Pages

Wednesday, December 11, 2013

கடைச்சரக்குகளின் மருத்துவ குணங்கள்!



சுக்கு:-


 
தமிழ்நாட்டில் மஞ்சளுக்கு அடுத்து சுக்கு இரண்டாவது மருந்தெனக் கூறலாம். 'சுக்குக்கு மிஞ்சின மருந்தில்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வமில்லை' என்று ஒரு பழமொழியே உண்டு. பசிமந்தம், நெஞ்செரிச்சல், புளியேப்பம், வாய்வு வலி, வயுற்று உப்புசம், ஒற்றை தலைவலி, வீக்கங்கள் முதலிய நோய்களுக்கு சுக்கு பலவிதங்களில் பயன்படுகிறது. பச்சை சுக்கைப் பொடித்து சம அளவு பனைவெல்லம் கலந்து சாப்பிட நீர் பேதி கட்டுப்பாடும். சுட்ட சூக்கைப் பொடித்‌து நெய் சிறிதளவு சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வயுற்று உப்புசம்- மலக்கட்டு நீங்கும்.

திப்பிலி:-
இவற்றில் அரிசி திப்பிலி, யானை திப்பிலி என இருவகைப்படும். மேகக் கட்டிகள் கோழை போன்றவற்றையும் வயிற்று உப்புசத்தையும் நீக்கக் கூடியது,

கருஞ்சீரகம்:-

 
சூதகக் கட்டை நிக்கும் தன்மை கொண்டது. வயதுக்கு வராத பெண்களுக்கு கருஞ்சீரகம், மாவிலைப்பட்டை, சிறிதளவு எடுத்து இரண்டையும் நன்றாக அரைத்து சிறிது வெல்லம் சேர்த்து சிறு உருண்டை மூன்று வேளை கொடுக்க, பலன் காணலாம். தலையில் ஏற்படும் சொறி, சிரங்குகள், மூக்கிலிருந்து கட்டி கட்டியாக சளி வருதல், கண் சம்பந்தமான நோய்களை விரட்டக் கூடியது கருஞ்சீரகம்.

வசம்பு:-

இது குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த சஞ்சீவி எனலாம். பேதியானால் வசம்புவைக் கருக்கி தேனில் குழைத்து சிறிது கொடுக்கலாம். குழந்தைகளின் சூட்டிற்கு கருகிய வசம்பை வெந்நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி தடவலாம். அதிக அளவு வசம்பை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. வசம்பை குழந்தையுள்ளவர்கள் கைவசம் வாங்கி வைத்திருப்பது நல்லது.

அதிமதுரம்:-

 

முத்தோஷங்களால் ஏற்படும் கபக் கட்டுகளை நீக்கும். கண் நோய், ஆசனவலி, ஜீரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும். நாவறட்சி, சிறுநீர் எரிச்சல், மதிமந்தம் போன்றவற்றை நீக்கும் குணம் கொண்டது. அதிமதுரத்தை சிறிதளவு நாவில் அடக்கி கொண்டால் பற்கள் உறுதி பெரும். நாவறட்சி தீரும். சூட்டை தணிக்கும்.

கிராம்பு:-

 
இது பல்வலியைப் போக்கக் கூடியது சிறந்த மருந்தாகும். கிராம்பையும், உப்பையும் பொடித்‌து பல்வலி, இருவலியுள்ள இடங்களில் வைத்து அழுத்த உடனடியாகக் குணம் காணலாம். கபக்கட்டு, குக்கிருமலைப் போக்கும் சக்தி கொண்டது. உணவுக்கு சுவை கூட்டும். ஜீரண சக்தி உண்டாகும்.

கடுக்காய்:-

 
இதில் கடுக்காயின் பிரிவு ஏழு என்று வைத்திய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. சூரத்துக் கடுக்காய் என்னும் சிவப்புக் கடுக்காய் சிறந்த பலன் அளிக்கக் கூடியது. ஈளை, இருமல், கபக் கட்டுகளை நீக்கக் கூடியது. குடலை சுத்தி செய்து மலக்கட்டைப் போக்கும். இரணங்களை ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. படைகளுக்கு கடுக்காயைத் தாய்ப்பாலில் உரசிப் போட்டு வர படை விரைவில் நீங்கும்.

ஜாதிக்காய்:-

 
மூச்சடைப்பு, தலைவலி, அதிக தாது வெளிப்படுதல் போன்றவற்றைக் குணப்படுத்தும். இருமல், உடல் சூட்டைத் தணிக்கும்.

அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறதா?

*முதலில் உணவில் காரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

*கறிமணப் பொருட்கள் கலந்து உணவைத் தவிருங்கள்.

*அளவிற்கு அதிகமாக உணவு உட்கொள்ளாதீர்கள்.

*எந்தெந்த உணவு அயிட்டங்கள் எடுத்தல் உங்களுக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறதோ அதை கவனித்து வந்து தவிர்த்துவிடுங்கள்.

*புரதம் மிகுந்த உணவு எடுங்கள்.

கொழுப்புச் சத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

*படுக்கைக்குப் போவதற்கு இரண்டு மூன்று மணி நேரத்திற்கு முன்பே ஆகாரத்தை எடுத்துக் கொண்டு விடுங்கள்.

*மதியச் சாப்பாட்டுக்குப்பின் சற்று கண்ணயர நினைத்தால் தூங்குங்கள்.

*இரவு தூக்கத்தின்போது கட்டிலின் தலைப்பாகம் உயரமாக இருக்கட்டும். கட்டிலின் தலைப்பகுதிக் கால்களுக்கு மரக்கட்டையையோ செங்கல்லையோ அண்டை கொடுத்து உயரமாக்கிக் கொள்ளுங்கள்.

-இந்த நெஞ்சு எரிச்சல் தடுப்பு முறைகளைப் பின்பற்றி வாருங்கள் நிவாரணம் கிடைக்கும்.