வைப்பார்கள் என்று பாருங்கள். கேட் அருகே அல்லது உங்கள் வீட்டருகே கட்டி வைத்தால் அது குரைத்துக் கொண்டே இருக்கும். உங்களுக்குத் தொந்தரவாக இருக்கும். மேலும் அந்த இடத்தையும் நீங்கள் தான் சுத்தம் பண்ண வேண்டி வரும்.

குடிபோகும்போதே, வீட்டில் எத்தனை டியூப் லைட், ஃபேன் மற்றும் கண்ணாடி, ஜன்னல் உடைந்திருக்கிறது என ஒரு நோட்டில் குறிப்பிட்டு உங்கள் கையெழுத்து மற்றும் வீட்டு உரிமையாளர் கையெழுத்தையும் வாங்கி பத்திரப்படுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் காலி பண்ணும்போது ஏற்கனவே உடைந்திருந்த கண்ணாடி ஜன்னலுக்கும் நீங்கள்தான் தண்டம் அழவேண்டி வரும்.

நீங்கள் குடிபோகும் வீட்டின் காம்பவுண்டில் எத்தனை வீடுகள் உள்ளது என்று கவனியுங்கள். அவர்களுக்கு பாதை எது என்பதையும் கவனியுங்கள். ஏனென்றால் அவர்கள் செல்லும் பாதை உங்களுக்கோ, நீங்கள் புழங்கும் இடத்திற்கோ இடைஞ்சல் இல்லாமல் இருக்கிறதா என்று கவனியுங்கள்.

நீங்கள் எத்தனை இரு சக்கர வாகனம் வைத்துள்ளீர்கள்... உங்கள் வண்டியை நிறுத்த இடம் உள்ளதா எனபதைக் கவனியுங்கள்.

வீட்டு வாடகையை எத்தனை வருடத்துக்கு ஒருமுறை உயர்த்துவார்கள் என்பதைத் தெளிவாக பேசிக்கொள்ளுங்கள் ஏனென்றால், சில இடங்களில் உரிமையாளர் திடீரென்று 'அடுத்த மாத வாடகையுடன் ரூ.200 சேர்த்துக் கொடுங்கள்' என்று சொல்லி விடுவார்கள்.

Wednesday, August 13, 2014

கணினியில் வேலை செய்கிறீர்களா?

பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றைச் சரிசெய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்:

* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத 'குஷன்' நாற்காலிகளைப் பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

* முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். 

* கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். 

* தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.

* கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதைத் தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். 

* தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். 'ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்' ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.

* உடல் உழைப்புக் குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.

* இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதைத் தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.

சோயா  சாதம்

தேவையானவை:

சோயா சங்க்ஸ் - 10,
பாசுமதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி - ஒன்றரை கப்,
பச்சை பட்டாணி - அரை கப்,
நீளமாக நறுக்கிய  வெங்காயம் - 2,
தக்காளி - 1,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
கிராம்பு - 2,
சோம்பு - சிறிது,
பட்டை - 1 துண்டு,  
மராட்டி மொக்கு - 1,
பிரியாணி இலை - 2,
ஏலக்காய் - 2,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
புதினா இலை -  சிறிது,
கொத்தமல்லித்தழை - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்.

அரைப்பதற்கு...

முந்திரி - 10,
சோம்பு - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 6,
கசகசா - அரை டீஸ்பூன்,
கிராம்பு - 2,
வெங்காயம் - பாதி,
இஞ்சி - சிறு  துண்டு,
பூண்டு - 6 பல், கொத்தமல்லி மற்றும் புதினா இலை (இரண்டும் சேர்த்து) - கால் கப்.

செய்முறை: 

 சோயா  சாதம்அரிசியை 10 நிமிடங்களுக்கு வெந்நீரில் ஊற வைத்து, தண்ணீரை வடித்து வைக்கவும். அதற்கு மேல் ஊற விட வேண்டாம்.  அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். சோயா உருண்டைகளை தண்ணீரில் ஊற வைத்து, 10 நிமிடங்களுக்கு மிதமான  தணலில் கொதிக் கவிட்டு, அடுப்பை அணைக்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரிலிருந்து சோயாவை தனியே எடுத்து,  அவற்றிலுள்ள அதிகப்படியான தண்ணீரைப் பிழிந்துவிட்டு, ஒவ்வொரு உருண்டையையும் நான்காக வெட்டவும். பிரஷர் குக்கரில் எண்ணெயையும் நெய்யையும் சூடாக்கவும். புதினா இலை, பிரியாணி இலை, சோம்பு, பட்டை, மராட்டி மொக்கு,  கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். வாசனை வரும் போது வெங்காயம் சேர்த்து பொன்னிறத்துக்கு வதக்கவும். தக்காளி சேர்த்து எண் ணெயும் தக்காளியும் தனித்தனியே பிரிகிற வரை வதக்கவும்.

