உலகெங்கும் புற்றுநோய் அபாயம் அதிகரித்து வருவதாகவும், சரியான பழக்கவழக்கங்கள் மூலம் மக்கள் தங்களைக்
காத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் 1.40 கோடி
மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், ஆனால் இந்த எண்ணிக்கை 2035-ம் ஆண்டுவாக்கில் 2.40 கோடியாக
உயரும் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது. மனிதகுலத்தைப் பாதிக்கும் புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட பாதி
அளவை வருமுன் தடுக்கமுடியும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், உடல் பருமன், மது அருந்துதல் மற்றும்
புகை பிடித்தல் ஆகியவற்றை சமாளிக்க புதிய முயற்சிகள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
புகை பிடித்தல்,
கிருமித்தொற்று, மது அருந்துதல், உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சி செய்யாதிருத்தல், சூரிய ஒளி மற்றும் மருத்துவ
ஸ்கேன்களால் ஏற்படும் கதிரியக்கப் பாதிப்பு, காற்று மாசு, மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள், தாய்மைப் பேறு
தாமதமாவது, தாய்ப்பால் தராமலிருப்பது ஆகியவை தடுக்கப்படக் கூடிய புற்றுநோய்க் காரணிகள் என்று 2014-ம்
ஆண்டுக்கான புற்றுநோய் அறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக பெண்கள் மார்பகப்
புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறும் அந்நிறுவனம், ஆனால் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில்,
பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகம் காணப்படுவதாகத் தெரிவிக்கிறது. அரசாங்கங்களும், மக்களும்
ஒன்றிணைந்து செயல்பட்டால் புற்று நோய்க்கு பெருமளவில் தடை போட்டு விட முடியும் என்றும் உலக சுகாதார
நிறுவனம் கூறுகிறது.