யோக முத்ரா என்னும் ஆசனத்தை தினமும் செய்து வந்தால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் யோக முத்ராவை செய்து வருவது நல்லது. இதனால் முதுகுத்தண்டுவடத்தில் நல்ல வளைவு ஏற்படுவதோடு, முதுகு வலி வருவது தடுக்கப்படும்.
யோக முத்ரா நிலையானது ஒருவரின் இறுக்கமான தசையை தளர்த்தி, உடலை ரிலாக்ஸ் செய்யும். சிறுநீரக மண்டலம் எவ்வித தங்குதடையின்றியும் நடைபெற யோக முத்ரா உதவும். மேலும் சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும். யோக முத்ரா நிலையின் போது இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் நன்றாக அழுந்துவதால், நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். உடலின் தண்டுவடத்தில் இருந்து செல்லும் நரம்புகள் அனைத்தும் வலிமைப் பெறும்.
இதனால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும். யோக முத்ரா நிலையை தினமும் தவறாமல் செய்து வந்தால், நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, அதனால் ஏற்படும் வேறு பல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம். முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த யோகா முத்ரா ஆசனத்தை செய்து வந்தால், முதுகு வலி பறந்தோடிவிடும்.
இந்த யோகா நிலையின் போது வயிற்றுப் பகுதி அதிகம் அழுத்தப்படுவதால், வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை விரைவில் குறையும்.
யோக முத்ரா செய்யும் முறை :
முதலில் பத்மாசனம் போல் அமர்ந்து, பின் கைகளை பின்னே மடித்து, வலது கை, இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொடவும். இப்படி 30 வினாடிகள் இருக்கவும். பின் மூச்சை உள்ளே இழுத்தவாறு எழவும்.
இப்படி தினமும் 3 முதல் 45 முறை செய்து வர வேண்டும். இந்த ஆசனத்தில் ஆரம்ப காலத்தில், கைகளை பின்புறம் கட்டியவாறு குனித்து இந்த ஆசனத்தை செய்யலாம்.