உடற்பயிற்சியைப் பொறுத்தவரையில், யாரும் சுயமாக செய்யக் கூடாது. உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைக்கும் பயிற்சிகளை முதலில் கற்ற பிறகுதான், தனியாகச் செய்ய வேண்டும். கார்டியோ பயிற்சிகளில் தொடங்கி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் வரை எந்த உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம்.
வார்ம் அப் பயிற்சிகள் தசைகளை நன்றாக இறுக்கி, உடலின் உள் வெப்பத்தை அதிகரித்து, உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றவாறு உடலினை மாற்றும். இந்தப் பயிற்சிகள் செய்யாமல், நேரடியாக உடற்பயிற்சி செய்தால், தசைகளில் வலி ஏற்படும். ரன் ஆன் ப்ளேஸ் பயிற்சி உடலுக்கு வார்ம் அப் பயிற்சியே. இதை மட்டும் தனியாகவும் செய்யலாம்.
ரன் ஆன் ப்ளேஸ் பயிற்சி என்பது வேறு ஒன்றும் இல்லை. நின்று கொண்டே ஜாக்கிங் செய்வது போன்றது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நிற்க வேண்டும். நின்ற இடத்திலேயே மெதுவாக ஜாக்கிங் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மிகவும் வேகமாகச் செய்ய வேண்டாம், மிதமான வேகத்தில் 5 நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.
பின்னர் படிப்படியாக நிமிடங்களின் அளவை அதிகரித்து கொள்ளலாம். வார்ம் அப் பயிற்சியாக செய்வதாக இருந்தால் 10 விநாடிகள் மட்டும் செய்தால் போதுமானது. பயிற்சியாக செய்வதாக இருந்தால் தினமும் 20 நிமிடங்கள் செய்யலாம். இந்த பயிற்சி உடல் முழுவதிற்கும் பலன் தரக்கூடியது.
பலன்கள்: உடல் முழுவதும் உள்ள தசைகள், உடற்பயிற்சிக்கு உறுதுணை புரிய, இந்தப் பயிற்சியைச் செய்வது அவசியம்.