Pages

Showing posts with label நொறுங்கத் தின்றால் ஆரோக்கியம். Show all posts
Showing posts with label நொறுங்கத் தின்றால் ஆரோக்கியம். Show all posts

Monday, February 10, 2014

நொறுங்கத் தின்றால் ஆரோக்கியம்

ஆரோக்கியம்
நாம் ஆரோக்கியமாக வாழ, நம் உடலில் வாத, பித்த, கப நாடிகள் முறையாக இயங்க வேண்டும். இதற்கு, இனிப்பு, காரம், புளிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அக்காலத்தில் சிறு வயதில் மாங்காய், புளியங்காயும், உப்பு தொட்டு களாக்காய், வெள்ளரிக்காயும், சாப்பிடுவோம். பழைய சாதத்தை உறுகாய் தொட்டு சாப்பிடுவோம். இதில் உப்பு, புளி, காரம் ஆகிய மூன்றும் உள்ளன. பாகற்காய், சுண்டைக்காயில் கசப்பும், வாழைத்தண்டு, வாழைப்பூ, நெல்லிக்காய், பனங்கருப்பட்டி ஆகியவற்றில் துவர்ப்பு சுவை உள்ளது. அதிகம் சுவைக்காத கசப்பும், துவர்ப்பும், போதிய அளவு கிடைக்காத போது, தோல் வியாதி வர வாய்ப்பு உள்ளது.

பேசிக் கொண்டே சாப்பிட்டால், 'பேசாம வாயை மூடிகிட்டு சாப்பிடுங்கடா' என்று பெற்றோர் கூறுவது வழக்கம். படித்துக் கொண்டோ, 'டிவி' பார்த்துக் கொண்டோ, பேசிக் கொண்டோ சாப்பிடக் கூடாது. வாயில் போட்ட உணவை, உதடுகளை மூடிக் கொண்டு, பற்களால் நன்கு அரைக்க வேண்டும். அப்போது உமிழ் நீருடன் கலந்து பாதி செரிமானம் ஆகும். அவை உணவுக் குழாய், வழியாக இரைப்பைக்குச் சென்று, ஹைட்ரோ குளோரிக் அமிலம், பித்த நீர், கணைய நீர் உள்ளிட்ட பல வேதிப் பொருட்களுடன், கலந்து கூலாகிறது. சிறு குடலில் தேங்கி நிற்கும் கூழ் உறிஞ்சப்பட்டு, மண்ணீரல் வழியாக கல்லீரலுக்கு ரத்தமாக செல்கிறது. "நொறுங்கத் தின்றால் 100 ஆண்டுகள்' என முன்னோர்கள் கூறுவது வழக்கம். அதனால், எந்தப் பொருளை சாப்பிட்டாலும், நொறுங்க மென்று கூழ் செய்து விழுங்க வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், கீரைகளில் 'மெக்னீசியம் சத்து' அதிகம் உள்ளது. இதை சாப்பிடும்போது, உடலில் சோர்வு ஏற்பட வாய்ப்பு இல்லை. முளைத்த பயறு வகைகள், கொள்ளு, கேரட், வாழைப்பூ, தண்டு, வெள்ளரி ஆகிய உணவு வகைகள், உடலுக்கு சுறுசுறுப்பையும், ஆற்றலையும் தரும். நொறுக்குத் தீனிகளையும், எண்ணையில் தயாரித்த பொருட்களையும், பாக்கெட் மற்றும் பாட்டிலில் அடைத்ததையும், புளி சேர்த்த உணவு வகைகளையும், மீண்டும் சூடு செய்த உணவு வகைகளையும், டீ, காபி ஆகியவற்றையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உடலின் உள்ளே இருக்கும் உறுப்புகளுக்கும், முகத்தில் உள்ள உறுப்புகளுக்கும், ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளது. மண்ணீரல் உதடுகளுடனும், கல்லீரல் கண்களுடனும், நுரையீரல் மூக்குடனும், சிறுநீரகம் காதுகளுடனும் தொடர்புடையவை. மண்ணீரல் மாவுப் பொருட்களையும், கல்லீரல் புரதம் மற்றும் கொழுப்புப் பொருட்களையும் ஜீரணிக்கின்றன. மண்ணீரல் ரத்தத்தை உற்பத்தி செய்கிறது. கல்லீரல் அதை சுத்தம் செய்து இதயத்திற்கு அனுப்புகிறது. எனவே, நாம் சாப்பிடுவதற்கு முன், கை, கால், காது, முகம் ஆகியவற்றை நன்கு கழுவ வேண்டும். வெளியே செல்லும் நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். நோய், தொற்றுக்கு காரணமான இடங்களை நம்மை அறியாமலே தொடுகிறோம். சாப்பிடுவதற்கு முன் கைகளையும், முகத்தையும் சுத்தமாக கழுவுவதன் வாயிலாக, நோய்த் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.