Pages

Thursday, April 3, 2014

உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையுமா?

உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும்.ஆனால் தொப்பை குறையுமா? பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் நன்றாக பசியெடுக்கும்,அதனால் அதிகம் சாப்பிடுவார்கள். எனவே எடை  குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல.

உடற்பயிற்சி ஜீரண மண்டலத்தை தூண்டி விடுகிறது.இதனால் நன்கு பசித்தால் ஆரோக்கியம் கூடுவதாகவே பொருள்.சந்தேகமில்லாமல் உடற்பயிற்சி நல்ல விளைவுகளை  தருகிறது.அரைமணி நேர உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் நல்லதுதான்.

தொப்பை இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன? உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா? வாக்கிங்,உடற்பயிற்சி இதையெல்லாம் பலர் கடனுக்கு செய்கிறார்கள். இன்று மருத்துவர் சொன்னார் என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள்.

வாயைக்கட்டினால் வயிற்றைக் கட்டலாம் என்று சொல்வார்கள். பெரும்பாலானவர்களுக்கு இது முடியாமல் போய்விடுகிறது. உணவை உள்ளே தள்ளுவதில் விழிப்புணர்வு இல்லை என்பதே சரி.நாக்கை அடக்கினால் மட்டுமே தொப்பையையும்,பருமனையும் கட்டுப்படுத்த முடியும்.

உடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும் போதுமான அளவு சேர்ந்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.இன்றைய குழந்தைகளும் அதிக பருமனாகி வருகிறார்கள்.அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம்.

உடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.மிக அவசியமானதும் கூட! ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல! உணவு முறையில் மாற்றம் கொண்டுவருவதே ஒரே வழி.

பிளாங்க் எக்ஸர்சைஸ்கள்

பிளாங்க்
பிளாங் எக்ஸர்சைஸ் எனக்கூறப்படும் பயிற்சிகள் கோர் பயிற்சிகளை சார்ந்ததாகும்..இது ஒரு நிலையான பயிற்சி இதன் மூலம் வயிற்றில் உள்ள தசைகள் முதுகுப்பகுதி   தோள் பகுதி ஆகியவை பலம் பெறும்.. இதில் பல வகைகள் உள்ளது ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதியில் உள்ள தசைகளை பலம் பெற செய்கின்றது

இப்பயிற்சிகளின் மூலம் சம அளவு வலிமை உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கிடைப்பதால் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வோர் இவற்றை  எப்போதும் தொடர்ந்து செய்வது நல்லது…. இப்பயிற்சியை செய்யும் போது மூச்சை ஆழ இழுத்து வயிற்றில் உள்ள தசைகளை சுருக்கிப்பழக்கப்படுத்த வேண்டும்….

அப்போது உங்கள் இடைப்பகுதி  மெலிய துவங்கும் … வயிற்று  தசையினை உள்ளிழுக்கும் போது மூச்சு சீராக இருத்தல் வேண்டும்… இந்த்  நிலையை டிரான்ஸ்வெர்ஸ் என்கிறோம் … இதை மனதில் இருத்தி உங்கள் வயிற்றில் உள்ள குறுக்குதசைகளை பலப்படுத்தினாலே உங்கள் இடுப்பு பகுதி சுருங்க துவங்கும் …

ரெகுலர் பிளாங் எக்ஸர்சைஸ் வயிற்றில் உள்ள தசைகளை வலுப்படுத்தினால் ரிவர்ஸ் பிளாங் பயிற்சியானது  பின்புற தசைகளுக்கு நல்ல பலனை தருகின்றது சைட் பிளாங் எக்ஸர்சைஸ் உடலின் பக்கவாட்டில் உள்ள தசைகளை வலுப்படுத்துகிறது…

இன்சுலின் சுரக்க ‘வாழைப்பூ’

வாழை முழுவதுமாக மனிதர்களுக்கு பயன்படக்கூடியது. வாழை யின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லாவற்றை யும் நாம் பயன்படுத்துகிறோம். பெரும்பாலானவற்றில் அதிக சத்து இருக்கிறது. வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம். மொந்தன் வாழைப்பூ, நாட்டு வாழைப்பூ, ரஸ்தாளி வாழைப்பூ ஆகியவை ரொம்பவும் துவர்க்காது.

அவை அதிக சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கிறோம். வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம். வாழைப்பூவில் இருக்கும் மருந்துவ குணங்கள்:
வாழைப்பூ
* வாழைப்பூ சாப்பிட்டால் கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

* பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.

* உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.

* மூலநோய் கட்டுக்குள் வரும்.

* வாழைப்பூவில் உப்பு போட்டு அவித்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.

* ஆண்களுக்கு தாது விருத்தி அடையும்.

* மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது. வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவேண்டும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் புதிய வழி

சர்க்கரை நோய்
பொதுவாக, நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது கணையமாகும். இதில் உள்ள பீட்டா அணுக்கள் உற்பத்தி செய்யும் இன்சுலின் திரவம், இந்த செயலைப் புரிகின்றது. இந்த செயல்பாடு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சாண்டியாகோ மருத்துவக்கழக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது.
 
இந்தக் கண்டுபிடிப்பு, தற்போது மற்றொரு புதிய முயற்சிக்கும் வித்திட்டுள்ளது. சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளவர்களுக்கு, இந்த பீட்டா அணுக்களின் செயல்பாடுகளைத் தூண்டிவிடுவதன் மூலம், இந்நோய் வராமல் தடுக்கலாம் என்பதே அந்தப் புதிய முயற்சி ஆகும்.
 
பிராக்டல்கைன் எனப்படும் புரதம் கலந்த மெல்லிய திசுப்படலத்தை பீட்டா அணுக்களின் மீது பொருத்தினால், அவை புரத சத்தை ரத்தத்தில் கலக்கச் செய்து, இன்சுலினை சுரக்க உதவி புரியும் என்பதே விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும். இதற்கு முன்னால் இந்த முயற்சி பற்றி எதிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் இது ஒரு அற்புதக் கண்டுபிடிப்பு என்றும் பேராசிரியர் ஒலேப்ஸ்கி கூறுகின்றார்.
 
இன்சுலின் திரவ உற்பத்தியும் குளுக்கோஸ் கட்டுப்படுத்தப்படுதலும், சர்க்கரை நோய் வராமலிருக்கத் தேவையான முக்கிய விஷயங்கள் ஆகும். இதனை பிராக்டல்கைன் படலம் திறம்பட செய்வதோடு வேறு எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பது இதன் சிறப்பாகும்.

மூலிகை மருத்துவ குறிப்புகள்

மூலிகை மருத்துவம்
பெரிய நோய்களை தவிர, அன்றாடம் உடலில் ஏற்படும் சீர்கேடுகளை வீட்டில் உள்ள பொருட்களின் மூலமாகவே போக்கி கொள்ளலாம்.

சுக்கு: தினம் காலையில் சுக்குக் காப்பி பருக மூக்கடைப்பு, உடல் பித்தம் குணமாகும். பசியை தூண்டவும், அஜீரணத்தை போக்கவும் வல்லது.

மிளகு: சளி, பசியின்மையைப் போக்குகிறது. திடீர் அரிப்பு, தடிப்புக்கு, ஆஸ்துமா, சைனஸ்(நீர்கோவையுடன் மூக்கடைப்பு) சிறந்த நிவாரணமாகிறது.

திப்பிலி: திப்பிலியை வெற்றிலை, தூதுவளை சாறில் ஊறவைத்து பொடி ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட இருமல் குணமாகும். அதனுடன் தண்ணீர் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய்கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசுதல், தொண்டை புண், தொண்டை சளி குணமடையும்.

தூதுவளை: இதன் இலையை கசக்கி சாறு எடுத்து 2 சொட்டு தினசரி காதில் விட காது அடைப்பு குணமாகும். எப்போதும் இருமல் சளியுடன் இருப்பவர்கள் இதன் பழங்களை தேனில் குழைத்து சாப்பிட சளி நீங்கும். இதில் உள்ள சொலுயூசன்ஸ் சளியை அறுத்து வெளியே தள்ளும் ஆற்றல் மிக்கது. இதனை ரசம் வைத்தும் சாப்பிட பயன்படுத்தலாம்.

கீழாநெல்லி: தண்டு மற்றும் கீரையை இடித்து துணியில் வைத்துப் பிழிந்து சாறு எடுத்து, சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை- மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டு வர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை ரத்தமின்மைக்கு நல்லமருந்து. ஹெபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்ற கல்லீரலை மீட்கிறது.

துளசி: மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வைரஸை எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது. தோல் வியாதி ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க, சீரணத்தை அதிகரித்து அஜீரணத்தை போக்க வல்லது. சளியுடன் வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு சிறந்த மருந்து.

நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. 20 துளசி இலைகளை 100மி தண்ணீரில் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய் கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசூதல், தொண்டை புண், தொண்டைச்சளி குணமடையும்.

கரிசலாங்கண்ணி: கல்லீரலில் ஏற்படும் புண் வீக்கம் மற்றும் ரத்தகசிவை குணப்படுத்தும். இதிலுல்ல இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி, பல், கண் தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது. ஜீரணத்தை அளிக்க வல்லது.

இருமலை மட்டுபடுத்தும், அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை உள்ளோர் பச்சையாகவோ அல்லது வற்றலாகவோ வாரம் இருமுறை உண்டு வர சளி பிடிக்காது. தொண்டை வலி இதய பலவீனத்தைப் போக்கும்.

