Pages

Saturday, April 26, 2014

செரிமானப் பிரச்சினையா?

செரிமானம்
பசியால் வாடுவோரைவிட செரிமானப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள். அதிகமான உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் போன்றவை செரிமானப் பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணம் ஆகின்றன.

நல்ல விருந்து சாப்பிட்டுவிட்டு உடனடியாகத் தூக்கத்தைப் போட்டால் செரிமானப் பிரச்சினையால் தான் திணற வேண்டியிருக்கும். பொதுவாகவே, வயிறு முட்ட உண்பதைத் தவிர்க்க வேண்டும். உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். செரிமானப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க மேலும் சில யோசனைகள்...

* பிடித்த, ருசியான உணவு என்பதால் அதிகமாக உண்பது, மன அழுத்தம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* செரிமான சக்தியை அதிகரிக்க எலுமிச்சம்பழம் சிறந்தது. அரை மூடி எலுமிச்சம்பழத்தை ஒரு டம்ளர் நீரில் கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.

* இஞ்சியும் செரிமானத்துக்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித் துண்டுகளை சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிடலாம்.

* இஞ்சிச் சாறையும், எலுமிச்சைச் சாறையும் நன்றாகக் கலந்து, ஒரு ஸ்பூன் குடித்தால் செரிமானக் கோளாறு நீங்கும்.

* ஒரு தேக்கரண்டி சீரகம் கலந்த நீரில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லிச் சாறில் உப்பு போட்டுக் குடிக்கலாம்.

* ஓமம் வயிற்றுக்கு நல்லது. ஓமத்தை மோரில் கலந்தும் அருந்தலாம்.

* ஜீரண அவஸ்தை ஏற்படாமல் தவிர்க்க ஆயுர்வேதம் அளிக்கும்

குறிப்பு இது:

கோதுமை உணவுக்குப் பிறகு குளிர்ந்த நீர் அருந்தவும். மாவுப் பண்டங்களைச் சாப்பிட்ட பின் சூடான நீரை அருந்தவும். பயறு உணவு வகைகளை உண்ட பின் நீர் மோர் அருந்தவும். சாப்பாட்டு விஷயத்தில் எப்போதும் கவனமாக இருந்தால் செரிமானப் பிரச்சினையே ஏற்படாது! 

ஆரோக்கியம் தான் சொத்து

ஆரோக்கியம்
உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுத்தால் அது ஆரோக்கியம் நிறைந்த சொத்தாக மாறுகிறது! தினமும் ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கீரை சாப்பிட்டவுடன் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

இரும்புச்சத்து, தாது உப்புக்கள், கால்சியம் நிறைந்து இருப்பதால் உடல் சீராக இயங்க கீரை வகைகள் உதவும். எலும்புகள் உறுதிப்படும். புதிதாக பறிக்கும் கீரைகளை அதற்கு தகுந்தபடி உடனேயே பொரியல் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

நோய் அண்டாது. குழந்தைகளை எல்லாவிதமான காய்கறிகளையும் உண்ணப் பழக்க வேண்டும். வயதானவர்கள் நீர்ச்சத்து, நார்ச்சத்து அடங்கி உள்ள அவரைக்காய், புடலங்காய், பூசணி, பீன்ஸ், வாழைத்தண்டு, கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.

தினமும் இரண்டு விதமான காய்கறிகள் சேர்த்து கொண்டால் உடலுக்கு நல்லது. பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பிஸ்தா, அக்ரூட் போன்ற பருப்பு வகைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது அவசியம். மொத்த பருப்பு வகைகளையும் கலந்து அதில் தினமும் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவில் சாப்பிடவேண்டும்.

இதனால் உடல் எடையும் கூடும். குழந்தைகளின் உடல் உறுதியாகும். சருமம் பொலிவடையும். முளைவிட்ட பயறு வகைகளில் நீர்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளன. கூடவே ரிபோபிளேவின் பி காம்பிளக்ஸ் வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.

அப்படியே சாப்பிடாமல் வெந்நீரில் போட்டு லேசாக வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். தினமும் 50 கிராம் அளவுக்கு முளை விட்ட தானியத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். உணவில் எண்ணெயை அளவோடு சேர்த்து கொண்டால் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்.

