இன்றைய வேகமான சூழலில் முறையான உணவுப் பொருட்களை சாப்பிடாததால், பல்வேறு சத்துக்குறைபாடு நோய்கள் ஏற்படுகின்றன. காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் தானியங்களை சம அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். மாறிவரும் உணவுப் பழக்க வழக்கத்தாலும், துரித உணவுகளை உட் கொள்வதாலும், இளைய தலைமுறையினர் மாற்று உணவு கலாச்சார முறைக்கு அடிமையாகி வருகின்றனர்.
இயற்கை உணவுகளை விட்டு நாம் நெடுந்தொலைவு வந்து விட்ட காரணத்தால், நோய் நொடிகள் நம்மை நெருங்கி விட்டன. டப்பா உணவுகள் கமர்சியல் சத்து மாவுகளை தரம் பார்த்து நிறுவனம் பார்த்து வாங்கலாம். ஆனாலும் கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, தினை என சிறுதானியங்களில் கிடைக்கும் சத்துக்கு நிகர் இல்லை. நமது முன்னோர்களே அதற்கு தக்க சாட்சி. குறிப்பாக நம்மில் பலர் குறிப்பிட்ட பழங்களை தவிர மற்ற பல வகைகளை சாப்பிடுவதே கிடையது. முப்பது வகையான பழங்கள் சாப்பிடக்கூடியவையாக உள்ளன.
மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, கொய்யா என குறிப்பிட்ட சில பழங்களை தவிர, மற்ற பழங்களை பெரும்பாலும் சாப்பிட அக்கறை கொள்வதில்லை. ஒவ்வொரு பழங்களும் குறிப்பிட்ட விட்டமின் சத்துபொருட்களை உடலுக்கு தருகின்றன. மலிவு விலையில் கிடைக்ககூடிய நெல்லிக்காய், சப்போட்டா, முந்திரி பழம், ஈச்சம் பழம், பேரிச்சம் பழம், வெள்ளரி போன்றவைகளை சாப்பிடுவோர் மிகக்குறைவே. இதனால் விட்டமின் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பிட்ட காலநிலைகளில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகளவில் சாப்பிடுவதும் தவறு. வெயில் காலத்தில் மாம்பழம் கிடைக்கிறது என்பதற்காக அதிகளவில் சாப்பிட்டால் சூடு பிடிக்கும். இதற்கு இயற்கை தந்த மாற்று பழம் தான் வெள்ளரி. இதில் அதிகளவில் நீர்ச்சத்து இருப்பதால், கோடை தாகத்திற்கு தண்ணீருக்கு மாற்று உணவாக கருதப் படுகிறது. பொதுவாக பழங்கள் வாங்க கடைக்கு செல்லும் போது பளபளப்பாக மீனுக்கும் தன்மையுடன் இருக்கும் பழங்களை தேர்ந்தெடுக்க கூடாது.
பெரும்பாலான பழங்கள் விரைவில் காய் நிலையில் பழுக்க வேண்டும் என்பதற்காக, ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன. இதனால் மினுக்கும் தன்மையுடைய பழங்களை தவிர்த்தல் நல்லது. பேரீச்சம் பழம் வாங்கும் போது காய்ந்த கருப்பு நிறமுடையவைகளை தெளிவு செய்ய வேண்டும். குறைந்த விலையில் மலிவாக கிடைக்கிறது என்பதற்காக எண்ணை தடவிய பேரிச்சம் பழங்களை வாங்கி சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடலாம்.
மாதுளம், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை வாங்கும் போது, நுகர்ந்து பார்த்து வாங்க வேண்டும். மணத்தை வைத்து இப்பழங்கள் சாப்பிட தகுதியானவை என்பதை தெரிந்து கொள்ளலாம். வெளிஇடங்களில் பழ ரசம் சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது. பழரசம் செய்து சாப்பிடுவதை காட்டிலும் பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் ஈறுகள் வலுவடைவதோடு அல்லாமல் வாய் புத்துணர்ச்சி அடையும். இனி பழங்கள் வாங்குவதற்கு முன் பலமுறை யோசித்து தெளிவு செய்யுங்கள்.