Pages

Showing posts with label தாய்மையின் சிக்கல்கள். Show all posts
Showing posts with label தாய்மையின் சிக்கல்கள். Show all posts

Friday, April 11, 2014

தாய்மையின் சிக்கல்கள்

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது ஏன் நிகழ்கிறது என ஆராய்ந்தால் அதற்கும் காரணியாக சமூக ஏற்றத்தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வியும், தரப்படாத சமூக சமத்துவமுமே முன்னால் நிற்கிறது.

வளர்ந்த உலக நாடுகளை விட வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே இத்தகைய அவலங்கள் அதிக அளவு நிகழ்கின்றன என்பது ஒன்றே போதும் இந்தக் கருத்தை வலுவூட்ட. ஆப்பிரிக்கா போன்ற பின் தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ, கருத்தடையின் தேவைகள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை.

வறுமையின் உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்கப் பகுதி உட்பட 35 பின் தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து குழந்தைகள் என்னும் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது.
தாய்மை


உலகெங்கும் சுமார் ஐந்து கோடி பெண்கள் சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், கூடவே இரண்டரை கோடி  பெண்கள் கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர் எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய்வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. பிற்காலத்தில் தாய்மையடையும் வாய்ப்பைக் கூட இது கணிசமாகக் குறைத்து விடுகிறது.

வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரசு ஈடுபாடு இவை இல்லாவிட்டால் இத்தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் வலியூட்டும் உண்மையாகும்.