புத்துணர்ச்சி தரும் சக்தி பானங்களால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: ஆராய்ச்சியில் தகவல்

புத்துணர்ச்சி பானம்
மக்களுக்கு உடனடி புத்துணர்ச்சியைத் தரும் சக்தி பானங்கள் பல விற்பனைசந்தையில் உள்ளன. ஆனால் இவை அதிக ரத்த அழுத்தத்தையும், மரணம் விளைவிக்ககூடிய மாரடைப்பையும் தர வல்லவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

ஏற்கனவே ரத்த அழுத்தத்தினாலோ, இதய நோய்களாலோ அவதிப்படுபவர்கள், இது போன்ற பானங்களை எச்சரிக்கையுடன் தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள், இதற்கு முன்னால், இது குறித்து வெளியிடப்பட்ட ஏழு புள்ளிவிவரக் கணக்கீடுகளையும். ஆய்வு செய்தனர். இந்தக் கணக்கீடுகளில், 18 வயதில் இருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டிருந்தன.

முதலில், இந்த ஆய்வாளர்கள் ஒன்று முதல் மூன்று எண்ணிக்கை வரை சக்தி பானங்கள் குடித்தவர்களின் இதயத்துடிப்பை பரிசோதித்தார்கள். அவர்களின் ஒவ்வொரு துடிப்பிற்கும் நடுவில் 10 மில்லிசெகண்டு இடைவெளி அதிகரித்து இருந்தது. இது இதயத்துடிப்பின் சீரான தன்மையைக் குலைத்து, இறுதியில் மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

சக்தி பானத்தை அருந்திய 132 பேரை பரிசோதித்த அவர்கள், அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தத்தின் அளவு 3.5 புள்ளிகள் அதிகரித்து இருந்ததையும் கண்டறிந்தார்கள்.

இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் அனைத்தும், அமெரிக்காவின் ஹார்ட் அசோசியேஷன் நடத்திய நோய்த்தொற்று மற்றும் அதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்பு குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டது.

Tuesday, April 1, 2014

வியர்வையில் குளிக்கிறீர்களா?

வியர்வை
கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வையும், அதனால் ஏற்படும் நாற்றமும் அதிகமாக இருக்கும். எவ்வளவு வாசனைத் திரவியங்களைப் பூசினாலும் அது தீர்வதில்லை.

அடிக்கும் வெயிலுக்கும் வியர்வைக்கும் பயந்து, குளிர்சாதன அறையிலேயே முடங்கிக் கிடப்பவர்களும் இருக்கிறார்கள். வியர்வையின் அளவை வைத்துத்தான் நமது உடல் வெப்பநிலையையே கணக்கிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். மனிதர்கள் அனைவருக்கும் வியர்வைச் சுரப்பி ஒரே எண்ணிக்கையில்தான் இருக்கும்.

அந்த சுரப்பிகள் இயங்கும் தன்மையில்தான் அதிகம், குறைவு என்று வேறுபடும். உண்மையில் வியர்க்காமல் இருந்தால்தான் பிரச்சினை. அதேநேரம் அதிகம் வியர்ப்பதும் ஒருவித நோய் பாதிப்பின் தன்மையாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் மருத்துவரைச் சந்தித்து தங்களுக்கு அதிகமாக வியர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்பச் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

உண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் வியர்வையில் பாக்டீரியா தொற்றால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது.

வியர்வையில் இரண்டு விதங்கள் உண்டு. சிலருக்கு உடல் முழுக்க ஒரேமாதிரி வியர்க்கும். சிலருக்கு முகம், தலை, வயிறு, தொடை, அக்குள் என்று குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வியர்க்கும். உடல் பருமன் அதிகமாக இருப்பதும் வியர்வைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

சிலர் மசாலா நிறைந்த உணவை ஆர்வமாய் அள்ளித் திணிப்பார்கள். இவர்களிடம் இருந்து வெளிப்படும் வியர்வை துர்நாற்றம் நிறைந்ததாய் மாறிவிடுகிறது. துர்நாற்ற வியர்வையால் அவதிப்படுகிறவர்கள் மசாலா, பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

உடம்பு நன்றாக வியர்த்து விட்டால் உடனே குளிப்பவர்கள் பாக்டீரியா தொற்றில் இருந்து தப்பி விடுவார்கள். இப்படிக் குளிப்பவர்கள் அந்த வாளித் தண்ணீரில் இயற்கை நறுமணப் பொருட்களை இட்டு உடலுக்கு ஊற்றிக் குளிக்கலாம். வியர்வை நாற்றம் விலகிவிடும்.

கோடையைச் சமாளிக்கும்விதமாக தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். அதோடு இந்தக் கோடையில் தவறாமல் கிடைக்கும் இளநீர், பனை நுங்கு, பதநீர் பருகுங்கள். வியர்வை கட்டுப்படுவதோடு, வெளிப்படும் கொஞ்ச வியர்வையும் நாற்றம் இல்லாததாக இருக்கும். கொஞ்சம் கவனம் வைத்தால், வியர்வைப் பிரச்சினையை விலக்கிவிடலாம்!