Pages

Showing posts with label அஜீரண கோளாறுகள். Show all posts
Showing posts with label அஜீரண கோளாறுகள். Show all posts

Wednesday, August 13, 2014

கணினியில் வேலை செய்கிறீர்களா?

பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றைச் சரிசெய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்:

* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத 'குஷன்' நாற்காலிகளைப் பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

* முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். 

* கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். 

* தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.

* கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதைத் தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். 

* தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். 'ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்' ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.

* உடல் உழைப்புக் குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.

* இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதைத் தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.