எண்ணெய் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு தேவையில்லாத கொலஸ்டிரால் உருவாகி பல நோய்களை உண்டுபண்ணும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயறு வகைகள் தேவை. அதே நேரத்தில் அதை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். தினமும் 50 முதல் 75 கிராம் வரை சாப்பிடலாம்.

வெல்லத்தின் வெகுமதிகள்!

வெல்லம்
வெல்லத்தின் வெகுமதிகள்!'இனிப்பு ஆபத்தானது' என்று பலரும் பலமுறை சொல்லக் கேட்டிருப்போம். ஆரோக்கிய வாழ்க்கைக்கு இனிப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதே மருத்துவம் சொல்லும் முதல் தகவல். பருமன், நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் விதிக்கும் தடைப் பட்டியலில் முதன்மையாக இருக்கிறது இனிப்பு.

ஆனால் அதேவேளையில், சர்க்கரைக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்படும் வெல்லத்தில் அவ்வளவு பிரச்சினைகள் இல்லை. இன்றும் பல கிராமங்களில் காபி, டீ உள்பட எல்லாவற்றுக்கும் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துக்கொள்கிறார்கள்.

வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக்குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யக்கூடியது. அதனால்தான் பலர், உணவு உண்டபிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள். செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தைச் சரிசெய்யும் சக்தி வெல்லத்துக்கு உண்டு.

சர்க்கரை சேர்த்துக்கொள்வதால் வரக்கூடிய 'அசி டிட்டி' எனப்படும் அமிலம் சுரக்கும் பிரச்சினை, வெல்லம் சேர்த்துக்கொள்வோருக்கு வருவதில்லை. இது ரத்தத்தையும் சுத்தப்படுத்தக்கூடியது. எனவே உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர்கள் எப்போதும் சிபாரிசு செய்வது வெல்லம்தான்.

வெல்லத்திலும், பனை வெல்லத்திலும் இரும்புச்சத்தும், கால்சியமும் அதிகமாக உள்ளன. சர்க்கரை தயாரிப்பின்போது, அதை வெண்மையாக்குவதற்கு சில ரசாயனங்களைச் சேர்ப்பதால் இரும்புச் சத்து அழிக்கப்படுகிறது. வெல்லத் தயாரிப்பில் அந்த இழப்பு இல்லை.

வெல்லம் என்று நாம் பொதுவாகச் சொல்வது, கரும்புச் சாறில் இருந்து தயாரிக்கப்படுவது. பனைமரத்தில் இருந்தும் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கரும்பிலிருந்து பெறப்படும் கரும்புச் சாறிலிருந்துதான் வெல்லமும், சர்க்கரையும் கிடைக்கின்றன.

தண்ணீர்ப் பசையின்றி கெட்டியாகக் காய்ச்சப்பட்ட கரும்புச் சாற்றிலிருந்து வெல்லம் எடுக்கப்படுகிறது. வெல்லத்தை விட பனைவெல்லம் இன்னும் சிறந்தது. அதில் பி1, பி2, பி3, பி6, பி12 சத்துகள் அடங்கியிருக்கின்றன. சர்க்கரை தேவைப்படும் இடங்களில் வெல்லம் அல்லது பனைவெல்லம் சேர்ப்பது நல்லதே!

Thursday, April 24, 2014

எடை குறைய.. இடை மெலிய..

எடை குறைய
திருமணத்திற்கு முன்பு, கல்லூரி கதாநாயகியாக கொடி இடையுடன் வலம் வந்த பெண்கள் பலர், திருமணமான சில வருடங்களிலே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் பருமனாகி அவஸ்தைப்படுகிறார்கள். சிறுவயதில் இருந்தே நாட்டியம் கற்று டீன்ஏஜில் கட்டான உடலுக்கு எடுத்துக்காட்டாய் இருந்த பெண்கள் பலர் கல்யாணமாகி ஒன்றிரண்டு குழந்தைகள் பெற்ற பின்பு உடல் பருத்து, எப்படி எடையை குறைப்பது என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று உலகையே அச்சுறுத்தும் பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. இந்தியாவில் ஆண்களில் 12 சதவீதம் பேரும், பெண்களில் 16 சதவீதம் பேரும் உடல் எடை அதிகரிப்பால் ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். மாநிலங்களைப் பொறுத்த வரையில் பஞ்சாபில் 30 சதவீத ஆண்களும், 38 சதவீத பெண்களும், தமிழ்நாட்டில் ஐந்தில் ஒரு ஆμம், நான்கில் ஒரு பெண்ணும் குண்டு உடலால் ஏகப்பட்ட நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

