Pages

Showing posts with label நடைப்பயிற்சி. Show all posts
Showing posts with label நடைப்பயிற்சி. Show all posts

Friday, October 7, 2016

நடந்து... நடந்து... உடல் நலம் காப்போம்!

உணவுப்பழக்கத்தில் எல்லோருக்கும் கவனம் எடுத்துக் கொள்கிறோம். அது போல உடற்பயிற்சியிலும் கவனம் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். நகரத்து மக்கள் மத்தியில் உடற்பயிற்சி பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீன, நெதர்லாண்ட் மற்றும் மேற்கத்திய நாடுகளில் அலுவலக வேலைக்கு செல்பவர்கள் பலர், வசதியான வாகனம் இருந்தும் நடந்து செல்வத்யோ அல்லது சைக்கிளில் செல்வதையோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நடைப்பயிற்சி என்பது உடற்பயிற்சிகளில் சிறந்தது தேவையான ஒரு பயிற்சியுமாக இருக்கிறது. இது எல்லா வயதினருக்கும் ஏற்ற பயிற்சியாகும். தினமும் நடை பயிற்சி செய்துவந்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. நுரையீரல் சுவாசம் புத்துணர்ச்சியாக்குகிறது. பிறரிடத்தில் மென்மையாக பழகும் குணத்தை வளர்க்கிறது. நடைபயிற்சி என்பது பொதுவாக தினமும் விரைவான எட்டுக்களை வைத்து 6 கி.மீ., வரை செல்வதாகவும். நான்கு மணி நேரம் நீந்துவதும் நான்கு மணி நேரம் டென்னிஸ் விளையாடுவதும் இதற்கு சமமானதே.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், லிப்டை பயன்படுத்தாமல் ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி இறங்குவதாலும், வீட்டைச் சுத்தப்படுத்துதல், விளையாட்டு மைதானத்தில் சிறு குழந்தைகளுடன் விளையாடுவதாலும் நடை பயிற்சியின் தேவையை சற்று சமன் செய்துக்கொள்ளலாம். நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கச் செய்கிறது. நடைப்பயிற்சியின் போது உடலில் உள்ள எல்லா தசைத் தொகுதிகளும் இயங்குவதால், உடலுக்கு அதிகமான ஆக்சிஜன் கிடைகிறது. இதனால், மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். ரத்த சுழற்சி உடலின் எல்லா பாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சரியாக்குகிறது.

நாள்தோறும் நடைப்பயிற்சி செய்வதால், உடலில் தேவைக்கதிகமான எடை குறைகிறது. இப்பயிற்சி உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கத்தை சீராக்குகிறது, நாள்தோறும் நடைப்பயிற்சியை பழக்கப்படுத்திக் கொண்டவர்கள், அன்றாடம் செய்யும் வேலைகளை சோர்வின்றி செய்ய வழிவகுக்கிறது. குறிப்பாக முதுமையடந்தவர்கள் கூட ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளை செய்து கொள்ளும் திறமையை வளர்த்துவிடுகிறது.

அலுவலகம், வேலை, உறக்கம், மீண்டும் அலுவலகம், வேலை உறக்கம் என்று கரம் போல தினசரி வாழ்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு, உடற்பயிற்சி என்பது மறந்தே போய்விட்டது. சில கனமான பொருட்களை இடம் மாற்ற வேண்டுமெனில் பிறர் உதவியை நாடுபவர்களாகி விடுகிறார்கள். எனவே, நடைப்பயிற்சியை மேற்கொள்வோம்! ஆரோக்கியம் காப்போம்.

Monday, February 8, 2016

உடல் எடையை குறைக்க தூண்டுகோலாகும் நடைப்பயிற்சி


உடல் எடையை குறைக்க தூண்டுகோலாகும் நடைப்பயிற்சி

உடல் எடை குறைக்க உடற்பயிற்சி மிகவும் முக்கியம். ஒவ்வொருவரின் பி.எம்.ஐ அளவைப் பொறுத்தும் அவர்களது உடல்நிலையைப் பொருத்தும் உடற்பயிற்சிகள் மாறும். அனைவருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் வாக்கிங் செல்ல ஆரம்பிக்கவேண்டும். 


