Pages

Saturday, September 6, 2014

வேலை பளுவால் ஏற்படும் மனஅழுத்தம்



இன்றைய காலத்தில் அலுவலகத்தில் உள்ள அதிகப்படியான வேலையால், தற்போது பெரும்பாலானோர் அதிக களைப்பால் மட்டுமின்றி, அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அதுமட்டுமின்றி, வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், எந்த ஒரு செயலையும் நிம்மதியாக செய்ய முடியாத நிலையில் உள்ளோம். சரி. இப்போது மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான எளிய வழிமுறைகளை பார்க்காலம்.  

• வேலைப்பளு அதிகமாக இருந்தால், ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 5 நிமிட இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு திறம்பட வேலை செய்தாலும் கூட, கவனம் சிதறி மனம் அலை பாய்வது நடக்கத் தான் செய்யும்.

ஓய்வெடுக்க வேண்டுமானால் நீட்சி ஒரு எளிய வழியாகும். அதற்கு உடலை புரிந்து கொண்டு மூச்சு பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். உடலை அப்படி இப்படி அசைவு கொடுத்தால், தசை இறுக்கம் நீங்கும். மேலும் இது உங்கள் வேலையில் உங்களை கவனம் செலுத்த வைக்கும்.

• பச்சை பசுமையான இயற்கை சார்ந்த இடங்கள், கடல் சார்ந்த இடங்கள் அல்லது மலை சார்ந்த இடங்கள் போன்றவற்றில் பொழுதை கழிப்பதில் கிடைக்கும் அமைதி வேறு எங்கும் கிடைக்காது. இவ்வாறு இயற்கைக்கு அருகில் உங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டால், தானாக அமைதி வந்து சேரும். 

• நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, உடன் வேலை செய்பவர்களுடன் வேடிக்கையாக பேசுவது, நகைச்சுவை புத்தகம் படிப்பது, குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிடுவது போன்றவைகள் உங்களுக்கு மன நிம்மதியை அளித்து அமைதியை ஏற்படுத்தும்.

• மனம் அமைதி பெறுவதற்கு, உங்களுக்கு பிடித்த ஸ்பாவிற்கு சென்று பெடிக்யூர் அல்லது பேஷியல் செய்து சருமத்திற்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்துங்கள்.

• உண்மையிலேயே அமைதி பெற வேண்டுமானால், ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்தால், நிச்சயம் தியானத்திற்கான பலனை காணலாம். முக்கியமாக அது மன அழுத்தத்தை நீக்கும்.

• நேர்மறையான சிந்தனைகள் உங்கள் மனநிலையை நல்ல விதமாக ஊக்கமளிக்கும். அதனால் எதிர்மறையான சிந்தனைக்கு செல்லாமல், நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்பத் தொடங்குங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்தையும் சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கிறது என்று நம்புங்கள்.  

• வீட்டில் ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கே அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து அமைதியை பெறுங்கள். கண்டிப்பாக ஓய்வு எடுக்கும் நேரம் கைபேசியை எல்லாம் அணைத்துவிடுங்கள்.

Wednesday, September 3, 2014

ஆரோக்கியமாக வாழ அளவாக சாப்பிடுங்கள்!


வயிறு நிறைய சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல என்பதை நமது முன்னோர்கள் அன்றே மிகத் தெளிவாக சொல்லி வைத்திருக்கின்றார்கள். மூன்றில் ஒரு பங்கு தண்ணீர், மூன்றில் ஒரு பங்கு வெற்றிடம் என்ற அடிப்படையில் தான் நாம் வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும். இப்பழக்கத்தை தொடந்து கடைப்பிடித்து வந்தாலே போதும். நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

இதனை கடைப்பிடிக்காத பட்சத்தில்தான் நோய்கள் எட்டிப் பார்க்கின்றன. அந்த வகையில் தவறான வகையில் தவறான உணவு பழக்க வழக்கத்தால் வருகின்ற பல நோய்களில், இருதய நோய் முக்கியமான இடத்தை வகிக்கிறது. பெரும்பாலும் இருதய நோய் கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளால் தான் வருகிறது. அதற்காக கொழுப்பு தன்மையுள்ள உணவுகளை தவிர்த்து விடுவது பொருத்தமான தீர்வாக இருக்காது. அளவான, ஆரோக்கியமான முறையிலான உணவே, இதற்கு சரியான தீர்வாகும். உதாரணமாக கோழி இறைச்சியை சமைக்கும் போது, தோல் உட்பட கொழுப்புகளை முற்றிலும் அகற்றி விட வேண்டும்.