தண்ணீர் சேர்க்க வேண்டாம். நறுக்கி வைத்துள்ள சோயா, பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடங்களுக்கு வேக விடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. தயிர் சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து நன்கு கிளறவும். இந்தக் கட்டத்தில் அரிசியைச் சேர்த்து நன்கு பிரட்டவும். ஒன்றுக்கு ஒன்றே  கால் அளவு கணக்கில் தண்ணீர் சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். உப்பு, எலு மிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து 2 நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். எலுமிச்சைச்சாறு சேர்ப்பதால் அரிசி ஒன்றோடு  ஒன்று ஒட்டாமல் வேகும். குக்கரை மூடி, குறைந்த தணலில் 2 விசில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக விடவும். ரெய்த்தா உடன் பரிமாறவும்.

வீட்டு வைத்திய குறிப்புகள்!

சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் கொண்டவை.

1.சுக்கு,மிளகு,திப்பிலி:
இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும். மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும். இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி:
தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது. வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி:
சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி, டார்டாரிக் அமிலம், கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே, காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள். சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி:
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்:
இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி:
உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும். இரத்தம் சுத்தமாகும். எல்லா உறுப்புகளும் சீராகச் செயல்படும். காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

Saturday, August 9, 2014

தீராத தலைவலிக்கு நொச்சி இலை வைத்தியம்


தமிழகத்தில் பருவநிலை மாற்றமடைந்துள்ளது. வெயில், காற்று, மழை என மாறி மாறி தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதனால் மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தும்மல், சளி பிடித்தல், இருமல், தலையில் நீர் ஏற்றம்,  தலைவலி மற்றும் காய்ச்சலால் அவதிக்கு ஆளாகின்றனர். சிக்குன்குன்யா, டெங்கு காய்ச்சல் மற்றும் விஷக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயம் அனைத்து அரசு மருத்துவமனை சித்தா பிரிவிலும் கிடைக்கிறது. நோயாளிகள் குடித்தும், பவுடராக வாங்கியும் செல்கின்றனர்.

இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி சித்த மருத்துவ உதவி மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி கூறியதாவது: சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் என சிகிச்சைக்கு வருகிறார்கள். சளி, காய்ச்சல் குணம் அடைய சித்தா மருத்தவ பிரிவில் தேவையான மருந்துகள் இருக்கிறது. உடல்வலியுடன் கூடிய விஷகாய்ச்சலுக்கு சித்த மருத்துவ பிரிவில் நிலவேம்பு என்ற கசாயம் காய்ச்சி வைத்து இருக்கிறோம். அதை இலவசமாக குடித்து செல்லலாம். தொடர்ந்து குடித்தால் நான்கு நாட்களில் குணமாகிவிடும். ஒருநாளைக்கு இருமுறை குடிக்கலாம். நாங்கள் மருத்துவமனையில் காலையில் மட்டுமே வழங்குகிறோம். இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் குடித்தால் பலன் அதிகம்.

இதுபோக, தலைவலிக்கு நீர்கோவை என்ற மாத்திரையை உரைத்து பத்துபோட வேண்டும். ஆடாதோடை என்ற இலையை கசாயமாக செய்து தொடர்ந்து 4 நாட்கள் குடித்தால், சளி, காய்ச்சல் கட்டுக்குள் வரும். மேலும் நொச்சி இலை அல்லது கற்பூரவள்ளி இலையை சுடுநீரில் போட்டு ஆவிபிடித்தால், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தும்மல், சளி பிடித்தல், இருமல், தலையில் நீர்ஏற்றம், தலைவலி குணமாகும். தாளிசபத்திரி சூரணம், வசந்தகுசுமாத்திரை, சுதர்சன மாத்திரை, சாந்த சந்திரோதயம் மாத்திரைகள் உட்கொண்டால் சளி மற்றும் காய்ச்சல் குணம் அடையும்.

Friday, August 8, 2014

லிப்ஸ்டிக் போடலாம் வாங்க!

சிலருக்கு தங்கள் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுப்பது மற்றும் அதை போட்டு கொள்வது எப்படி என்று தெரிவதில்லை. அவர்களுக்கான டிப்ஸ் இதோ:

• கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

• மாநிறமாக இருப்பவர்கள் நேச்சுரல் கலரில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

• சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும்.

• வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

• லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

• லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.

• உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

• உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். பொதுவாக, இந்திய பெண்களின் நிறத்துக்கு மெரூன், பிங்க் மற்றும் பிரவுன் கலர் லிப்ஸ்டிக் அழகாக இருக்கும்.

கலர் பிடிக்காதவர்கள் நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். மேற்கூறிய முறைகளை பின்பற்றி வந்தால், அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

இயற்கை தரும் ஆரோக்கியம்! - 300th Post

தொண்டைப்புண் குறைய: சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

தலைவலி குறைய: கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

 மூட்டு வலி குறைய: கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலிஉள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டுவலி குறையும்.

 காதுவலி குறைய: கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்று போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்.

 கண் உஷ்ணம் குறைய: வெள்ளை நத்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.

 வாய்ப்புண் குறைய: பலா இலையை வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.