யாருடைய உடலும் திடீரென்று ஒரே நாளில் மேஜிக் போன்று பருத்துப்போய்விடுவதில்லை. அவர்கள் தேவைக்கு அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருந்ததால், பல மாதங்களாக சிறுகச் சிறுக எடை உயர்ந்து அவர்களை குண்டாக்கி இருக்கிறது. இன்று உடல் உழைப்பும்- உடற்பயிற்சியும் தனித்தனியாக பிரித்துப்பார்க்கப்படுகிறது. முற்காலத்தில் மக்கள் கடுமையாக உழைத்தனர்.

அதுவே அவர்களுக்கு உடற்பயிற்சியாக இருந்தது. அதனால் அவர்கள் உண்ட உணவின் கலோரி எரிக்கப்பட்டு, ஆரோக்கிய உடலுடன் வாழ்ந்தார்கள். இன்று உடல் உழைப்பே இல்லாமல், இருக்கைகளில் உட்கார்ந்த படியே வேலைபார்த்து, இஷ்டத்திற்கு சாப்பிட்டு, உடற்பயிற்சியும் இல்லாமல் உடலை குண்டாக்கிவிடுகிறோம். மன அழுத்தம் இல்லாதவர்கள் இன்று யாரும் இல்லை.

சமூகரீதியாகவோ, வேலை ரீதியாகவோ, குடும்ப ரீதியாகவோ, பொரு ளாதார ரீதியாகவோ, உறவு ரீதியாகவோ.. ஏதாவது ஒரு விதத்தில் மன அழுத்தம் உருவாகிவிடுகிறது. மன அழுத்தத்தை போக்கும் வடிகாலாக பலரும் உணவை கருதுகிறார்கள். மனஅழுத்தம் ஏற்படும்போதெல்லாம் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது அவர்கள் இயல்பாகிவிடுகிறது.

சாப்பாட்டின் அளவில் அவர்களுக்கு திருப்தியே ஏற்படாது. இதனை கம்போர்ட் ஈட்டிங் என்கிறோம். அது என்னவோ தெரியவில்லை. நம்மில் பலர் உடலை அசைக்கவே தயங்குகிறார்கள். மாடிப்படிகளில் ஏறி நடந்துசெல்வதற்கு பதில் லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகளை பயன்படுத்துகிறார்கள்.

பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசக்கூட, நடந்து அவரைத் தேடிச் செல்லாமல் இருந்த இடத்திலே போனை பயன்படுத்துகிறார்கள். அன்றாட வீட்டு வேலைகளைக்கூட செய்யாமல் அதற்கான கருவிகளை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடுகிறார்கள். மனோவியாதி, மூச்சுக்குழாய் தொடர்புடைய நோய்களுக்கான மருந்துகளாலும், ஸ்டீராய்டு வகை மருந்துகளை  உட்கொண்டாலும் உடல் எடை அதிகரிப்பதுண்டு.

உடல் குண்டாகி அடிவயிறு, கை, தொடைப்பகுதி, பின்பகுதி போன்றவைகளில் கொழுப்பு அதிகம் படியும்போது அதை நம்மால் காணமுடியும். வெளியே காண முடியாத அளவுக்கு கொழுப்பு இதயம், சுவாசப்பகுதி, ஈரல் போன்ற உள் அவயங்களில் குஷன்போல் படியும். இதனால் உடல் இயக்கத்தை சீர்கெடுக்கும் மெட் டோபாலிக் பிரச்சினைகள் ஏற்படும்.

அதை தான் நாம் மெட்டோபாலிக் சிண்ட்ரோம் என்று கூறுகிறோம். இந்த சிண்ட்ரோம் ஏற்படும்போது ப்ரி பேற்றி ஆசிட் ரத்தத்தில் கலக்கும். அதனால் இன்சுலின் சமச்சீரின்மை ஏற்பட்டு, இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் தோன்றும். உடல் குண்டாவதால் ஏற்படும் நோய்கள் என்னென்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ஜீரணக்கோளாறு, ஈரல் வீக்கம், பித்தப்பை கல், தைராய்டு பிரச்சினை, நீரிழிவு, குறட்டை போன்றவை தோன்றக்கூடும்.

பெண்களுக்கு மார்பக புற்றுநோய், எண்டோமெட்ரியத்தில் புற்று தோன்றலாம். குழந்தையின்மை பிரச்சினை உருவாகும். உடல் குண்டானவர்களால் ஆழ்ந்து நிம்மதியாக தூங்க முடியாது. தூங்கும்   போது சுவாச தடை ஏற்பட்டு மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைவதால், திடீர் திடீ ரென்று விழிப்பார்கள். சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள்.

மறுநாள் அவர்களால் புத்துணர்ச்சியோடு உழைக்க முடியாது. வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதே தூங்குவார்கள். அன்றாட பணிகளை செய்ய முடியாமல் தடுமாறுவார்கள். இதில் ஆபத்தான கட்டம் என்னவென்றால், சிலர் தூங்கும்போது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனில் நெருக்கடி ஏற்படும்போது தூக்கத்திலே உயிர் பிரிந்து விடும். மூட்டு நோய்கள், பாதங்கள் தட்டையாதல், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற பல பாதிப்புகள், உடல் குண்டாவதால் ஏற்படுகின்றன.

ஒருவரது உடல் எந்த அளவுக்கு பருமனாக இருக்கிறது என்பதை கண்டறிய பி.எம்.ஐ. அளவீடு பயன்படுத்தப்படுகிறது. உயரத்திற்கு தக்கபடி உடல் எடை எவ்வளவு இருக்கவேண்டும் என்பது பி.எம்.ஐ. மூலம் தீர்மானிக்கப்படுகிறது. பி.எம்.ஐ. 25 வரை இருந்தால் சாதாரணமானதாகவும், 30 வரை பிரச்சினைக்குரியதாகவும் கணக்கிடப்படுகிறது.

அதற்கு மேல் இருந்தால் தீவிர சிகிச்சை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும். உடல் பருமனால் அவதிப்படு பவரின் பி.எம்.ஐயை பரிசோதித்த பின்பு, அவரை ஊட்டச்சத் தியல் நிபுணரும், மனோதத்துவ நிபுணரும் சந்திப்பார்கள். அவர்களது ஆலோசனைக்கு பிறகே அடுத்த கட்ட சிகிச்சை தீர்மானிக்கப்படும்.

அவருக்கு அறுவை சிகிச்சை தேவை என்று முடிவு செய்தால், நவீன லேப்ராஸ்கோபி சிகிச்சை சிறந்தது. இதனை டாக்டர்கள் நேரடியாகவோ, இயந்திர மனிதர்கள் மூலமோ செய்வார்கள். எடையை குறைப்பதற்காக அவரது ஜீரணக் குடலின் அளவை சுருக்குவதே பொதுவாக கையாளப்படும் சிகிச்சை. நமது ஜீரணக்குடல் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்டது.

அதன் மெல்லிய ஒரு பகுதி, இந்த அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, ஜீரணக்குடல் கொள்ளளவு வெகுவாக குறைக்கப்படும். அப்போது, அழகான உணவுவகைகளைப் பார்த்து நம்மை ருசிக்கத்தூண்டும் கிரிலின் என்ற சுரப்பியும் அகற்றப்பட்டுவிடும். அதனால் உணவின் மீதான ஈர்ப்பும், உண்ணும் உணவின் அளவும் குறையும்.

தேவைக்கு மட்டுமே உண்ணும் நிலை ஏற்படும். இந்த வகை ஆபரேஷனுக்குப் பிறகு உடல் எடை குறைவதோடு, மன அழுத்தம், குறட்டை, ஆஸ்துமா, உயர்ரத்த அழுத்தம், இதயநோய், நீரிழிவு போன்ற பல்வேறு நோய்கள் குறையும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பும் நீங்கும். பெண்களைப் பொறுத்தவரையில் குழந் தைப் பேறுக்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர உடற்பயிற்சி அவசியம். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சியால் மட்டும் எடையை குறைத்துவிட முடியாது. உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வருவதில் 70 சதவீத பங்கு உணவிற்குரியது. 30 சதவீத பங்கே உடற்பயிற்சிக்கு இருக்கிறது. அதனால் உணவின் அளவைக் குறைக்காமல் உடற்பயிற்சியால் மட்டுமே உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர முடியாது.

உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் உண்ண வேண்டிய உணவுகள்:-

இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் கலோரி குறைவு. அவைகளை சாப்பிடுவது நல்லது. தினமும் நீங்கள் சாப்பிடும் உணவில் 80 சதவீதம் வீட்டு உணவாக இருக்க வேண்டும். 20 சதவீதம் வெளி உணவாக இருக்கலாம். பேக்கரி உணவுகளில் கலோரி அதிகம். அதில் சேர்க்கப்படும் வனஸ்பதியில் இருக்கும் டிரான்ஸ்பாற்றி ஆசிட் கொழுப்பை அதிகரித்து உடலை குண்டாக்கும்.

- நார்ச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். காய்கறி, பழங்கள், தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பிஸ்கெட், மைதா, வெள்ளை அரிசி உணவுகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள்.

- ஒரு உணவை சாப்பிடும் முன்பு அது ருசியா என்று மட்டுமே பார்க்கிறோம். அது ஆரோக்கியமானதா என்று பார்க்க பழகிக்கொள்ளுங்கள். - மாலை நேரத்தில் இனிப்பு, காரத்திற்கு பதில் காய்கறி- பழ சாலட் சாப்பிடுங்கள். மோர் பருகுங்கள்.

- ஐஸ்கிரீம், கொழுப்புள்ள பால், கேக் வகைகளை தவிர்த்திடுங்கள்.

- முடிந்த அளவு வீட்டு வேலைகளை செய்யுங்கள். வாரத்தில் நான்கு நாட்களாவது 45 நிமிடங்கள் வேகமான நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதை கடைபிடித்தால் எடை குறைந்து-இடை மெலிந்து ஆரோக்கியமாக வாழலாம்!

கர்ப்ப காலத்தில் பாட்டி வைத்தியம்!

பாட்டி வைத்தியம்
* கர்ப்ப காலத்தில் சிலருக்கு கை, கால் வீக்கம் வருவது இயல்புதான். இப்படிபட்டவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு எடுத்து, சட்டியில் வறுத்து-வெடிக்கும்போது தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்தால், கால் வீக்கம் குறையும்.

* மூன்றாவது மாதம் தொடங்கி பிரசவ காலம் வரை வெந்தய கஞ்சி சாப்பிடுவது, சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

* 5 வது மாதத்தில் இருந்து ஒரு டம்ளர் அரிசி கொதி நீரில், சிறிதளவு வெண்ணெய் கலந்து மதியம் நேரத்தில் சாப்பிட தரலாம். கர்ப்பகாலம் முதல் பிரசவகாலம் வரையிலும் சின்னவெங்காயம், சீரகம் சேர்த்த முருங்கை கீரை சூப் வைத்து சாப்பிடலாம். இதனால் பிரசவம் சுலபமாகும்.

* பிரசவநாள் நெருங்கும் நேரத்தில் சிலருக்கு அடிக்கடி வயிறுவலி வரும். அப்போது வெற்றிலை, ஓமம், பூண்டு சேர்த்த கசாயம் வைத்து சாப்பிடலாம். சாதாரண வலி என்றால் நின்றுவிடும். அதே பிரசவ வலி என்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு என்று அர்த்தம்.

சுகப்பிரசவத்திற்கு துளசி சாப்பிடுங்க

துளசி
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிடுவது வலியின்றி பிரசவம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறியுள்ளது.

கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள், 7வது மாதத்தில் இருந்து கடைசி 3 மாதங்களில் கர்ப்பிணி தனது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். இந்த காலங்களில் அதிக திரவ உணவுகள், பழங்கள் நல்லது. கரு வளர இவை அதிக பயனளிக்கும்.

பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகளை உணவில் அதிகரிக்க வேண்டும். கர்ப்பிணிகள் துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக அருந்தலாம். அது பிரசவ காலத்தை எளிதாக்கும். அதேபோல் கர்ப்பிணிகள் அவ்வப்போது சில துளசி இலைகளை மென்று வர, வலியின்றி பிரசவம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக அருந்தலாம். அது பிரசவ காலத்தை எளிதாக்கும். அதேபோல் கர்ப்பிணிகள் அவ்வப்போது சில துளசி இலைகளை மென்று வர, வலியின்றி பிரசவம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

மணத்தக்காளி மருத்து குணங்கள்

மணத்தக்காளி
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன.

நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன. மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து.

மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும்.

அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும். நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது.

இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும். 

கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும்.

இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.

உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம். நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும். மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது.