Pages

Showing posts with label லிச்சி. Show all posts
Showing posts with label லிச்சி. Show all posts

Monday, November 7, 2016

சிவப்பு அணுக்களை உருவாக்கும் லிச்சி!


பழங்கள் இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கும் கொடையாகும். உணவில் பழங்களையும், காய்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டால், நோய் நம்மை விட்டு தூர போய்விடும். அந்த அளவுக்கு அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியும், சத்தும் நிறைந்துள்ளன. குறிப்பாக,  லிச்சிப்பழத்தில் உடலுக்கு நன்மை தரும் பல முக்கிய சத்துக்கள் அடங்கி உள்ளன.

லிச்சிப்பழம் பற்றி தென் மாநில மக்களுக்கு அதிகம் தெரியாது. சீனாவை பூர்வீகமாக கொண்ட இப்பழம், வடமாநிலங்களில் அதிகம் கிடைக்கிறது. லிச்சிப்பழம் சிவப்பு நிறத்தில், கெட்டியான தோலுடன் இருக்கும். அதனுள்ளே வெள்ளை நிறத்தில், பழத்தின் சுளை முட்டை போல் இருக்கும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும் அப்பழத்தில், பல ஊட்டச்சத்துகள் உள்ளன.

லிச்சி, அதிக கலோரி கொண்ட பழமாகும். இதில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலை கட்டுப்படுத்தி, குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள், 0.5 கிராமும், எலும்பு, பல் வலிமை பெற உதவும் கால்சியம், 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ், 35 மி.கி., இரும்புச்சத்து, 0.7 மி.கி., உள்ளன.

உடலில் முக்கிய உறுப்புகளாக செயல்படும், இதயத்தையும், ஈரலையும் ஆரோக்கியமாக வைக்க லிச்சிப்பழம் உதவும். லிச்சிப்பழத்தை தினமும் உண்டு வந்தால், இதயம் நல்ல ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு, ஈரலுக்கு உரம் ஊட்டும்; தாகத்தை தணிக்கும். இதில் வைட்டமின் சி, மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்களை கொண்டுள்ளதால், நோயை எதிர்க்கக் கூடிய ஆற்றலை பெற்றுள்ளது.

இது இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி, உடலுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் இது சிறந்த பழம். தினமும் ஒரு லிச்சிப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த உற்பத்தி அதிகமாகும்.  ஏனெனில், சிவப்பணுக்கள் உருவாவதற்கு தேவையான மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் போலேட் போன்ற அனைத்தையும் வழங்குகிறது.

வைட்டமின் சி கொண்டுள்ளதால் இரும்புச் சத்துகளை உறிஞ்சும் திறன் கொண்டு செயல்படுகிறது. தினம் ஒரு லிச்சிப்பழத்தை சாப்பிட்டு உடலை பாதுகாத்துக் கொள்வோம்...வாருங்கள்!