Pages

Saturday, May 10, 2014

உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையுமா?


உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும்.ஆனால் தொப்பை குறையுமா? பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் நன்றாக பசியெடுக்கும்,அதனால் அதிகம் சாப்பிடுவார்கள். எனவே எடை  குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல.

உடற்பயிற்சி ஜீரண மண்டலத்தை தூண்டி விடுகிறது.இதனால் நன்கு பசித்தால் ஆரோக்கியம் கூடுவதாகவே பொருள்.சந்தேகமில்லாமல் உடற்பயிற்சி நல்ல விளைவுகளை  தருகிறது.அரைமணி நேர உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் நல்லதுதான்.

தொப்பை இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன? உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா? வாக்கிங்,உடற்பயிற்சி இதையெல்லாம் பலர் கடனுக்கு செய்கிறார்கள். இன்று மருத்துவர் சொன்னார் என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள்.

வாயைக்கட்டினால் வயிற்றைக் கட்டலாம் என்று சொல்வார்கள். பெரும்பாலானவர்களுக்கு இது முடியாமல் போய்விடுகிறது. உணவை உள்ளே தள்ளுவதில் விழிப்புணர்வு இல்லை என்பதே சரி.நாக்கை அடக்கினால் மட்டுமே தொப்பையையும்,பருமனையும் கட்டுப்படுத்த முடியும்.

உடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும் போதுமான அளவு சேர்ந்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும். இன்றைய குழந்தைகளும் அதிக பருமனாகி வருகிறார்கள்.அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம்.

உடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.மிக அவசியமானதும் கூட! ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல! உணவு முறையில் மாற்றம் கொண்டுவருவதே ஒரே வழி.

Friday, May 9, 2014

ஓட்ஸ் ரவா இட்லி

 ஓட்ஸ் ரவா இட்லி
தேவையான பொருட்கள்.....

தயிர் - அரை கப்
ஓட்ஸ் - 1 கப்
ரவை - அரை கப்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க....

எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 தே.கரண்டி
ப. மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு

செய்முறை.....


• முதலில் ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு 5 நிமிடம் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

• ரவையை வெறும் கடாயில் போட்டு 4 நிமிடம் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

• இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.

• பெரிய பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், வறுத்த ரவை, தயிர், தாளித்த பொருட்கள், தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து இதனை 30 நிமிடம் ஊற வைக்கவும்.

• பிறகு இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

• சுவையான சத்தான ஓட்ஸ் இட்லி ரெடி

அவல் வெஜ் உப்புமா

அவல் வெஜ் உப்புமாதேவையான பொருட்கள்......

சிகப்பு அவல் - 1 கப்
வெங்காயம் - 1
கேரட் - 1
பீன்ஸ் - 10
பட்டாணி - அரை கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ப. மிளகாய் - 2
சீரகம் - அரை ஸ்பூன்

செய்முறை.....

• வெங்காயம், கொத்தமல்லி, ப. மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• கேரட், பட்டாணி, பீன்ஸை கழுவி பொடியாக நறுக்கி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

• அவலை தண்ணீர் ஊற்றி அலசி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

• வெங்காயம் சிறிது வதங்கியவுடன் வேக வைத்த காய்கறிகளை போட்டு வதக்கவும்.

• அடுத்து அவலை போட்டு கிளறி தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

• அவலை போட்டவுடன் ரெம்பா நேரம் கிளற கூடாது

• கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

• இந்த அவல் வெஜ் உப்புமா மிகவும் சத்தானதும், சுவையானதுமாகும்.

• இந்தத அவல் வெஜ் உப்புமா சாப்பிட்டால் ரொம்ப நேரம் பசி எடுக்காது.

Friday, May 2, 2014

அதிசய பலன்கள் நிறைந்த அருகம்புல்

அருகம்புல்
அருகம்புல் அதிசயமான மருத்துவ குணங்களைக்கொண்டது. அதன் தாவரவியல் பெயர்: சினோடன் டாக்டிலோன். அருகு, பதம், தூர்வை போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. மனிதனின் பிணி நீக்கும் மூலக்கூறுகள் அதில் அதிகம் இருந்தாலும், அருகம்புல் காணும் இடமெல்லாம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

எல்லாவிதமான மண்ணிலும் வளரும் இந்த அருகு சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. சில நேரங்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் விடும். ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த இடத்தில் நீர் பட்டால், உடனே செழித்து வளரத் தொடங்கி விடும்.

இந்த புல் உள்ள நிலம் மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்தில் இருந்தும் காக்கப்படுகிறது. அதனால், நெல் சாகுபடி செய்யும் போது அருகம் புல்லால் வரப்பு அமைக்கப்படுகிறது. மங்கள நிகழ்ச்சிகளில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அரு கம்புல் சொருகி வைக்கப்படுகிறது. சாணத்தில் சாதாரணமாக 2 நாட்களில் புழுக்கள் உருவாகி விடும்.



ஆனால் புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. இந்த அதிசயத்தை யாரும் உற்றுக்கவனிப்பதில்லை. புல் வகைகளின் தலைவர் என்று அருகுவை சொல்லலாம். அதனால்தான் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் சொல்வார்கள்.

'அருகுவே! புல் வகைகளில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆவேன்..’ என்று முடிசூடும் போது மன்னர்கள் கூறுவது அந்த காலத்து வழக்கம். கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லை போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

அது மூட நம்பிக்கை அல்ல, கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை நீக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள். ‘அருகை பருகினால் ஆரோக்கியம் கூடும்' என்கிறது சித்த மருத்துவம். இதை 'விஷ்ணு மூலிகை' என்றும் சொல்கிறார்கள்.

பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை 'குரு மருந்து' என்றும் அழைக்கிறார்கள். அருகம்புல்லை நீரில் அலசி சுத்தப்படுத்தி தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. அருந்தினால் நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படும்.

அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களை போலவே மிகவும் நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை கட்டுப்படும். புற்று நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.

இதன் அருமையை நம்மை விட வெளிநாட்டினர் தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில் அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும் தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம்.

இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்கு செல்லும்போது, பாலில் அருகம்புல்லை கலந்து புகட்டுவார்கள். பால் அரிசி வைத்தல் என்ற பெயரில் இந்த சம்பிரதாயம் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானத்தையும் அருகம்புல்லில் தயாரிக்கலாம்.

தளிர் அருகம்புல்லை கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக்காய்ச்சி, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு உட்கொண்டு வந்தால் எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறி விடும்.

குழந்தைகளுக்கு அவசியமான முட்டை

முட்டை
சத்துள்ள உணவுப் பட்டியலில் முட்டைக்கு முக்கிய இடம் உண்டு. வளரும் குழந்தைகளுக்கு சக்தி தரும் உணவாகவும், சத்து நிறைந்த உணவாகவும் முட்டை விளங்குகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்... 

நாம் முட்டை என்று பொதுவாக சொல்வதும், அதிகமாக சாப்பிடுவதும் கோழி முட்டையைத்தான். அதிக புரதச்சத்து வழங்கும் உணவாகவும், அத்தியாவசிய வைட்டமின்கள், தாது உப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் நிறைந்த உணவாகவும் முட்டை விளங்குகிறது.

100 கிராம் முட்டைத் திரவத்தில் 75 கிராம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் 155 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. முட்டையில் கொழுப்புச் சத்து கணிசமாக உள்ளது. முட்டை 100 கிராம் முட்டையில் 10.6 கிராம் கொழுப்பு உள்ளது. இதனால் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் 424 மில்லி கிராம் காணப்படுகிறது.

ஏற்கனவே உடல் பருமனாக இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி சாப்பிட்டால் அதிகமான கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்கலாம்.  புரதமும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்தது முட்டை. 12.6 கிராம் புரதமும், 1.12 கிராம் கார்போஹைட்ரேட்டும் 100 கிராம் முட்டைத் திரவத்தில் உடலுக்கு கிடைக்கிறது.

மஞ்சள் கரு வைட்டமின்களின் இருப்பிடமாக விளங்குகிறது. வைட்டமின் ஏ, டி, ஈ சத்துக்கள் இதில் நிரம்பி உள்ளது. முட்டையில் கோலைன் எனும் சத்துப்பொருள் உள்ளது. இது மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை தூண்டும் முக்கியப் பொருளாகும். முட்டையில் தினசரி உடலில் சேர்க்க வேண்டிய கோலைன் அளவில் பாதி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வளரும் குழந்தைகளுக்கு அவசியம் முட்டை வழங்கலாம். இதேபோல ஒமேகா-3 எனும் கொழுப்பு அமிலமும் உள்ளது. இதுவும் மூளையின் செயல்பாட்டிற்கு அவசியமான கொழுப்பு அமிலமாகும். தினசரி உடலில் சேர்க்க வேண்டிய வைட்டமின்-ஏ அளவில் 19 சதவீதம் முட்டையில் கிடைக்கிறது.

அதாவது 149 மைக்ரோ கிராம் அளவு காணப்படுகிறது. வைட்டமின்-டி 15 சதவீதம் உள்ளது. இது சருமத்தின் பொலிவை பாதுகாப்பதுடன், பல்வேறு உடற் செயல்களில் பங்கெடுக்கிறது. பி-குழும வைட்டமின்களான தயாமின்(பி-1), ரிபோபி ளேவின்(பி-2), பான்டொதெனிக் அமிலம்(பி-5), போலேட் (பி-9), வைட்டமின் பி-12 ஆகியவை குறிப்பிட்ட அளவில் உள்ளன.

100 கிராம் முட்டை திரவத்தில் 50 மில்லிகிராம் கால்சியம் காணப்படுகிறது. 1.2 மில்லிகிராம் இரும்புத்தாது காணப்படுகிறது. கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கு உதவுகிறது. இரும்புத்தாது ரத்த சிவப்பணு உற்பத்தியில் பங்கெடுக்கிறது.

இதேபோல மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கணிசமாக உள்ளன. பொட்டாசியம் இதயத்துடிப்பு மற்றும் ரத்தஅழுத்தத்தை சீராக பராமரிப்பதில் பங்கெடுக்கிறது. மற்ற தாதுக்களும் பல்வேறு உடற்செயல்களில் ஈடுபட்டு உடலை வளப்படுத்துகின்றன.

பல்வேறு கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் முட்டையில் காணப்படுகிறது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. 

வெந்தயக் கீரையில் அதிகமுள்ள இரும்புச்சத்து

வெந்தயக் கீரை
இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் வெந்தயக் கீரைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மருந்துப் பொருளாக மட்டுமில்லாமல் சமையல் பதார்த்தங்களிலும் வெந்தயக் கீரையின் பங்கு உண்டு. அதிலுள்ள சத்துக்களை பட்டியல் போடுவோமா...

* வெந்தயக் கீரைகள் ஈரபதமிக்க நிலங்களில் செழித்து வளரக் கூடியவை. இது பேப்பேசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியியல் பெயர் 'ட்ரிகோனலீலா பியோநம் கிரேசியம்'.

* வெந்தயக் கீரைகள் இரும்புச் சத்துப் பொருட்களை அதீத அளவில் கொண்டு உள்ளன. இரும்புச் சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை நோயான அனீமியா வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

* ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது.

* 'வைட்டமின்-கே' சத்துப் பொருட்கள் கணிசமான அளவில் நிறைந்துள்ளன. இவை கண்களின் பார்வைத் திறனை அதிகரிப்பதோடு,பார்வைக் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகின்றன.

* வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும்.

* நிட்டானிக் அமிலம் இதில் உள்ளது. இது தலைமுடி உதிர்தல், தலைமுடி வலுவின்மை போன்ற குறைபாடுகளை போக்கும் திறன் பெற்றது.

* உடலுக்கு கேடு விளைவிக்கும் கூடுதல் கொழுப்புப் பொருட்களை செரிக்க செய்யும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் கொழுப்பின் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது.

* பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு நன்மைகள் கிடைக்கச் செய்கிறது வெந்தயக்கீரை. குறிப்பாக கர்ப் பிணி பெண்களுக்கு தாய்ப்பாலை பெருக்கவும், பிரசவ கால நன்மைக்கும் இவை பெரிதும் உதவுகின்றன.

* பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துப் பொருட்கள் குறிப்பிட்ட அளவுகளில் இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

* வெந்தயக் கீரைகள் உணவு செரிமானத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. உட்கொள்ளும் உணவினை சீராக செரிக்க செய்யவும், குடலில் தங்கியுள்ள ஆக்சிஜன் பிரீரேடிக்கல் நச்சுகளை வெளியேற்றவும் இவை பயன்படுகின்றன.

* கீரையில் உள்ள புரதப்பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது.

அரசமரத்தின் மருத்துவ பயன்கள்

அரசமரம்
• அரசமரத்தின் இலை கொழுந்தை அரைத்து மோருடன் கரைந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

•  அரச இலை, மாவிலை, நாவல் இலை, அத்தி இலை இவற்றைச் சம பங்கு எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர பெண்களுக்க மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

•  அரச மரத்தின் பழுப்பு இலைகளை எரித்துத் தூளாக்கி, தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் தீப்புண், அதனால் ஏற்பட்ட தழும்புகள் குணமாகும்.

•  அரசம்பட்டையை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.

•  இதன் பட்டையை வறுத்துத் தீய்ந்த பின்னர் தூளாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசிவர ஆறாத புண், சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

•  இதன் பட்டையை இடித்துப் பொடியாக்கி 200 மில்லி லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தூளைப் போட்டு காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்துக் குடித்துவர இருமல் தணியும்.

•  அரசம்பட்டைத் தூளில் 10-15 கிராம் எடுத்துக் கொண்டு, அதைத் தண்ணீரில் கலந்து காய்ச்சிக் குடித்துவர சொறி, சிரங்குகள் குணமாகும்.

•  அரசமரக் குச்சியைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீரில் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதில் தேன் சேர்த்துக் குடிக்க பித்தம் தணியும். 

• கலப்பட குங்குமம் இடுவதால் நெற்றியில் தோல் நீல நிறமாக மாறுவதுடன் அந்த இடத்தில் அரிப்பும் ஏற்படும். இதற்கு அரச மரத்தின் பட்டையை நீரில் கரைத்து. பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் போட்டு வந்தால், பாதிப்பினால் ஏற்பட்ட நீல நிறம் மாறி, பழைய ஒரிஜனல் நிறம் கிடைக்கும்.

•  அரச மரத்தைக் குத்துவதால் வடியும் பாலைக் காலில் உள்ள பித்த வெடிப்புகள் மீது தொடர்ந்து தடவி வந்தால் அது விரைவில் குணமாகும்.