ஆட்டிறைச்சி சமைக்கும் போது, எண்ணெய் திரளும் கொழுப்புகளை அடியோடு அகற்றுங்கள். பெரும்பாலும் ஆட்டிறைச்சியை நன்றாக அவித்துவிட்டு சமைப்பதால் அதில் இருக்கும் அளவுக்கதிகமான கொழுப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தடவை பொரியலுக்காக பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அளவுக்கு மீறி பட்டர், மாஜரின் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வெண்ணெய் மற்றும் கேக் போன்ற இனிப்புகளை வாங்கும் போதும், தயாரிக்கும் போதும் முடிந்தளவுக்கு கொழுப்பு தன்மையுள்ள சேர்மானங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.

நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பச்சை மரக்கறி வகைகள், பழ வகைகள், கிழங்கு வகைகள் பருப்பு வகைகளில் அதிகமாக காணப்படுகிறது. சமைப்பதற்காக தேங்காய் எண்ணெய் உட்பட வேறு எந்த எண்ணெயை பயன்படுத்தினாலும், மிகவும் குறைவான அளவிலேயே பயன்படுத்த வேண்டும். எண்ணெய் அதிகமாக சேர்த்தால் தான் சாப்பாடு சுவையாக இருக்கும் என்பதெல்லாம் இல்லை.

சாப்பிட்ட பின்னர் நொறுக்குத் தீனி சாப்பிடுவதை முடிந்தவரைக்கும் தவிர்க்க வேண்டும். அதனால் உடற்பருமன் உங்களை அறியாமலேயே அதிகரிக்கும். வாரத்திற்கு இரண்டு நாட்களாவது நன்றாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினசரி உணவு பழக்க வழக்கத்தை இவ்வாறு மாற்றியமைத்துக் கொண்டாலே, எந்த வகையிலும் இருதய நோய் உட்பட எந்தவொரு நோயும் நெருங்காது.

Saturday, August 16, 2014

மஞ்சள் பூசும் பழக்கம் உண்டா?

நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான், இந்து கலாசாரத்தில் முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரும் கண்டு கொள்வதாய் இல்லை. மஞ்சள் பூசிய முகத்திற்கு முன்பெல்லாம் அதிக மவுசு உண்டு. இப்போது கிராமப் பெண்கள் தான் மஞ்சள் பூசுகின்றனர்; அதுவும் ஒரு சிலரே.

இந்திய கலாசாரத்தில் மஞ்சளின் முக்கியத்துவம்: இந்து கலாசாரத்தில், சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுவது போல் மற்றவர்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சள் கலந்து தயாரிக்கும் பழக்கம் உலக நாடுகளில் காணப்படுகிறது. மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே தான், போட்டிகள், தேர்வுகள், நேரடித் தேர்வுகளைச் சந்திக்கும் நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது என்று சொல்லப்படுகிறது.

ஆனால், “ஆண்கள் மஞ்சள் பயன்படுத்துவதில்லை. ஏன்? ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவசியமில்லை’ என்று, ஜகதீச அய்யர் என்பவர், இந்தியர்களின் கலாசாரம் குறித்த தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில், பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது.

பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கிறது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி, பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும் “தாலிக் கயிறில்’ பூசப்படுகிறது.

சமையலில் மஞ்சளின் பயன்பாடு:

இந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத, இந்திய சமையல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இது இயற்கையான நிறமியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தென்பகுதிகளில், சாம்பார், முட்டைகோசு கறி போன்றவற்றை, மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதேபோல், வடஇந்தியர்கள் கொழுக்கட்டையில் மஞ்சளை பயன்படுத்துகின்றனர். இது ஊறுகாயை பதப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது.

அழகு சாதனமாக பயன்படும் மஞ்சள்:

வெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர். இது முகத் தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்’சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது. இன்னும் சில வீடுகளில் எறும்புகள், பூச்சிகள், கரையான்கள் போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளின் மருத்துவ குணம்:

* வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.

* உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.

* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.

* உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.

* மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.

* மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.

முகத்தில் முடிகளை நீக்க வேண்டுமா?

சில பெண்களுக்கு முகத்தில் முடிகள் காணப்படும். இவை சிலருக்கு அடர்த்தியாக தெரியும் வகையிலும், சிலருக்கு மெல்லிய இழைகளாகவும் இருக்கும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்த முடிகளின் தன்மையும் மாறுபட்டு காணப்படும்.

முகத்தில் முடிகள் தோன்ற காரணம்:


பெண்களுக்கு முகத்தில் முடிகள் தோன்ற முக்கிய காரணமாக அமைவது ஹார்மோன் சமநிலையின்மை பிரச்னை. பெண்களின் உடலில், பெண்களுக்கான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்களுக்கான ஆண்ட்ரோஜன் ஆகிய இரண்டு ஹார்மோன்களுமே இருக்கும். வயது அதிகரிக்கும் போது, இந்த இரண்டு வகை ஹார்மோன்களின் அளவிலும் மாறுபாடு ஏற்பட்டு, ஹார்மோன் சமநிலையின்மை தோன்றுகிறது. இதனால், சில நேரங்களில், ஆண்களுக்கான ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகளவில் சுரப்பதாலும், சில பெண்களுக்கு முகத்தில் அடர்த்தியான முடிகள் தோன்றுவதுண்டு. சில பெண்களுக்கு பரம்பரை ரீதியாகவும், முகத்தில் அடர்த்தியான முடிகள் உருவாவது உண்டு. இதற்கு சிறந்த தோல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சில மருந்துகளின் பக்கவிளைவுகளாலும், முகத்தில் முடிகள் தோன்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.

முகத்தில் தோன்றும் முடிகளை நீக்க: 
கருவி கொண்டு நீக்குதல்: 

 உருவாகும் முடிகளை, “ட்வீசர்’ என்னும் கருவி கொண்டு நீக்கும் முறையில், மிக விரைவாகவும், குறைவான விலையிலும் நீக்கலாம். போதிய வெளிச்சத்தில், முகத்தின் தாடை மற்றும் கன்னப்பகுதிகளில் காணப்படும் முடிகளை, “ட்வீசர்’ மூலம் எடுத்து விடலாம். அதன் பின், அந்த பகுதிகளில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் திரவத்தால் சுத்தப்படுத்த வேண்டும். ஆனால், இத்தகைய முறையால், அப்பகுதிகளில் எரிச்சல் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

ஹேர் ரிமூவிங் கிரீம்: 

ஏதேனும் பார்ட்டி அல்லது வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய அவசர நேரத்தில், மிக விரைவாக முடிகளை நீக்க, ஹேர் ரிமூவிங் கிரீம்கள் பயன்படுகின்றன. இந்த கிரீம்கள், கைகள், கால்கள் மற்றும் அக்குள் ஆகிய பகுதிகளில் உள்ள முடிகளை நீக்குவதில் சிறப்பான முறையில் செயல்படுகின்றன. இத்தகைய கிரீம்களை பயன்படுத்துவதற்கு முன், அவற்றால் அலர்ஜி ஏதேனும் ஏற்படுமா என்பதை சோதனை செய்து கொள்ள வேண்டும்.

வாக்சிங்:

 தேவையற்ற முடிகளை நீக்குவதற்காக பயன்படுத்தும் மிகப் பிரபலமான முறை வாக்சிங். ஏனென்றால், இதற்கு மிக குறைவாக செலவாவதுடன், மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு பலன் அளிக்கிறது. வாக்சிங் செய்து முடித்த பின், செய்யப்பட்ட பகுதிகளில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் திரவம் பயன்படுத்தி சுத்தப்படுத்துவதுடன், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வெதுவெதுப்பான நீரால், சருமத்தின் துளைகள் திறந்திருப்பதால், தொற்று ஏற்பட வழிவகுக்கும்.

ப்ளீச்சிங்: 

முகத்தில் முடிகள் தோன்றும் பிரச்னையை சமாளிக்க ப்ளீச்சிங் செய்து கொள்ளலாம். ப்ளீச்சிங் செய்வதால், முகத்தில் காணப்படும் முடிகள் வெளுத்து, அவை எளிதில் மற்றவர்கள் பார்வைக்கு தெரியாது. ப்ளீச்சிங் சருமத்தை வறண்டு போக வைப்பதால், நல்ல மாய்ச்சரைசர் கிரீமை அப்ளை செய்ய வேண்டும்.

மருத்துவ முறைகள்:

எலக்ட்ரோலிசிஸ்: 

இந்த முறையில், ஊசியை தோலில் செலுத்தி, குறைந்த அளவிலான மின்சாரத்தை பாய்ச்சி, அதன் மூலம், முடிகளின் வேர் முடிச்சுகள் அழிக்கப்படுகிறது. ஆனால், இச்சிகிச்சை சிறியளவிலேயே பலன் தருவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

லேசர் சிகிச்சை: 

லேசர் முறையில், முகத்தில் தோன்றும் முடிகளை வலியின்றி நீக்கலாம். இதன் பலன் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். ஒரு தடவை, நூற்றுக்கும் மேற்பட்ட முடிகள் நீக்கப்படும். இச்சிகிச்சைக்கான செலவு அதிகம். இச்சிகிச்சையால் சில விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது


ஸ்லிம்மாக இருக்க விரும்புபவரா நீங்கள்?

