காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைப்பது பல் துலக்குதலே. பல் துலக்குதல் வாயின் சுகாதாரத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல், பற்சிதைவையும், ஈறுகளில் உண்டாகும் நோய்களையும், வாய் நாற்றத்தையும் தவிர்க்கும்.
பல் துலக்குவதன் நோக்கம்:
பல் துலக்குவது வாயிலும், பற்களிலும் உள்ள அழுக்கை நீக்கத்தான். பல் ஈறுகளில் இருந்து நீக்கப்படாத உணவுத் துகளும், கிருமிக் கூட்டங்கலும் சேர்ந்த கலவையே இந்த அழுக்கு. பல் துலக்கி இரண்டு அல்லது மூன்று மணிகளுக்குள்ளேயே இந்த அழுக்கு படியத் துவங்கும். இவை பற்களுக்கு மட்டுமில்லாமல், பல் ஈறுகளுக்கும் பாதிப்பை உண்டாக்குவதோடு பல் இழப்பிற்கும் காரணமாகிறது. எனவே தினமும் இருமுறை பல் துலக்குதலும், உணவு உண்டவுடன் வாய் கொப்பளிப்பதும் இன்றியமையாத ஒன்று. இதற்கு தண்ணீரையோ, கொப்பளிக்கும் திரவத்தையோ பயன்படுத்தலாம்.
பல் துலக்கும் முறை:
பல் துலக்குவதற்கான நிலை, வாய், தாடையில் பற்கள் அமைந்துள்ளதை பொருத்து மாறுபடும்.
பெரியவர்கள்:
பல் துலக்கியின் குச்சுகள் 45 டிகிரி கோணத்தில் ஈறுகளின் மேல் சாய்த்துப் பிடித்து, ஒவ்வொரு முறையும் மூன்று பற்களின் மேல், முன்னும், பின்னும் நகர்த்தி சிறிது அதிர்வுடன் கூடிய சுழற்றும் முறையிலும் தேய்க்க வேண்டும். இம்முறையை கடைவாய் பல் துவங்கி முன் பற்கள் வரை மூன்று மூன்று பற்களாக முன்னேற வேண்டும். மேல் தாடையின், வலது, இடது, உள், வெளி பக்கங்களிலும் அதே போல், கீழ் தாடையிலும் இடது, வலது, உள், வெளி பக்கங்களிலும் தேய்க்க வேண்டும்.
இந்த சுழற்சியினை சுமார், 15 முதல் 20 முறைகள் ஒவ்வோர் இடத்திலும் தேய்க்க வேண்டும். முன் பற்களுக்கு மட்டும் பல் துலக்கியை செங்குத்தாக 45 டிகிரி கோணத்தில் பிடித்து மேலும், கீழும் நகர்த்தி, உள்ளும், வெளியும் தேய்த்து விட வேண்டும். கடைவாய் பகுதியில் மெல்லும் மற்றும் கடிக்கும் பகுதியில் பல் துலக்கியின் குச்சுகளை நன்றாக அழுத்திப் பிடித்து தேய்க்க வேண்டும். பற்களைத்தான் செம்மையாக தேய்த்து முடித்தாயிற்றே என்று, முடித்து விடாமல் மறவாமல் நமது நாக்கின் புற பகுதியில் பல் துலக்கியால் முன்னும், பின்னும் அசைத்து நகர்த்தி தேய்த்தால், வாய் துர்நாற்றம் வீசக் காரணமான கிருமிகளை அகற்றி விட முடியும்.
சிறியவர்:
சிறார்களை பல் முற்றும் ஈறுகளில், பல் துலக்கியின் குச்சுகளால் வட்ட வடிவில் சுழற்சி முறையில் தேய்க்க அறிவுறுத்த வேண்டும். பச்சிளம் பல் முளைக்காத பாலகர்களுக்கும், பக்குவமாக ஈறுகளை விரல்களால் தேய்த்து விடுவது மிகவும் சிறந்தது.
பிரஷ் முக்கியம்:
முருதுவான, கூர் முனை இல்லாத, வட்ட வழுவழுப்பான முனைகள் கொண்ட நைலான் குச்சுகளுடன் கூடிய, பல் துலக்கியால் பல் துலக்குவது நல்லது. கூர்முனை குச்சுகளை தவிர்ப்பது நல்லது. கடினமான, மற்றும் விரைப்பான குச்சுகை கொண்ட பல் துலக்கிகள் பல்லின் எனாமல் மற்றும் ஈறுகளை சேதபடுத்திவிடும்.