Pages

Showing posts with label பணம் சேமிப்பது எப்படி. Show all posts
Showing posts with label பணம் சேமிப்பது எப்படி. Show all posts

Tuesday, May 27, 2014

பணம் சேமிப்பது எப்படி?

காசு சேமிப்பது பலருக்கும் கடினமான காரியம். செலவைக் குறைப்பதுதான் சேமிப்பின் முதல் படி. வருவாயைப் பெருக்குவது இரண்டாம் படி.
செலவு செய்வது எளிது. நுகர்வு உடனடி மகிழ்ச்சி அளிப்பதால் செலவு நம்மை ஈர்க்கிறது. ஆக, செலவைக் கட்டுப்படுத்துவதுதான் சேமிப்பின் முதல் படி. ஒரு எளிய வழியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். 

அன்றாடம் வரவு -செலவு கணக்கு எழுதுவது. இதில் இரண்டு நன்மைகள் உண்டு. 

ஒன்று, நம் வீட்டில் உள்ள அனைவரும் இதில் ஈடுபடுவதால், குடும்பப் பொருளாதாரம் எல்லாருக்கும் தெரிய வரும். அதனால், அவரவரின் செலவுகள் ஒழுங்குபடுத்தப்படும். பொதுவாக குழந்தைகளுக்கு குடும்பப் பொருளாதார நிலை தெரிந்தால் அவர்களது பொருளாதார அறிவு வளரும். மாறும் சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவுகளை எடுக்க அவர்கள் தயாராவார்கள். 

இரண்டாவது, பல நேரங்களில் பயனற்ற செலவுகளை கண்டறிந்து நீக்க இது உதவும். 

உடல் எடையை குறைக்க என்ன செய்யவேண்டும் என்று என் நண்பர் ஒருவர் மருத்துவரிடம் கேட்டார். அவர் இரண்டு வழிகளைக் கூறினார். அவர் சொன்ன முதல் வழி.. ‘உனக்கு மிகவும் பிடித்த உணவுகளை சாப்பிடாதே’ என்பது. ஏனெனில், பெரும்பாலும் அதிக கொழுப்பு உள்ள சர்க்கரை, எண்ணெய், பால் சேர்ந்தவைதான் நமக்கு அதிகம் பிடிக்கின்றன. மருத்துவர் சொன்ன இரண்டாவது வழி.. ‘ஒரு நாளைக்கு எந்தெந்த வேளைகளில் என்னென்ன உணவு சாப்பிட்டாய் என்று எழுதிப்பார்’ என்பது. நண்பரும் அதேபோல சாப்பிடச் சாப்பிட எழுதிவைத்தார். 

தேவை இல்லாமல், பசி இல்லாமலேயே பல நேரங்களில் சாப்பிட்டிருக்கிறோம் என்பதும் ஆரோக்கிய மில்லாத உணவுகளை உட்கொள்கிறோம் என்பதும் எழுதினால்தான் தெரிகிறது. கொழுப்பைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்ல.. செலவைக் கட்டுப்படுத்துவதற்கும் இதே வழிதான். செலவு செய்யச் செய்ய எழுதி வைத்தால், ‘அடடா, வீண் செலவு நிறைய செய்கிறோமே’ என்பது தெரியவரும். அநாவசியச் செலவுகள் தானாக குறையும். 

எதிர்கால செலவுகளை திட்டமிடுவது சேமிப்பைத் தூண்டும் மற்றொரு வழி. உங்களது எதிர்கால செலவுகள் என்ன என்பதை எழுதிப் பாருங்கள். குழந்தைகளின் கல்வி, வீடு கட்டுதல், ஓய்வுகால செலவுக்கு பணம் என பல இருக்கின்றன. இவற்றைத் தோராயமாக அளவிட்டுப் பார்த்தால், வருங்கால செலவின் தொகை மிகப்பெரிதாக இருக்கும். மிரளாதீர்கள்! உங்கள் வருவா யைக் கூட்டவேண்டிய கட்டாயத்தை இது உணர்த்தும். வழி பிறக்கும்.
மீண்டும் யோசித்துப் பார்த்தால், சேமிப்பு என்பதே வருவாயைக் கூட்டும் இன்னொரு வழிதானே. 

சேமித்த பணத்தை சரியாக முதலீடு செய்யும்போது அதுவே உங்களுக்கு கூடுதல் வருவாயைப் பெற்றுத் தரும். 

சில எதிர்கால செலவுகளுக்கு காப்பீடு எடுப்பது அவசியம். மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடும் அவசியம். இதை சேமிப்பு + முதலீடு என்று பாருங் கள், புரியும். சேமிப்பு உங்கள் முதல் செலவாக இருக்கட்டும். இன்று பலருக்கு சம்பளம் வங்கி வழியாக கொடுக்கப்படுகிறது. உங்கள் வங்கி மேலாளரிடம் கூறி, சம்பளம் உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்தவுடன் அதில் ஒரு பகுதியை வேறு ஒரு சேமிப்புக் கணக்குக்கு மாற்றச் சொல்லுங்கள். இந்த கட்டாய சேமிப்பு, உங்கள் செலவைக் குறைக்க பெரிய அளவில் உதவும். 

நமது செலவும் சேமிப்பும் நமது கலாச்சாரத்துடன் தொடர்புடையது. சிக்கனமான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வது அவசியம். அதற்காக அத்தியாவசியமான செலவுகளை செய்யாமல் இருக்கமுடியாது.
பல நேரங்களில் எது அவசியமான செலவு என்பதில் குழப்பம் இருக்கும். 

புலன்களின் பேச்சைக் கேட்காமல், கற்பனையான சமுதாய நிலையைப் பார்க்காமல், அறிவு சொல்லும் தீர்ப்பே இதில் சரியாக இருக்கும். முன்பு பொருளில் முதலீடு செய்தோம். இன்று கல்வி, சுகாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும். அடிப்படைக் கல்வியும், சுகாதாரமான வாழ்க்கை முறையும் நல்ல மனிதனையும் ஆரோக்கியமான கலாச்சாரமான சமுதாயத்தையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.