Pages

Showing posts with label குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித்தர வேண்டியவை. Show all posts
Showing posts with label குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித்தர வேண்டியவை. Show all posts

Thursday, April 23, 2015

குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை பற்றி பெற்றோர் சொல்லித்தர வேண்டியவை

குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை பற்றி பெற்றோர் சொல்லித்தர வேண்டியவை
குழந்தை பாலியல் கொடுமையைப் பற்றி உங்கள் குழந்தையோடு பேசுவது என்பது சிரமமாக இருக்கலாம். ஆனால் அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் அதைவிட மிகவும் மோசமானவை. அவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகலாம்.

யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் தவிக்கலாம். குடும்பப் பாதுகாப்பு விதிகளை உருவாக்குங்கள். உங்கள் குழந்தை எப்போதும் எங்கேயும் யார் யாருடன் தனியாக இருக்க அனுமதிப்பீர்கள் என்று பட்டியல் இடுங்கள். (நீங்கள் கூறும் பெயர்களுக்கு உங்கள் குழந்தையின் பதில் என்ன என்பதைக் கவனமாகக் கேளுங்கள்). தங்களைப் பற்றிய சொந்த விவரங்களை மற்றவர்களிடம் சொல்வதை ஊக்கப்படுத்தாதீர்கள்.

தொடுதல் குறித்த சுய பாதுகாப்பு விதிகள் :

தனிப்பட்ட உடல் உறுப்புகளைக் குறிக்கும் சரியான சொற்களைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தாருங்கள். சிறிய குழந்தை என்றால் பேசும் மொழியைப் பயன்படுத்தலாம். உறுப்புகளுக்கான பெயர்களை பயன்படுத்துங்கள். வேறு ஒரு பொருளைக் குறிக்கும் சொற்களைத் தனிப்பட்ட உடல் உறுப்புகளைக் குறிக்கப் பயன்படுத்தாதீர்கள். (பூ, பாம்பு போன்ற சொற்கள்).

குழந்தையின் உணர்வுகளை வலியுறுத்துங்கள் :

தனிப்பட்ட உணர்வுகளைக் கொண்டிருக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதையும் கற்றுக்கொடுங்கள் மரியாதையோடு, “வேண்டாம்”, “இல்லை”, முடியாது என்று அவர்களால் கூற முடியும். இரகசியங்களைப் பாதுகாப்பது சரியல்ல என்று கற்றுத் தாருங்கள், முக்கியமாகக் குடும்பப் பாதுகாப்பு விதிகளை மீறும் செயல்பாடுகளை இரகசியமாக பாதுகாத்தல் சரியில்லை என்று உணர்துங்கள்.

குழந்தையின் சுயமதிப்பை வளர்க்க உதவுங்கள். பாலியல் கொடுமையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் நடந்தவற்றை உங்களிடம் கூறவும் அவர்களுக்கு வலிமையான சுயமதிப்பு தேவை. பிரச்சினை ஏற்பட்டால் நம்பிக்கைக்கு உரிய நபர்களிடம் தொடர்பு கொள்ளக் கற்றுத் தாருங்கள். தங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் கூட வேதனை ஏற்படுத்தும் செயல்களைச் செய்யக்கூடும் என்பதைக் குழந்தைகள் தெரிந்துகொள்ளவேண்டும்.

மனிதர்களைப் பார்ப்பதைவிட குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் செயல்களையும் பார்ப்பதற்கு உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத்தாருங்கள். குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பணியில் உள்ளவர்களின் பின்னணியையும் அத்தாட்சியையும் கவனமாகப் பரிசீலனை செய்யவும். (ஆயா, டிரைவர், சமையல்காரர் போன்றவர்கள்).

உங்கள் குழந்தை பாலியல் கொடுமையை அனுபவித்து உள்ளதா என்பதை எப்படி அறிந்துகொள்வீர்கள்? குழந்தை உங்களிடம் அதை நேரடியாகக் கூறச்செய்வதே சிறந்த வழி. எனினும், கொடுமைக்கு ஆளானதைப் பற்றிக் கூறுவது கஷ்டமான செயல். உங்களிடம் நேரடியாகச் சொல்லமுடியாத பிரச்சினைகளை குழந்தைகள் தமது நடத்தை மூலம் வெளிப்படுத்துகிறார்கள். உடலியல் அறிகுறிகள் கொடுமை நிகழ்ந்ததை எடுத்துக்காட்டலாம்.

குழந்தை தொடுதல் பிரச்சினையைப் பெற்றோரான நீங்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

குழந்தைகள் தமது சொற்கள், மற்றும் நடத்தை மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். பெரியவர்களாகிய நாம் அவர்கள் பேசும்போது கவனமாகக் கேட்கவேண்டும், அவர்களுடைய குறிகளும் நடத்தையும் என்ன சொல்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பிரச்சினைகள் பற்றிக் குழந்தைகள் நம்மிடம் பேசவில்லை என்றால், நாம் அவர்கள் கூறுவதைக் கவனமாகக் கேட்காததோ அல்லது தேவையான போது உடன் இல்லாமல் போவதோ அதற்கு காரணமாக இருக்கக்கூடும். பெற்றோரான நீங்கள் உங்கள் குழந்தையின் பாதுகாப்பிலும் அவர்கள் கொடுமைக்கு ஆளானால் மீண்டு வருவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள்.

கொடுமைக்கு ஆளானதைப் பற்றிக் குழந்தை தெரிவிக்கும்போது பெற்றோருக்கு அதிர்ச்சி, அவநம்பிக்கை, மறுப்பு, தன்னைத் தானே குற்றம் சாட்டிக் கொள்வது, கோபம், குழப்பம் மற்றும் அல்லது சந்தேகம் ஏற்படுவது இயல்பு. 
நடந்ததைத் தெரிவிக்கும்போது நீங்கள் அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது உங்கள் குழந்தையின் மற்றும் உங்களின் நலனுக்கு மிகவும் முக்கியம்.