ஆரம்பத்திலேயே அதிக தூரம் நடக்கக் கூடாது. இரண்டாவது வாரம்,  நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் படிப்படியாக அதிகரித்து, ஆறு மாதத்திற்குள், ஒரு மணி நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி செய்தால் ஆரம்பத்தில் எடை குறையும். 



ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, எடை குறையாது. ஆனால், எடை கட்டுக்குள் இருக்க, நடைப்பயிற்சி செய்யும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். டிரெட்மில்லில் நடப்பவர்கள், அந்தக் கருவியில்  உள்ள ஒவ்வோர் இலக்கையும் படிப்படியாக முடிக்க முயற்சிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி தூண்டுகோல் மட்டுமே. 



நடைப்பயிற்சியுடன் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால் மட்டுமே, உடல் எடை நன்றாகக் குறையும். கார்டியோ பயிற்சிகள் (நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங் ) 60 சதவிகிதமும் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் (புஷ் அப், ஸ்குவாட், பளு தூக்கும் பயிற்சிகள்) 40 சதவிகிதமும் செய்தால் உடல் எடை குறையும். 



அதிக அளவு உடற்பயிற்சி செய்தால், சீக்கிரமே உடல் எடை குறையும். ஆனால், சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்கும் முறை உடலுக்கு ஏற்றது அல்ல. வாழ்நாள் முழுவதும் அதிக அளவு உடற்பயிற்சி செய்ய முடியாது. எனவே, தினமும் 300 -500 கலோரிகளை எரிக்கும் அளவு உடற்பயிற்சி செய்தால் போதுமானது. வெறும் செருப்பு போட்டுக்கொண்டு நடைப்பயிற்சி செய்யக் கூடாது. 



டிராக் ஸூட் , ஷூ அணிந்துதான் நடைப்பயிற்சி, ஜாகிங் செல்ல வேண்டும். எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். எனினும் காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது உற்சாகம் தரும். உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்பின் என்னும் அமிலம் சுரக்கும். இது மகிழ்வான உணர்வைத் தரும். எனவே, அன்றைய தினம் வேலைகளைச் சுறுசுறுப்பாக செய்ய முடியும். ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொண்டால் போதுமானது. 



குடும்பத்தினருடன் ஒன்றாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது ஊக்கம் அளிக்கும். ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள், ஆர்வக்கோளாறாக எல்லா கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது. முதல் 10 நாட்கள் வெறும் நடைப்பயிற்சி மட்டுமே செய்ய வேண்டும். உடற்பயிற்சியாளர் அனுமதியுடன் மட்டுமே, பளு தூக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். 



வீட்டில் எடை பார்க்கும் இயந்திரம் ஒன்று வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் காலை வெறும் வயிற்றில் எடை பார்த்துக் குறித்துக்கொள்ளுங்கள். ஒரு கிலோ அல்லது அதற்கு மேல் ஒரே நாளில் அதிகரித்து இருந்தால், அன்றைய தினம் உணவில் சிக்கனத்தையும் உடற்பயிற்சியில் கூடுதல் அக்கறையும் எடுத்துக்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி முடிந்த உடனே காபி, டீ குடிக்கக் கூடாது. 



20 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு தண்ணீர் அருந்தலாம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்த பின்னர், நன்றாகக் குளித்த பின்னர், உணவு அருந்தலாம். சாப்பிட்ட உடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துத்தான் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது, திடீர் தாகம் எடுத்தால் 20-30 மி.லி அளவுக்கு மட்டும் தண்ணீர் குடித்தால் போதுமானது. 



உடற்பயிற்சி செய்யும்போது, அதிக அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது.  இயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை குறைவதோடு, நீண்ட ஆரோக்கியமான வாழ்வும் வசமாகும்.

Wednesday, February 11, 2015

நடைப்பயிற்சிக்கு முன்பும் – பின்பும் செய்யக்கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி


 நடைப்பயிற்சிக்கு முன்பும் – பின்பும் செய்யக்கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி
சீராக உடல் இயங்க, உடற்பயிற்சி அவசியம். ஆனால், சமயங்களில் உடற்பயிற்சியே சில சிரமங்களைத் தரும் அபாயமும் இருக்கிறது. அதனால், உடற்பயிற்சியில் ஈடுபடும் முன்னரும், பின்னரும் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியம். 

