Pages

Showing posts with label Warm Up. Show all posts
Showing posts with label Warm Up. Show all posts

Wednesday, February 11, 2015

நடைப்பயிற்சிக்கு முன்பும் – பின்பும் செய்யக்கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி


 நடைப்பயிற்சிக்கு முன்பும் – பின்பும் செய்யக்கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி
சீராக உடல் இயங்க, உடற்பயிற்சி அவசியம். ஆனால், சமயங்களில் உடற்பயிற்சியே சில சிரமங்களைத் தரும் அபாயமும் இருக்கிறது. அதனால், உடற்பயிற்சியில் ஈடுபடும் முன்னரும், பின்னரும் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியம். 

‘உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வார்ம் அப் (Warm Up), ஸ்ட்ரெச்சிங் (Stretching) பயிற்சிகளையும்… உடற்பயிற்சி செய்த பின்பு கூல் டவுன் (Cool Down) , ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். இல்லை என்றால், கை – கால் தசைகளில், மூட்டுகளில்… இறுக்கம், வலி, சோர்வு போன்ற தொந்தரவுகள் உண்டாகும்.

ஜிம்முக்குச் சென்றால்தான் இதுபோன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டும், சாதாரணமான நடைப்பயிற்சிக்கு தேவை இல்லை எனச் சிலர்  நினைப்பது தவறு. நடைப்பயிற்சியும் ஒருவிதமான உடற்பயிற்சிதான். எனவே, எல்லோருக்கும் இந்தப் பயிற்சிகள் அவசியம்! ”வார்ம் அப் என்பது நடைப் பயிற்சிக்காக உடலை ஆயத்தப்படுத்தும் ஒரு செயல்.

முதல் ஐந்து நிமிடங்கள் மெதுவாக நடக்க வேண்டும். பின்னர் 10 நிமிடங்களுக்கு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதற்குப் பின்னர் சுறுசுறுப்பான நடைப் பயிற்சியைத் தொடங்கலாம். ஆங்கிலத்தில் இதை ‘பிரிஸ்க் வாக்கிங்’ (Brisk Walking)   என்பார்கள். 30 முதல் 40 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடந்த பின்னர், படிப்படியாக வேகத்தைக் குறைத்து 5 நிமிடங்களுக்கு மெதுவாக நடக்க வேண்டும்.

இதை ‘கூல் டவுன்’ என்பர். பின்னர் மீண்டும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டும். வார்ம் அப் என்பது எப்படி இதயத் துடிப்பை, ரத்த ஓட்டத்தை, உடலின் வெப்பநிலையை அதிகப்படுத்துகிறதோ, அதேபோல கூல் டவுன் என்பது அவற்றைக் குறைத்து நார்மல் நிலைக்குக் கொண்டு வரும்.

அதிகாலை நேரத்தில்தான் பலரும் நடைப்பயிற்சி செய்கின்றனர். அந்த நேரத்தில் சுற்றுச் சூழலும் நம் உடலும்  குளிர்ச்சியாக இருக்கும். அப்போது நடைப்பயிற்சி செய்யும்போது காயங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்து தசைகளின் வெப்பநிலையை அதிகரித்துக்கொண்டால், தசைகளுக்கு ஒருவித நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

இதனால் தசைகள் நன்றாகச் சுருங்கி விரியும். மூட்டுகளை எளிதாக நீட்டி மடக்க முடியும். சாதாரணமாக உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யும்போது நம்முடைய தசைகளில் லாக்டிக் அமிலம் சுரக்கும். இந்த அமிலம் தசைகளில் படிவதால், முழங்காலில் வலி, வீக்கம், கால் வலி, சோர்வு ஏற்படும்.

ஆனால், வார்ம் அப் செய்த பிறகு நடைப்பயிற்சி செய்தால் அமிலத்தின் சுரப்பு மிகக் குறைவாகவே இருக்கும். அப்படிக் குறைவாகச் சுரப்பதும்கூட நடைப்பயிற்சிக்குப் பின்னர் செய்யப்படும் கூல் டவுன் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளால் சுத்தமாகத் தடைபட்டுவிடும். எனவே, வலி வருவதற்கு வாய்ப்பே இல்லை.

நடைப்பயிற்சி செய்வதற்கு முன்பும் – பின்பும் செய்யக் கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி முறைகள் ஒரேவிதமானவைதான். ஆனால், நடைப் பயிற்சிக்கு முன் ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 10 நொடிகள் செய்ய வேண்டும். நடைப் பயிற்சிக்குப் பின்னர் ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 30 நொடிகள் செய்ய வேண்டும், அவ்வளவுதான்.

ஒவ்வொரு பயிற்சியையும் மூன்று முறை செய்வது அவசியம். பயிற்சியின்போது முதுகு வளையாமல் இருக்க வேண்டும்.