நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளை கடை பிடித்தாலே, ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். அதற்கான வழிமுறைகளில், மிக முக்கியமானது, நம் கைகளை சுத்தப்படுத்துவது. கைகளை கழுவுவதாலேயே, பெரும்பாலான நோய்கள் வருவதை தடுக்கலாம். காரணம், காற்றின் மூலமும் நீரின் மூலமும், மற்றப் பொருட்களை தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம்.
கை கழுவும் முறையை சரியாகப் பின்பற்றாமல், பல நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவது, வளரும் நாடுகள் தான். நம் இந்தியா போன்ற ஆசிய நாடுகள், உணவை கைகளால் எடுத்து உண்ணும் வழக்கம் கொண்டுள்ளது. இந்தியாவில், கைகளை ஒழுங்காகக் கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும், வயிற்றுப்போக்கு நோயால் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும் போதும், கை கால்களில் பக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன.
இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே, அழிக்க முடியும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு, அடிப்படை காரணம், அவர்கள் கைகளை ஒழுங்காகக் சுத்தம் செய்யாமல் இருப்பதே. தவிர ஸ்டேபை 'லோகாக்கஸ் ஆரியஸ்' என்ற கிருமி, நகங்களில் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு, உணவருந்தும் சமயம் உட்சென்று, குடலில் பல்கிப் பெருகி நோயை தோற்றுவிக்கிறது.
கைகழுவும் முறை:
* காலையில் படுக்கையில் எழுந்தவுடன், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.
* மலம் கழித்தபின், சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.
* எந்த வேலை செய்தாலும், உடனே கை கழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட, பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.
* வாகனம் ஒட்டி வந்தபின் கைகளை கழுவுவது நல்லது.
* குழந்தைகளுக்கு எந்த உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களின் கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே, கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை, அவர்கள் சீராக கடைபிடிக்கும்படி, செய்ய வேண்டும்.
* கைகளை அவசர அவசரமாக, 2-3 வினாடிகளில் கழுவக்கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு, எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை, பயன்படுத்தக்கூடாது.
* கைகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே நோய்கள் நெருங்காமல் தடுக்கலாம்.