Pages

Monday, February 24, 2014

வெப்பம் தணிக்கும் வெண்டை

வெயில் காலத்தில் நீர்ச்சத்துள்ள பழங்களையும், பானங்களையும் தேடி உட்கொள்ளும் நாம் நீர்ச்சத்துள்ள, மருத்துவ குணங்களை உள்ளடக்கிய சில காய்களை சாதாரணமாக எண்ணி தவிர்த்துவிடுகிறோம். இதனால் எளிய மருத்துவ குணமுள்ள காய்களினாலேயே பல மருத்துவ பலன்களை பெறமுடியால் போய்விடுகிறது.

கோடையில் உடல் மற்றும் சுற்றுப் புற வெப்பம் அதிகரிப்பதால் இயல்பாகவே கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், தோல் மற்றும் உதடு வறட்சி உண்டாகிறது. மேலும் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் நீர் மற்றும் உப்புச் சத்துக்கள் குறைந்து ஒருவித சோர்வும், உடல் முழுவதும் சூடாக இருப்பதுபோன்ற உணர்வும் ஏற்படுகிறது. 

மியூசிலேஜ் எனப்படும் ஈரப்பதம் நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் உட் கொள்வதால் நமது உடலின் நீர்ச்சத்து விரயமாவது தடுக்கப்படுகிறது. செல்களிலுள்ள திரவமும், செல்லைச் சுற்றியுள்ள திரவமும் சமச்சீரான நிலையை அடைவதால் உடலின் வெப்பம் தணிந்து, எப்பொழுதும் குளுமையாக உணர்கிறோம்.

உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்தி வைக்கும் பலகாய்கள் ருசியாக இல்லாததால் அவற்றை தவிர்த்துவிடுகிறோம். ஆனால், நீர்ச்சத்து நிரம்பிய காய்களில் நார்ச்சத்தும் அதிகம் காணப்படுவது அறிவியல் பூர்வமான உண்மை.

இதனால் இருவிதமான பலன்கள் கிடைக்கின்றன. முதலாவதாக உடலின் திரவ சமநிலை நிலைப்படுத்தப் படுவதுடன் நார்ச்சத்துள்ள உணவுகளினால், குடல் மற்றும் மலவாய்ப் பகுதிகள் சுத்தமடைகின்றன. மலச்சிக்கல் மற்றும் மலக்கட்டு நீங்குகின்றன. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். 

வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. அவற்றிலுள்ள நார்ச்சத்து இறுகலான மலத்தை இளக்கி மலம் கழித்தலை எளிதாக்குகிறது.

ஏபிலோமோசஸ் எஸ்குலன்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த பிஞ்சு வெண்டைக்காயே, மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. இவற்றில் அடங்கியுள்ள குர்சிட்டின், ஹைப்பரின், புரோ ஆன்தோசயனிடின், டிகுளோக்கோரனிக், கேலக்டோரோனிக் அமிலம் ஆகியன செல்களின் திரவ இழப்பை கட்டுப்படுத்தி, குடல் மற்றும் சதைப்பகுதிகளில் ஈரப்பதத்தை பாதுகாக்கின்றன. 

முற்றாத பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவர புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிராம்பாசிடிவ் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்காய்க்கு உண்டுஎன நிரூபிக்கப்பட்டுள்ளது. 

முற்றிய வெண்டைக்காயை அதிகம் உட் கொண்டால் மலம் மிகவும் இளக்கமாகி, கழிச்சல் உண்டாகும். ஆகவே நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வெண்டைக்காயில் முற்றாத பிஞ்சுக்காயே சமையலுக்கும் மருந்துக்கும் உகந்ததாகும். 

பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி, நுனி மற்றும் காம்பை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நாட்டுச்சர்க்கரை 2 பங்கு சேர்த்து, பிசைந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து தினமும் 6 முறை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியடையும். 

சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், தோல் வறட்சி, மலவாய் எரிச்சல் நீங்கும்.
கோடைக்காலத்தில் அக்குள், மலவாய்பகுதி, முதுகு, தொடை போன்றவற்றில் ஏற்படும் கட்டிகளை கரைக்க பிஞ்சு வெண்டைக்காயை நன்கு அரைத்து, லேசாக வதக்கி, கட்டி உள்ள இடங்களில் தடவிவர கட்டிகள் உடையும். 

பெண்களுக்கு அதிகம் உடல் உஷ்ணத்தினால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை, 2 முதல் 5 கிராமளவு சாப்பிட்டுவர வேண்டும். 

பிஞ்சு வெண்டைக்காயிலுள்ள வேதிச்சத்துக்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கட்டிகளை தடுக்கும் தன்மை உடையதால் அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொண்டுவர மூளை செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, ஞாபகசக்தியை நீடிக்கச் செய்யலாம்.

No comments: