பெண்ணை தாயாக்கும் கார்ப்பம் உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தாலும், உடல் ரீதியாக அந்த பெண்ணுக்கு பலவித சங்கடங்களையும் கொடுக்கிறது. ஆனால் இந்த கர்ப்ப காலத்திலும் சங்கடம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் காலமும் உண்டு.
ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை வெளியே சொன்னால் ஒழிய மூன்று மாதங்கள் வரை வயிற்றுப்பகுதியில் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. நான்காவது மாதத்தில்தான் வயிறு பெரிதாவது தெரியும். வயிற்றின் தசைகளும், தோலும் கருவின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடைகின்றன. ஒவ்வொரு மாதமும் இது அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
குழந்தை பிறந்த பின், தோல் மறுபடியும் சுருங்கத் தொடங்கும். வயிறு விரிந்து, சுருங்குவதால் குழந்தை பெற்ற பெண்களுக்கு அடி வயிற்றுப்பகுதியில் நரம்புகள் போல் கோடுகள் நிரந்தரமாக விழுவதுண்டு. கொஞ்சம் கவனமாக இருந்தால் இந்த வெள்ளை தழும்புகளை வரவிடாமல் தவிர்க்கலாம். கோகோ பட்டர், ஆலிவ் ஆயில் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அடி வயிறு முழுக்க தடவி, அரை மணி நேரத்திற்குப் பின் குளித்தால் வயிற்றில் அதுபோன்ற கோடுகள் விழாது.
அதே போல் சமையலுக்கு பயன்படும் மஞ்சள்தூளை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து தடவலாம். வயிற்றில் எண்ணெய் தடவும் இந்த முறை வயிறு விரிவடையத்தொடங்கும் நான்காவது மாதத்தில் இருந்தே ஆரம்பித்து விடுவது நல்ல பலனை தரும். வயிறு போன்றே இந்த காலக்கட்டத்தில் சில பெண்களுக்கு மார்பகம் கூட சராசரி அளவை விட பெரிதாகி பின்னர் சிறிதாகும். இதனால் மார்பக பகுதிகளிலும் கூட இந்த வெள்ளைக்கோடுகள் தென்படத் தொடங்கும்.
அதற்கும் இதே வழியைப் பின்பற்றலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண் உடல் ரீதியாக தொல்லை இன்றி சந்தோஷமாக இருக்கும் காலக்கட்டமும் இந்த நான்காவது மாதம்தான். சாப்பிட முடியாமல் தலைச்சுற்றி மயக்கம் வருவதெல்லாம் முதல் 3 மாதங்களோடு சரியாகிவிடும்.
நான்காவது மாதத்தில் இருந்து ஓரளவுக்கு நன்கு சாப்பிட முடியும். ஊட்டமான சாப்பாடு, குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் பூரிப்பு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் குறையாத தன்மை ஆக இந்த 3 காரணங்களும் ஒன்றாக சேர நான்காவது மாதத்தில் இருந்து 6-வது மாதம் இறுதி வரை பெண்களின் முகம் பளிச்சென்று பூரிப்போடு பிரகாசிக்கும்.