கல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் என அனைவருமே ஒல்லியாக இருக்கவே விரும்புகின்றனர்.

ஒல்லியாக இருப்பது தான் அழகு என்று நினைப்பது தான் இதற்கு காரணம். பல பெண்கள் சிம்ரன் போல ஒல்லியாக இருக்க வேண்டும்; சினேகா போல இடுப்பு வேண்டும் என்று தங்கள் எடையை குறைக்க விரும்புகின்றனர். விளைவு, “நான் டயட்டில் இருக்கேன்’ அப்படின்னு பெருமையா சொல்லிட்டு, அவங்க இஷ்டத்துக்கு ஏதேதோ சாப்பிடறாங்க; சில பேர் சாப்பிடாம பட்டினி கிடக்குறாங்க. சாப்பிடாமல் இருந்தால் ஸ்லிம்மாகி விடலாம் என்று யார் சொன்னது? உண்மையில், முறைப்படி சாப்பிட்டால் தான் ஸ்லிம்மாக முடியும். அளவாக சத்தான உணவை சாப்பிட் டால், என்றைக்கும் மாறாத இளமையோடும், அழகோடும் இருக்கலாம். அவரவர் உடம்புக்கு எந்தெந்த உணவு வகைகள் ஒத்துக் கொள்கிறதோ, அதைச் சாப்பிட்டு வந்தாலே போதும். அதை விட்டுவிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், பீரியட்ஸ் ப்ராப்ளம், ரத்தசோகை, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் தான் வரும். எனவே, ஒல்லியாகப் போறேன் அப்படின்னு உங்க இஷ்டத்துக்கு உணவை குறைக்காதீங்க; உங்கள் வயதுக்கேற்ற, ஆரோக்கியமான, சத்தான உணவை சாப்பிடுங்கள். அவரவர் உயரத்துக்கு தகுந்த எடையுடன் இருப்பது தான் அழகு. அப்படி நீங்க ஸிலிம்மாக விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியவை:

மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்:


உங்கள் உடல் அமைப்பு, உணவுப் பழக்க வழக்கங்கள், நாள் ஒன்றுக்கு செலவாகும் சக்தி போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை அளிப்பார். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற் கேற்ப டயட்டில் இருங்கள்.

உடற்பயிற்சி செய்யுங்கள்:

எடையைக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஜிம்,யோகா, நீச்சல், டான்ஸ், வாக்கிங் ஆகியவையும் உடற்பயிற்சி தான். இதுபோன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதற்காக, அதி தீவிரமாக பயிற்சியில் ஈடுபடாதீர்கள். அது ஆபத்தில் கொண்டு போய் விடும். அளவான பயிற்சி, அளவான சாப்பாடு போன்றவை தான் நல்ல பயனை தரும். டயட்டீஷியன், பிட்னெஸ் மாஸ்டர் ஆகியோரை ஆலோசித்து செயல்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உணவுமுறையில் கவனம் செலுத்துங்கள்:


ஸிலிம்மாக மாற வேண்டுமென்றால், நிச்சயமாக நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்கள் ஆகியவற்றை தவிருங்கள். அவை சுவையுள்ளதாக இருப்பினும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி குண்டாக இருக் கோமே என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு, உரிய நபர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, உங்கள் விருப்பப்படி ஸிலிம்மாக மாறி லைப்பை என்ஜாய் செய்யுங்கள்.

துளசி இலையின் மருத்துவ குணங்கள்

எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

Thursday, August 14, 2014

குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும்.


பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.

என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் "கொஞ்சமாக கொடுங்கள்" என்பார்கள், சிலர் "எல்லாமே கொடுக்கலாம்" என்பார்கள். 'கொஞ்சமாக' என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

குழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.

குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.

பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.

திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.

குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.

வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.

குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.

பலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.

முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.

குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்:

வாழைப்பழம் - ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.

ஆப்பிள் - ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.

அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.

அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.

பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.

சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.

வேக வைத்து மசித்த காய்கறிகள்:

பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.

முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.

இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.

ஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.

எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.

ஒவ்வாமை:

குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.

குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.

உணவு சாப்பிட மறுத்தால்:

சில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.

சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.

நன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.

குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும்.