‘உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வார்ம் அப் (Warm Up), ஸ்ட்ரெச்சிங் (Stretching) பயிற்சிகளையும்… உடற்பயிற்சி செய்த பின்பு கூல் டவுன் (Cool Down) , ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். இல்லை என்றால், கை – கால் தசைகளில், மூட்டுகளில்… இறுக்கம், வலி, சோர்வு போன்ற தொந்தரவுகள் உண்டாகும்.

ஜிம்முக்குச் சென்றால்தான் இதுபோன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டும், சாதாரணமான நடைப்பயிற்சிக்கு தேவை இல்லை எனச் சிலர்  நினைப்பது தவறு. நடைப்பயிற்சியும் ஒருவிதமான உடற்பயிற்சிதான். எனவே, எல்லோருக்கும் இந்தப் பயிற்சிகள் அவசியம்! ”வார்ம் அப் என்பது நடைப் பயிற்சிக்காக உடலை ஆயத்தப்படுத்தும் ஒரு செயல்.

முதல் ஐந்து நிமிடங்கள் மெதுவாக நடக்க வேண்டும். பின்னர் 10 நிமிடங்களுக்கு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதற்குப் பின்னர் சுறுசுறுப்பான நடைப் பயிற்சியைத் தொடங்கலாம். ஆங்கிலத்தில் இதை ‘பிரிஸ்க் வாக்கிங்’ (Brisk Walking)   என்பார்கள். 30 முதல் 40 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடந்த பின்னர், படிப்படியாக வேகத்தைக் குறைத்து 5 நிமிடங்களுக்கு மெதுவாக நடக்க வேண்டும்.

இதை ‘கூல் டவுன்’ என்பர். பின்னர் மீண்டும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டும். வார்ம் அப் என்பது எப்படி இதயத் துடிப்பை, ரத்த ஓட்டத்தை, உடலின் வெப்பநிலையை அதிகப்படுத்துகிறதோ, அதேபோல கூல் டவுன் என்பது அவற்றைக் குறைத்து நார்மல் நிலைக்குக் கொண்டு வரும்.

அதிகாலை நேரத்தில்தான் பலரும் நடைப்பயிற்சி செய்கின்றனர். அந்த நேரத்தில் சுற்றுச் சூழலும் நம் உடலும்  குளிர்ச்சியாக இருக்கும். அப்போது நடைப்பயிற்சி செய்யும்போது காயங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்து தசைகளின் வெப்பநிலையை அதிகரித்துக்கொண்டால், தசைகளுக்கு ஒருவித நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

இதனால் தசைகள் நன்றாகச் சுருங்கி விரியும். மூட்டுகளை எளிதாக நீட்டி மடக்க முடியும். சாதாரணமாக உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யும்போது நம்முடைய தசைகளில் லாக்டிக் அமிலம் சுரக்கும். இந்த அமிலம் தசைகளில் படிவதால், முழங்காலில் வலி, வீக்கம், கால் வலி, சோர்வு ஏற்படும்.

ஆனால், வார்ம் அப் செய்த பிறகு நடைப்பயிற்சி செய்தால் அமிலத்தின் சுரப்பு மிகக் குறைவாகவே இருக்கும். அப்படிக் குறைவாகச் சுரப்பதும்கூட நடைப்பயிற்சிக்குப் பின்னர் செய்யப்படும் கூல் டவுன் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளால் சுத்தமாகத் தடைபட்டுவிடும். எனவே, வலி வருவதற்கு வாய்ப்பே இல்லை.

நடைப்பயிற்சி செய்வதற்கு முன்பும் – பின்பும் செய்யக் கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி முறைகள் ஒரேவிதமானவைதான். ஆனால், நடைப் பயிற்சிக்கு முன் ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 10 நொடிகள் செய்ய வேண்டும். நடைப் பயிற்சிக்குப் பின்னர் ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 30 நொடிகள் செய்ய வேண்டும், அவ்வளவுதான்.

ஒவ்வொரு பயிற்சியையும் மூன்று முறை செய்வது அவசியம். பயிற்சியின்போது முதுகு வளையாமல் இருக்க வேண்டும்.