Pages

Friday, February 28, 2014

குளிர்கால நோய்களை தடுக்கும் வழிமுறைகள்



குளிர்கால நோய்
குளிர்காலம் ஆரம்பித்து விட்டது. எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கி விடலாம். ஆனால் மழையையும், குளிரையும் தாங்க முடியாது. குளிர்காலத்தில் தான் உடல் பலவீனமானவர்களுக்கு பாதிப்புகள் வரும் என்கிறார் அமிர்தாஞ்சன் கேர் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரேம் ஆனந்த்.  

தும்மல், அலர்ஜி, ஆஸ்துமா, தோல் பாதிப்பு, ரத்த அழுத்தம், காலில் வெடிப்பு, காய்ச்சல், கை-கால் மூட்டு வலி, முழங்கால் வலி என அனைத்து விதமான உடல் கோளாறுகளும் எட்டிப் பார்க்கும். குறிப்பாக ஆஸ்துமாவுக்கு குளிர்காலம் தான் ரொம்பவும் பிடித்தமானது. சுவாசக் குழாய் சுருங்கி மூச்சு விட முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும்.  

அவர்கள் கோடை காலத்தைப் போல் நினைத்து வெளியில் சென்று வர முடியாது. டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன் எச்சரிக்கையாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போல் இதய பாதிப்பு உள்ளவர்களையும் குளிர்காலம் சிரமப்படுத்தும். காரணம் குளிர் காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்கி விடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.  

குளிர்காலத்தில், பகல் நேரத்தைவிட, இரவு நேரம் அதிகம். அதனால், வெப்பம் குறைவது இயல்பானது. வெப்பம் குறைந்தால், உடலில் சுரப்பிகள் வேலை செய்வது மாறுபடும். ரத்தத்தில் முக்கியமாக உள்ள கார்டிசால் சுரப்பது குறையும். வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால், குளிர்காலத்தில், இதய நோயாளியின் ரத்தக்குழாய் சுருங்கியும், இறுக்கமாகவும் இருக்கும்.  

இதனால், இதயத்துக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதிகாலை ரத்த அழுத்தம் ஆபத்தானது. குளிர் காலத்தில், அதிகாலையில் வாக்கிங் போவது, வெளியே போவது போன்றவற்றால் ஒரு பக்கம் ஆக்சிஜனும் குறைந்து, ரத்த அழுத்தமும் மாறுபடும். அதிகாலையில் எழுந்து வேலை செய்வது, இதய பாதிப்புள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள கார்டிசால் அளவு குறையும்.  

அந்த காலகட்டத்தில், வைரஸ் தொற்று நோய் மூலம் இதய பாதிப்புள்ளவர்களுக்கு பிரச்சினை வரலாம். இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக, டாக்கடர் சொல்படி நடப்பதே நல்லது. அறுபது வயதை கடந்தவர்கள் குளிர் காலத்தில்அதிகாலையில் எழுவது, வேலை செய்வது, வெளியில் வாக்கிங் போவது போன்றவற்றை `மூட்டை' கட்டி வைக்க வேண்டும்.  

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், குளிர் காலத்தில் குளிரில் எந்த வேலையையும் வைத்துக் கொள்ளக்கூடாது. அதிகாலையில் எழுந்து போகும் பழக்கத்தை குளிர்காலம் போகும் வரை மாற்றிக் கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் குளிரை தடுக்க முடியாது. ஆனால், இதய பாதிப்பை தவிர்க்க சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால், இதய பாதிப்பில் இருந்து தப்பி விடலாம்.  

நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். குளிர் காலத்திலும் அதிகாலையில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெயில் வந்தவுடன் செய்யலாம். காய்கறிகள், பழங்கள், அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். குளிர்பானங்களை விட, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர் பருவம் வரை, டாக்டரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.  

அப்போது தான் ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கும். பெரும்பாலானவர் களுக்கு தூங்கி எழுந்ததும் கை-கால்களில் மூட்டு வலி இருக்கும். அவர்கள் எழுந்ததும் சுடு நீரில் கை, கால்களை வைக்க வேண்டும். படுக்கை அறையின் வெப்ப நிலை சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குளிரை தாங்கும், போர்வை, கம்பளி ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.  

தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை உடலில் தேய்க்கலாம். குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால் ஏற்படும் ஈரப்பதம் மற்றும் எண்ணெய் பசை இழப்பை ஈடு செய்ய உதவும்.  

மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும். வெதுவெதுப்பான சுடுநீரை பயன்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் பெருபாலா னவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினை உதடு வெடிப்பு, இதற்கு, பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம்.  

பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண் ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும். குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழைசாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம்.  

இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் ஆயில் தடவலாம். இதனால், கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும். எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் தேய்த்து குறைந்த நேரம் ஊற விட வேண்டும். தலையில், அதிக நேரம், எண்ணெயை ஊறவிட்டால் உடல் நலன் பாதிக்கப்படலாம்.  

குளிர்கால நோய்தோல் வறட்சி உள்ளவர் கள் சோப்பிற்கு மாறாக கடலை மாவை உபயோகிக்கலாம். கால்களில் வெடிப்பு ஏற்பட்டால் யூரியா மற்றும் ஆண்டிபயாட்டிக் கலந்த கிரீம்களை உபயோகிக்கலாம். காலுறைகளை தவறாது இரவு முழுவதும் அணிந்தால் கால்வெடிப்பு குறையும். பகலிலும் செருப்பிற்கு பதிலாக பூட்ஸ் அணிவது நல்ல பலனளிக்கும்.  

உணவில் தயிர், முட்டை, மீன், நல்லெண்ணெய் போன்றவைகளை அதிகமாக சாப்பிடலாம். தேவைப்படுவோருக்கு ஏ வைட்டமின் கலந்த மாத்திரைகளும் கொடுக்க வேண்டும். குளிர் சிறுவர்கள், குழந்தைகளையும் பாதிக்கும். அவர்களுக்கு ஐஸ்கிரீம், மற்றும் குளிர்பானங்களை வாங்கிக் கொடுக்க கூடாது. குழந்தைகள் தூங்கும் போது கைகள், கால்களில் ஷாக்ஸ் அணிந்து கொள்ளச் செயலாம்.  

குளிர் தாங்கும் ஆடைகளையும், படுக்கைகளையும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சிறுவர்கள் தும்மல், சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுவதை தடுக்கலாம். குளிர்காலத்தில் நம் உடல் நலனை பாதுகாக்க பொதுவான சில வழிமுறைகள்:-  

வெளியில் போகும் போது காதுகளை ஸ்கார்ப் அல்லது காது மூடிகளை கொண்டு நன்றாக மூடவும். இதனால் காது துளைகள் வெது வெதுப் பாகவும் உலர்ந்தும் இருக்கும். தொற்று ஏற்பட வழியில்லை. சிறுவர்கள் காது தொற்று நோயினால் பாதிக்கப்படுவதை தடுக்க பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும்.  

குளிர் காலத்தில் வயதான வர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஜலதோஷம் பிடிக்கும். உங்கள் உடம்பை ஸ்வெட்டர் போட்டு குளிர் தாக்காமல் பார்த்துக் கொள்ளவும். சளியை வெளியேற்றுவதற்காக அடிக்கடி மூக்கை வேகமாக சிந்த வேண்டாம். இப்படி செய்வது காதுகளை கடுமையாக பாதிக்கும்.  

சளித்தொற்று காதுகளை தாக்கும். குளிர் காலத்தில் நீச்சல் வேண்டாம். குளிர் காலம் என்றில்லாமல் தினமுமே குளிக்கும் போது காதுகளில் நீர் போகாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம். மருத்துவரின் வழிகாட்டு தல் இல்லாமல் காதுகளுக்குள் நீர், அல்லது எண்ணெய் விடுவது போன்றவற்றைத் தவிர்க்கவும்.  

சூடான பதார்த்தங்களையே சாப்பிடவும். குளிர்ந்த நீரோ, பொருட்களோ வேண்டாம். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் காது தொற்று அதிகரிக்கும். அதிகாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் காது, மூக்கு போன்றவற்றில் குளிர்காற்று உட்புகாமல் இருக்க தகுந்த கவசங்கள் அணிந்து கொண்டு செல்லலாம். இவற்றையெல்லாம் கடைப்பிடித்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.

மாரடைப்பை குணப்படுத்தும் வெந்தயக் கீரை

வெந்தயக் கீரை
வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும். வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது.

குழந்தைகளின் அழுகைக்கான காரணங்கள்

குழந்தைகளின் அழுகை
குழந்தைகளின் அழுகைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம், அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இங்கே காணலாம்.. பசியால்தான் பெரும்பாலும் குழந்தைகள் அழும். பசியால் அழுதால் எளிதாக கண்டு பிடித்துவிடலாம்.

குழந்தைகள் பால்குடிக்கும்போது என்ன அறிகுறிகளை காட்டுமோ அதை எல்லாம் அந்த அழுகையோடு வெளிப்படுத்தும். கைவிரலை சப்புதல், பால்குடிப்பதுபோல் உதடுகளை சுளித்தல், உதடுகளை அம்மாவின் உடல் மீது சேர்த்தல், அம்மாவின் முகத்தை பார்த்தல் போன்றவைகள் எல்லாம் பசியால் ஏற்படும் அழுகையின்போது வெளிப்படும்.

