Pages

Wednesday, April 27, 2016

வாசனைத் திரவியங்கள்


 
வாசனைத் திரவியங்கள்
சில வாசனைத் திரவியங்கள் அதிக வாசனை
கொண்டவையாக உள்ளன. பலருக்கு அந்த வாசனை பிடிக்காமல் தலை சுற்றல், தலைவலி போன்றவை இருக்கும். அப்படியான வாசனைத் திரவியங்களை தவிர்த்து எல்லோரும் விரும்பத்தக்க வாசனை திரவியங்களை உபயோகித்தல் நல்லது.

பழங்காலத்தில் இருந்தே உலகமெங்கும் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தபட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதன்முதலில் வாசனைத் திரவியங்களை பயன்படுத்திய பெருமை எகிப்தையே சேரும். ஒரு காலத்தில் அரசர்கள், பெரும் மதிப்புக்கு உரியவர்கள் மட்டுமே வாசனைத் திரவியங்களை உபயோகித்து வந்தனர்.

பொது வைபவங்கள், விழாக்களுக்கு செல்லும்போது மட்டுந்தான் வாசனைத் திரவியங்களை பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை எதுவும் கிடையாது. இன்னார்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை. சிலர் எளிதில் தூங்குவதற்காக இரவில் தூங்குவதற்கு முன் மென்மையான வாசனை வீசும் திரவியங்களை பூசிக் கொள்வர்.

பொதுவாக வாசனைத் திரவியங்கள் ஒருவித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன. இதனால் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் சந்தோஷமாக வெளியில் சுற்ற முடிகிறது. பலர் இருக்கக்கூடிய இடத்தில் உங்களை தனித்தன்மை வாய்ந்தவராகக் காட்டுகிறது. தன்னம்பிக்கையுடன் செயல்பட முடிகிறது.

வெயில் காலத்தில் லேசான வாசனைத் திரவியங்களையும், குளிர்காலங்களில் அதிக வாசனை தரக்கூடிய திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும். இயற்கையான நறுமணப் பொருட்களில் மட்டுமின்றி, கெமிக்கல்ஸ், ஆயில், ஆல்கஹால் போன்றவற்றில் இருந்தும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

உடலில் பூசிக்கொள்பவை, உடையில் பூசிக்கொள்பவை என இரண்டு விதமான வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு எது உகந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பது நல்லது. உடலில் பூசும் வகையிலான வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும்போது அலர்ஜியை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்களாக பார்த்து பயன்படுத்த வேண்டும்.

மல்லிகையில் இருந்து தயாரிக்கும் வாசனை திரவியம் மல்லிகையின் மணம் கொண்டதாக அமையும். விதவிதமான வாசனைகளில், நிறங்களில் வாசனைத் திரவியங்கள் கிடைக்கின்றன. ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனி வாசனைத் திரவியங்கள் உள்ளன. அதேபோல் பாரம்பரிய முறை, நவீன முறை என இரண்டு விதமான முறைகளில் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

கூடுதலாக இளவயது ஆண், பெண் இருவருமே தங்களது எதிர்பாலினர்களைக் கவருவதற்காக வாசனைத் திரவியங்களை பயன்படுத்துகின்றனர். வாசனைத் திரவியங்களை வாங்கும் முன், மணிக்கட்டின் மீது சிறிதளவு தெளித்துப் பாருங்கள். சிறிது நேரம் கழித்து அலர்ஜி எதுவும் ஏற்படவில்லையென்றால், அதை வாங்கலாம்.

அலர்ஜி ஏற்படும் பட்சத்தில் வேறொன்றை பரிசோதிப்பது நல்லது. வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும் போது தலை முடிகளில் படாதவாறு பயன்படுத்த வேண்டும். சிறிதளவு தெளிக்க வேண்டுமே தவிர அதிகம் தெளிக்கக் கூடாது. வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நாடுகளில் பிரபலமானது, பிரான்ஸ் தான்.

No comments: