சமுதாயத்தில் பாதுகாப்பு குறைந்து வருவதால், இன்றைய சூழலில் பெண்கள் தற்காப்புக்கலை கற்பது அவசியம். இன்றைய காலக்கட்டத்தில் சமுதாயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் எப்போதும் பாதுகாப்பு உணர்வுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம்.
பள்ளி, கல்லூரிக்கு செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். சமூக விரோதிகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டாலோ, கேலி, கிண்டல் செய்தாலோ பெண்கள் கண்டும் காணாமல் தலை குனிந்தவாறு செல்வார்கள். பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்தப்பட்டால் எதிரிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
இதற்கு ஒரு சில உத்திகளை கையாண்டாலே போதுமானது. எதிரிகளை எளிதில் வீழ்த்தி விட முடியும். சிறந்த பயிற்சி மூலமாக அந்த உத்திகளை அறிந்து கொள்ள முடியும். எதிரிகளால் தாக்குதலுக்கு உட்படும்போது பெண்கள் விடாமுயற்சியுடன், எதிர்த்து போராட வேண்டும். மனித உடலில் மென்மையான பகுதிகள் மற்றும் தாக்குதல் ஏற்பட்டு நிலைக்குலைந்து போகும் பாகங்கள் உள்ளன.
எதிரிகளிடம் போராடும்போது, அந்த இடங்களில்தான் தாக்குதல் நடத்த வேண்டும். பயந்து அடிப்பணிந்து விடக்கூடாது. எதிர் தாக்குதல் நடத்தினால்தான், எதிரிகளுக்கும் பயம் ஏற்படும். இந்தியாவில் மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருகின்றன. தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது.
இருந்தாலும் சட்டம் மற்றும் ஒழுங்கு நன்றாக இருப்பதால், தொடர் சம்பவங்கள், கொடூர சம்பவங்கள் நடைபெறுவது இல்லை. இருந்தபோதிலும் தற்காப்புக்கலை கற்றுக்கொள்வது மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.