‘அம்மா நான் நனைத்துவிட்டேன்’

பசி தீர்ந்து, குழந்தை நன்றாக தூங்கும்போது திடீரென்று அழுதால் சிறுநீர் கழித்து நனைந்திருக்கிறது என்று அர்த்தம். அதுதான் காரணம் என்றால், நனைந்த துணியை மாற்றியதும் குழந்தை நிம்மதியாக தூங்கத் தொடங்கிவிடும்.

‘அம்மா எனக்கு தூக்கம் வருதே’

வீட்டில் அதிக சத்தமோ, திடீர் சீதோஷ்ணநிலை மாற்றமே ஏற்பட்டால் அது குழந்தைகளின் தூக்கத்தை பாதிக்கும். அப்போதும் அழத் தொடங்கிவிடும். குளிப்பாட்டி, பசியை   தீர்த்ததும் எல்லா குழந்தைகளும் தூக்கத்திற்கு தயாராகிவிடும். அப்போது தூக்கத்திற்கு   ஏற்ற சூழ்நிலை அமையாவிட்டால் குழந்தைகள் அழுதுவிடும். அந்த குழந்தையின் அருகில் இருந்து மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தூங்க முடியாமல் குழந்தை தவிக்கும்.

‘அம்மா என்னை கொஞ்சம் எடுத்து கொஞ்சு’

சில நேரங்களில் குழந்தைகள் அம்மா தன்னை தூக்கி கொஞ்சவேண்டும் என்பதற்காகவும் அழும். அப்போது அம்மா எடுத்து, நெஞ்சோடு சேர்த்து, கொஞ்சி சிறிது நேரம் பேசினால் அழுகையை நிறுத்திவிடும். அம்மாவின் பாதுகாப்பும், அரவணைப்பும், வருடலும் குழந்தைகளுக்கு எப்போதும் தேவைப்படுகிறது. அது கிடைக்காதபோது அழுகையைத் தொடங்கிவிடும்.

‘அம்மா எனக்கு வாயு தொந்தரவு’

குழந்தைகளை அதிகமாக அழவைப்பது, அதன் வாயு தொந்தரவு. பால் குடித்த சிறிது நேரத்திலே இந்த தொந்தரவு ஏற்பட்டு குழந்தைகள் அழும். பிறந்த 3, 4 மாதங்களில் வாயு தொந்தரவு அதிகம் ஏற்படும். அதனால் பால் புகட்டியதும் சிறிது நேரம் தோளில் போட்டு தட்டிக்கொடுத்தால் குழந்தை ஏப்பம் விடும். அப்போது வாயு வெளியேறிவிடும்.

பால் புகட்டியதும் குழந்தையை படுக்கவைக்காமல் இருந்தால், இந்த அழுகை ஏற்படாது. குளிர் அல்லது திடீர் உஷ்ணத்தை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதாலும் அழும். குளிப்பாட்டிவிட்டு உடனே தலையை துவட்டி, உடலை துடைக்காவிட்டாலும், நனைந்த நாப்கினை மாற்ற தாமதமானாலும் குளிரால் குழந்தைகள் அழும்.

குழந்தைகளை குளிப்பாட்டி முடிந்ததும் உடனே உடலை துடைத்துவிடவேண்டும். குளிர்ந்த நீரிலும், சுடுநீரிலும் குழந்தைகளை குளிப்பாட்டக்கூடாது. குளிப்பாட்டும் நீரில்   டெட்டால் போன்ற எதையும் கலக்கவும்கூடாது. பேபி சோப், பேபி லோஷன் போன்றவற்றை மட்டும் பயன்படுத்தவேண்டும்.

'அம்மா எனக்கு பல் முளைக்கப்போகிறது’

பல் முளைக்கும்போது சில குழந்தைகள் வலியால் அழும். அந்த அழுகை நீடித்தால் குழந்தையை டாக்டரிடம் காண்பிப்பதே நல்லது. 4 முதல் 7 மாதத்திற்குள் முதல் பல் முளைக்கும். அப்போது ஈறை தடவிப் பார்த்தால் உணர முடியும்.

அறிமுகமற்றவர்கள் தூக்கும்போதும், ஆடை தொந்தரவாக அமையும்போதும், பால் குடிப்பதும்- தூங்குவதுமாக பொழுதை போக்கி போரடித்தாலும் குழந்தைகள் அழும். காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய முடியாதபோது அழும் குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய் காண்பிப்பதே சரியான வழி.

Thursday, February 27, 2014

மார்பகத்தில் கட்டி இருக்கிறதா என நீங்களே பரிசோதிக்கலாம்

மார்பகத்தில் கட்டி
பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி போன்று ஏதாவது தென்பட்டால் அதிர்ச்சி தான். ஏனெனில், மார்பகங்களில் திண்ணமாக ஏதாவது தென் பட்டாலே அது கேன்சர் தான் என்பது போல், பத்திரிகைகளில் செய்தி வெளியாகி விடுவது தான் காரணம். ஆனால், எவ்வளவு அறிவுறுத்தினாலும், மார்பகத்தில் திண்ணமாக இருப்பது, தானாகவே சரியாகி விடும் என்றும், பல பெண்கள் கருதுகின்றனர். அறியாமை, பயம் ஆகிய காரணங்களால், தகுந்த மருத்துவரிடம் காண்பிக்க, பெண்கள் தயங்குகின்றனர்.

மார்பகப் புற்றுநோய், இந்திய பெண்களிடையே சர்வ சாதாரணமாக காணப்படுகிறது. கிராமப்புறங்களில், ஒரு லட்சம் பெண்களில் 8 பேருக்கும், நகர்புறங்களில் 27 பேருக்கும், மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த புள்ளி விவரம் தவறாகவும் இருக்கக் கூடும். எனினும், கட்டி தென்படும்போது, அதை மருத்துவரிடம் காண்பிக்கும் பழக்கம், கிராம பெண்களிடையே மிகவும் குறைவு.

ஒரு சென்டி மீட்டர் விட்ட கட்டி இருந்தாலே, கைகளுக்கு தென்படும். மார்பக சதையில் மாற்றம் தென்படும் போது, இதை உணரலாம். மற்ற சதைகளை விட, இது உறுதியாகவும், கடினமாகவும் காணப்படும். வலி இருக்கும். பின்னாளில், அந்த கட்டி மீது உள்ள தோல் நிறமிழக்கும்; தடிமனாகும். காம்பு உள்ளிழுக்கப்படும். காம்பிலிருந்து நீரோ, ரத்தமோ கசியும்.

மார்பகத்தில் கட்டி தோன்றினால், உடனடியாக டாக்டரிடம் காண்பிப்பது நல்லது. எந்த கட்டியுமே கேன்சர் தான் என கருதக் கூடாது. மாதவிடாய் காலங்களில், சிலருக்கு மார்பில் கட்டி தோன்றலாம். மாதவிடாய் துவங்கும் முன் பெரிதாக தோன்றும்; மாதவிடாய் நின்றதும் காணாமல் போகும். எனினும், எந்த கட்டியையும் அலட்சியப்படுத்தாமல், மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

மார்பகப் புற்றுநோய், பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் வரும்; எந்த வயதிலும் வரும். "வயதானவர்களின் நோய் இது' என்று கருதி, அலட்சியப்படுத்த வேண்டாம்.

மார்பில் கட்டி இருந்தால், "அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்' செய்து, எந்த வகையான கட்டி என டாக்டர்கள் கண்டறிவர். எந்த இடத்தில் கட்டியுள்ளது என்பதை, இந்த "ஸ்கேனர்' கண்டுபிடிக்கும். மெல்லிய ஊசியின் மூலம் கட்டியிலுள்ள செல்கள் மற்றும் திரவங்கள் எடுக்கப்பட்டு, "பயாப்சி' பரிசோதனை செய்யப்படும். கேன்சர் நோய் இருந்தால், தெரிந்து விடும். சாதாரண கட்டியாக இருந்தாலும், இப்பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்.

சிலருக்கு இது, வெறும் நீர் கட்டியாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால், மெல்லிய ஊசி மூலம், அந்த திரவத்தை வெளியில் எடுத்ததும், கட்டி காணாமல் போய்விடும்.

கட்டி, திண்ணமாக இருந்தால், "மேமோகிராம்' செய்ய வேண்டும்.

சிலருக்கு மட்டும் மார்பக புற்றுநோய் ஏன் வருகிறது? இதற்கு சரியான காரணம் தெரியவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் பரம்பரை காரணங்கள், இந்நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. அவை:

* பன்னிரெண்டு வயதுக்குள்ளாகவே பருவம் எய்தி, 50 வயதுக்கும் மேலாக மாதவிடாய் ஏற்படுவது.

* ரத்த சம்பந்த உறவினர்களில் யாருக்காவது, மார்பகம் அல்லது கருப்பை வாய் புற்றுநோய் இருப்பது. இந்த வகையில், பி.ஆர்.ஏ.சி., 1, 2 மற்றும் 3 ஆகிய மரபணுக்கள் புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைகின்றன என்று, கண்டறியப்பட்டுள்ளது.

* கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவது.

* பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, கருத்தடை மாத்திரை சாப்பிடுவது அல்லது, மெனோபாஸ் பிரச்னைக் காக, "ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட்' சிகிச்சையை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்து கொள்வது.

* அதிக வயதுக்கு பின் மகப்பேறு அடைவது, அதை தொடர்ந்து ஓராண்டுக்கு தாய்ப்பால் கொடுக்காமை.

* அதிக உடல் பருமன்.

* மது அருந்துவது, அளவுக்கு அதிகமாக டீ, காபி, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவது, புகை பிடிப்பது.

சுய பரிசோதனை மூலம், துவக்கநிலை மார்பகப் புற்றுநோயை கண்டறியலாம். இந்த பரிசோதனை மிக எளிதானது. இந்த பரிசோதனையில், ஐந்து நிலைகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும், ஒரே நாளில் இந்த பரிசோதனை மேற்கொண்டால், ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகும், குழப்பங்களை தவிர்க்கலாம்.

நிலை 1: கண்ணாடி முன் நின்று, கைகளை இடுப்பில் வைத்து கொண்டு, மார்பகங்களை உற்று நோக்குங்கள். மார்பகத்தின் அளவு, தோற்றம், நிறம் ஆகியவற்றில் ஏதாவது மாற்றம் தென்படுகிறதா என்பதை கண்காணியுங்கள். வீக்கம் இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள். மார்பகத்தில் குழி விழுதல், தோல் திடீரென சுருங்குதல், தோலில் திடீர் தடிமன் ஏற்படுதல், சிவப்பாகி போதல், உலர்ந்து போதல், வீக்கம், காயம் ஏற்பட்டது போன்ற தழும்பு, காம்பு இடம் பெயர்தல் ஆகியவற்றை கண்காணிப்பது.

நிலை 2: கைகளை மேலே உயர்த்தி, மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்படுகிறதா என்று கண்காணித்தல்.

நிலை 3: காம்பை அழுத்தி பார்த்து, அதில் கசிவு ஏதும் ஏற்படுகிறதா என்பதை கண்காணித்தல்.

நிலை 4: இடதுபுறமாக படுத்து, வலது கையால், இடது மார்பகத்தின் அனைத்து பகுதியையும் மெலிதாக அழுத்தி, கட்டி ஏதும் தென்படுகிறதா, வலி இருக்கிறதா என்பதை பரிசோதிக்கவும். அதேபோல், வலது பக்கமாக படுத்து, இடது கையால், வலது மார்பகத்தை பரிசோதித்தல்.

நிலை 5: நிலை 4ல் குறிப்பிடப்பட்ட பரிசோதனையை, நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் செய்து பார்த்தல்.

இந்த பரிசோதனைகளை அடிக்கடி செய்து பார்க்க வேண்டும்.

நாற்பத்தைந்து வயதானதுமே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, "மேமோகிராம்' செய்வது அவசியம். சிறிய கட்டிக்கு கூட, தகுந்த மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு மணி நேரம் ஓட்டப் பயிற்சி, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை மேற்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். கேன்சர் வராமல் பாதுகாக்க முடியும்.

துவக்க நிலை கேன்சரை சிகிச்சை மூலம், சரி செய்து விடலாம். முற்றிலும் குணமடைந்து, நீண்ட நாள் உயிர் வாழலாம்.

நொறுக்குத் தீனிக்கு பதில் பழத்துண்டுகள்


* நன்கு பழுத்த பழங்களில் மனித உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான எல்லாவித சத்துப் பொருட்களும் உள்ளன.

* தினமும் தேவையான அளவு பழங்களை சாப்பிட்டால் புற்றுநோய், இருதய நோய் மற்றும் இதர நோய்கள் வரும் அபாயம் மிகவும் குறைகிறது.

* பசிக்கும்போது நொறுக்குத் தீனியாக சிப்ஸ், எண்ணெய் பலகாரங்களுக்குப் பதில் பழத்துண்டுகளை உண்ண வேண்டும்.

* நீரிழிவு நோய் இருந்தால் அதிகம் மாவுச் சத்துள்ள வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழத்தை குறைவாக சாப்பிட வேண்டும்.

* அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான பல என்ஸைம்கள் உள்ளன. தினமும் 400 கிராம் பழத்தை மூன்று நான்கு முறையாக சாப்பிடலாம்.

* அளவுக்கு அதிகமான உடல் பருமனை குறைக்க விரும்புவோர் வாரம் 2 நாட்கள் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும்.

Monday, February 24, 2014

வெப்பம் தணிக்கும் வெண்டை

வெயில் காலத்தில் நீர்ச்சத்துள்ள பழங்களையும், பானங்களையும் தேடி உட்கொள்ளும் நாம் நீர்ச்சத்துள்ள, மருத்துவ குணங்களை உள்ளடக்கிய சில காய்களை சாதாரணமாக எண்ணி தவிர்த்துவிடுகிறோம். இதனால் எளிய மருத்துவ குணமுள்ள காய்களினாலேயே பல மருத்துவ பலன்களை பெறமுடியால் போய்விடுகிறது.

கோடையில் உடல் மற்றும் சுற்றுப் புற வெப்பம் அதிகரிப்பதால் இயல்பாகவே கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், தோல் மற்றும் உதடு வறட்சி உண்டாகிறது. மேலும் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் நீர் மற்றும் உப்புச் சத்துக்கள் குறைந்து ஒருவித சோர்வும், உடல் முழுவதும் சூடாக இருப்பதுபோன்ற உணர்வும் ஏற்படுகிறது. 

மியூசிலேஜ் எனப்படும் ஈரப்பதம் நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் உட் கொள்வதால் நமது உடலின் நீர்ச்சத்து விரயமாவது தடுக்கப்படுகிறது. செல்களிலுள்ள திரவமும், செல்லைச் சுற்றியுள்ள திரவமும் சமச்சீரான நிலையை அடைவதால் உடலின் வெப்பம் தணிந்து, எப்பொழுதும் குளுமையாக உணர்கிறோம்.

உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்தி வைக்கும் பலகாய்கள் ருசியாக இல்லாததால் அவற்றை தவிர்த்துவிடுகிறோம். ஆனால், நீர்ச்சத்து நிரம்பிய காய்களில் நார்ச்சத்தும் அதிகம் காணப்படுவது அறிவியல் பூர்வமான உண்மை.

இதனால் இருவிதமான பலன்கள் கிடைக்கின்றன. முதலாவதாக உடலின் திரவ சமநிலை நிலைப்படுத்தப் படுவதுடன் நார்ச்சத்துள்ள உணவுகளினால், குடல் மற்றும் மலவாய்ப் பகுதிகள் சுத்தமடைகின்றன. மலச்சிக்கல் மற்றும் மலக்கட்டு நீங்குகின்றன. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். 

வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. அவற்றிலுள்ள நார்ச்சத்து இறுகலான மலத்தை இளக்கி மலம் கழித்தலை எளிதாக்குகிறது.

ஏபிலோமோசஸ் எஸ்குலன்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த பிஞ்சு வெண்டைக்காயே, மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. இவற்றில் அடங்கியுள்ள குர்சிட்டின், ஹைப்பரின், புரோ ஆன்தோசயனிடின், டிகுளோக்கோரனிக், கேலக்டோரோனிக் அமிலம் ஆகியன செல்களின் திரவ இழப்பை கட்டுப்படுத்தி, குடல் மற்றும் சதைப்பகுதிகளில் ஈரப்பதத்தை பாதுகாக்கின்றன. 

முற்றாத பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவர புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிராம்பாசிடிவ் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்காய்க்கு உண்டுஎன நிரூபிக்கப்பட்டுள்ளது. 

முற்றிய வெண்டைக்காயை அதிகம் உட் கொண்டால் மலம் மிகவும் இளக்கமாகி, கழிச்சல் உண்டாகும். ஆகவே நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வெண்டைக்காயில் முற்றாத பிஞ்சுக்காயே சமையலுக்கும் மருந்துக்கும் உகந்ததாகும். 

பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி, நுனி மற்றும் காம்பை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நாட்டுச்சர்க்கரை 2 பங்கு சேர்த்து, பிசைந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து தினமும் 6 முறை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியடையும். 

சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், தோல் வறட்சி, மலவாய் எரிச்சல் நீங்கும்.
கோடைக்காலத்தில் அக்குள், மலவாய்பகுதி, முதுகு, தொடை போன்றவற்றில் ஏற்படும் கட்டிகளை கரைக்க பிஞ்சு வெண்டைக்காயை நன்கு அரைத்து, லேசாக வதக்கி, கட்டி உள்ள இடங்களில் தடவிவர கட்டிகள் உடையும். 

பெண்களுக்கு அதிகம் உடல் உஷ்ணத்தினால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை, 2 முதல் 5 கிராமளவு சாப்பிட்டுவர வேண்டும். 

பிஞ்சு வெண்டைக்காயிலுள்ள வேதிச்சத்துக்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கட்டிகளை தடுக்கும் தன்மை உடையதால் அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொண்டுவர மூளை செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, ஞாபகசக்தியை நீடிக்கச் செய்யலாம்.

Friday, February 21, 2014

"சம்மரை' சமாளிப்பது எப்படி? - சில டிப்ஸ்

ஒவ்வொரு ஆண்டும், வெயில் 41 டிகிரி செல்ஷியஸ் அடிக்கும்போது, நம்மால் தாங்க முடிவதில்லை. வெயில் தாக்கத்தை தாங்கி கொள்ள, மின்விசிறி, ஏர்கண்டிஷனர், ஏர்கூலர் ஆகியவற்றின் உதவியை நாடுகிறோம். ஆனால், இவற்றை இயக்க மின்சாரம் தேவை. அது இல்லாமல் போகும்போது, எந்த கருவியும் நமக்கு பயன் தராது.

நம் உடல் இயங்க, 37 டிகிரி செல்ஷியஸ் அல்லது 98.6 டிகிரி பாரன்ஹீட் சூடு தேவை. நம் சருமத்திலுள்ள 40 லட்சம் வியர்வைத் துளைகளுடன், சீரான ரத்த ஓட்டத்துடன் நம் உடல் இயங்குகிறது. சுற்றுச்சூழலின் வெப்பம் அதிகரித்தால், நம் உடல் சூடாகிறது. இதனால், உடலில் ரத்தத்தின் திரவத்தன்மை அதிகரித்து, வெளிசூட்டுடன் உடல் வெப்பம் சமன் செய்யப்படுகிறது. வெளிச்சூடு அதிகமானால், உடலின் இந்த மாற்று ஏற்பாடு, வேலை செய்யாமல் போகும்.
பருத்தி ஆடை தவிர்த்து மற்றவை அணியும்போது, உடல் சூடு வெளியேற வாய்ப்பில்லாமல் போகிறது. இதனால் அதிகம் வியர்க்கிறது. வியர்வை ஆவியாகும்போது, உடல் சூடு தணிகிறது. இயற்கையாவே நம் உடலில் அமைந்துள்ள ஏர் கண்டிஷனர் இது. அதிக வெப்ப நாட்களில், இந்த மாற்று ஏற்பாடு சரியாக வேலை செய்யவில்லையெனில், பிரச்னை ஏற்படும். காற்றிலுள்ள ஈரப்பதம், உடலின், "ஏர் கண்டிஷனர்' வேலை செய்யாமல் தடுக்கும். அடிக்கடி நீர் குடித்தால், வியர்வை வெளியேறுவதில் சிக்கல் ஏற்படாது.

காற்றூட்டப்பட்ட பானங்கள், ஆல்கஹால், டீ, காபி பருகினால், உடல் சூடு குறையும் என்று கணக்கிடக் கூடாது. இளநீர், சிறிதளவு உப்பு சேர்த்த நீர் மோர், எலுமிச்சை ஜூஸ் ஆகியவை குடித்தால், வியர்வை வெளியேறுவது சீராக இருக்கும்.

நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்களுக்கும் வியர்வை அதிகம் வெளியேறாது. இந்த இருபிரிவினரும், அதிக வெப்பத்தால் எளிதில் பாதிப்படைவர். தசை அதிகமுள்ள கால்பகுதி முதலில் பாதிக்கப்படும். கவனிக்காமல் விட்டால், அதிக உடல் சோர்வு, மயக்கம், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் ஏற்படும்.

உடல் சூடு 40 டிகிரி செல்ஷியசுக்கு அதிகரித்தால், கடும் விளைவுகள் ஏற்படும். தோலில் சூடு ஏறி, வறண்டு விடும். இதனால் மூளை பாதிப்பு, குழப்பம், கோமா ஆகியவை ஏற்பட்டு, சிலருக்கு மரணம் சம்பவிக்கலாம்.

உடல் சூடு அதிகமாகி விட்டால்

* இருட்டான, "ஜில்' அறையில் அவர்களை அமர வைக்க வேண்டும்.
* அவர்களின் கடின ஆடைகளை களைந்து, மெல்லிய பருத்தி ஆடை அணிவிக்க வேண்டும்.
* மின் விசிறி, "ஏசி' யையும், அவர்கள் மீது நன்கு காற்றுபடும்படி இயக்கலாம்.
* அடர்த்தியான துணியை தண்ணீரில் நனைத்து, அவர்களை துடைத்து விட வேண்டும்.
* ஒரு லிட்டர் நீரில், 5 கிராம் உப்பு கலந்து அவர்கள் குடிக்க கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களை கவனமாக கையாண்டால், அவர்கள் உயிரை காப்பாற்றலாம். வெயிலில் உடலில் அரிப்பும், அதை சொறியும்போது சிவப்புக் கோடுகளும் ஏற்பட்டு, உடல் முழுதும் பாவற்காயாகி விடும். வியர்வை நாளங்களில், அழுக்கு அடையும்போது, அரிப்பு ஏற்படுகிறது. "டிவி'க்களில், அரிப்பை தவிர்க்க, "கூல்' டால்கம் பவுடர் குறித்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அந்த பவுடரை பூசிக் கொண்டால், நீங்கள் இமயமலையிலிருப்பது போல் உணர்வீர்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இவை விற்பனையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் யுக்தியே தவிர, உண்மையில், உங்கள் உடலுக்கு இந்த பவுடர்கள் கேடு விளைவிப்பவை.

சிங்க் ஸ்டிரேட் மற்றும் சிலிகேட் பவுடர்களை கொண்டு, தயாரிக்கப்படும் இந்த வகை டால்கம் பவுடர்கள், உங்கள் உடல் அரிப்பை இன்னும் அதிகரித்து விடும். இந்த பவுடர்கள் உடல் வியர்வையுடன் சேரும்போது, வெள்ளை நிறத்தில் நீர் வழிந்து, உங்கள் வியர்வை நாளங்கள் மேலும் அடைத்து போகும்.
தொடை மற்றும் பிறப்பு உறுப்புகளில் இந்த பவுடர்களை போட்டால், அவை கருப்பை பாதை, கருப்பை, பெலோப்பியன் குழாய் வழியே, சினைப்பையை அடைந்து விடும். அங்கு புற்றுநோயை உருவாக்கும்.

மிக நுண்ணிய பவுடராக தயாரிக்கப்படும் இவை, காற்றில் பறந்து நம் மூக்கில் நுழைந்து, நுரையீரலின் மிக நுண்ணிய பகுதியை அடைகின்றன. இதனால் நிமோனியா, நுரையீரல் வீக்கம், காற்று பாதை வீக்கம் ஆகியவை ஏற்படக் காரணமாக அமைகிறது. மிகச் சிறிய குழந்தைகளுக்கு, இதுவே நச்சாக அமைந்து, குழந்தையின் உயிரையே பறிக்கும். 

உடல் சூடு, அரிப்பை தவிர்க்க மிகச் சிறந்த வழி, தினமும் இரண்டு முறை குளிப்பது தான். சோப்பை உடலில் நேரடியாக தேய்க்காமல், உடல் தேய்ப்பானில் தோய்த்துத் தேய்த்து கொள்வது நலம்.

தெருவோரங்களில் விற்கப்படும், துண்டாக்கப்பட்ட தர்பூசணி, எலுமிச்சை ஜூஸ், லஸ்ஸி, மோர் மற்ற ஜூஸ் வகைகள், சுகாதாரமற்றவையாக உள்ளன. இவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் நீர், ஐஸ் கட்டிகள் சுத்தமானவையாக இருப்பதில்லை; பாக்டீரியாக்கள் நிறைந்து காணப்படுகின்றன. தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக உள்ளதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...

* டைபாய்டு நோய் தடுப்பு ஊசி, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை போட்டு கொள்ள வேண்டும்.

* "ஹெப்பாடைட்டிஸ் ஏ' நோயை தடுக்க, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு ஊசிகள் என இரண்டு முறை போட்டு கொள்ள வேண்டும்.

* காலராவை தவிர்க்க, வாய்வழி மருந்துகள் வந்துவிட்டன.

வெளியில் எங்கு சென்றாலும், வீட்டிலிருந்து குடிநீர் எடுத்து செல்வதே நல்லது. காற்றூட்டப்பட்ட பானங்கள், பார்க்க கவர்ச்சியாகவும், பாதுகாப்பானதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டாலும், அவை அனைத்திலும் காபின் பொருளோ, ரசாயனமோ அதிகம் கலக்கப்பட்டிருக்கும். தாகத்தை தணிப்பதற்காக நீங்கள் இதை குடித்தாலும், உண்மையில் இவை, உங்கள் தாகத்தை அதிகரிக்க செய்யும்.

வெயில் நேரங்களில், வெளியில் செல்வதை தவிர்க்கலாம். வெளியில் செல்ல தீர்மானித்தால், "சன்ஸ்கிரீன் லோஷன்' போட்டு கொள்ளலாம். 

குடை எடுத்து செல்வதையும் வழக்கமாக்கி கொள்ளுங்கள்.