உணவே மருந்து அன்றைககு நம் முன்னோர் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவு தான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்துக்கு காரணமாக விளங்குகிறது. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம் தான். அதிலும் இப்போது பாஸ்ட் புட் கலாசாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க, பழங்கால உணவு முறைக்கு மாறினால் தான் நல்லது.
பசுமை புரட்சிக்கு பின் தான் அனைவரும் நெல்லரிசியை முதன்மையாக கொண்டு தங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டனர். இதனால் சிறு தானியங்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. நெல், கோதுமை என்ற பசுமைப் புரட்சியின் ஒற்றைச் சிந்தனையிலிருந்து விடுபட்டு வரகு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரை வாலி போன்ற சிறு தானியங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய மருத்துவக் கழகம் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் 42 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அந்நோய் அறிகுறிகளுடன் 30 லட்சம் பேர் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. நெல், கோதுமை, வாழை, கரும்பு ஆகியவற்றை காட்டிலும் சிறு தானிய பயிர்களே பல்லுயிர் பெருக்கத்துக்கு காரணமாக உள்ளன. வரகு, சாமை, கம்பு, பனிவரகு, கேழ்வரகு, திணை ஆகியவற்றை தேடி உன்ன வேண்டும். கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும். இது தாய்மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். சோளத்தில் உடலுக்கு தேவையான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒததுக்கொள்ளாது. வரகில் புரதம், இரும்பு, மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. தானியங்களில் அதிக சத்து மிக்கது கேழ்வரகு, ராகி என்றும் இதை அழைப்பர். புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. இது உடல் உஷ்ணத்தை சம நிலையில் வைத்திருக்கும் குடலுக்கு வலிமை அளிக்கும், நிரழிவு நோயாளிகள் கூட கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.
புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது, மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகரிக்கும். இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். சம்பா வகையில் சீரகச் சம்பா அரிசி, ஆரம்ப நிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம் கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச் சம்பா, கோரைச் சம்பா, கடைச் சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை. அரிசியை விட கோதுமையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்.
No comments:
Post a Comment